ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவின்றி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே நேற்று (18.4.2026) தொலைக்காட்சியில் உரையாற்றினார். இந்த மசோதாவை நிறைவேற்ற அரசு எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றதற்காக நாட்டின் தாய்மார்களிடமும் சகோதரிகளிடமும், மகள்களிடமும் அவர் மன்னிப்பு கோரினார்.
இரவு 8 மணிக்கு மேல் பிரதமர் தொலைக் காட்சியில் தோன்றிப் பேசுகிறார் என்றால் அதுதான் இந்திய மக்களுக்குப் பெரிய “நைட்மேர்” (Nightmare)!
அதில் இரண்டு பிரச்சினைகள்:
- அவர் கொண்டு வரப் போகும் பிரச்சினைகள் (பண மதிப்பிழப்பு போன்றவை)
- அவரது மிகை நடிப்பு
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப”
என்று தொல்காப்பியம் கூறும் எண்வகை உணர்ச்சிகளில் மருட்கை, அச்சம் தவிர மற்றவை அனைத்தையும் அவர் வெளிப்படுத்தும் விதம் கண்டு மருளாதார் அரிதே!
அப்படியென்றால், அந்த மருட்கையும் அச்சமும்?
(மருட்கை = திடீர் பெருமை, புகழால் வரும் மயக்கம், குழப்பம்)
அவைதான் அவரது இயல்பான உண்மை உணர்ச்சிகள்! குழப்பத்தையும், அச்சத்தையும் வெளிக்காட்டாமல் இருக்கவே மற்ற ஆறுவகை உணர்ச்சிகளையும் மிகையாகக் காட்டுகிறார் என்பது அறிக!
பிரதமர் மோடியின் நேற்றைய உரை, அழுகையும், வெகுளியும் (சினம்) நிரம்பியது. காரணம் நாம் அறிந்தது தான்! நாடறிய இரண்டாம் முறையாகத் தோல்வியடைந்திருக்கிறார் நரேந்திர தாமோதர தாஸ் மோடி!
அப்படியென்றால் முதல் தோல்வி?
அதை, கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே ருசி பார்த்துவிட்டார். வாக்காளர் பட்டியல்களைத் திருத்தி, சேர்த்து, நீக்கி, புரட்டுகள் மூலம் தான் பாரதிய ஜனதாவால் வெற்றி பெற முடிந்தது. அதுவும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இடங்களை விட 63 இடங்கள் குறைவாகத் தான் வெற்றி பெற்றார். (2019-இல் 303; 2024-இல் 240)
மிருகபல மெஜாரிட்டி என்று மமதை கொண்டு பேசியவர்கள், 2024 தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆந்திராவையும், பீகாரையும் துணைக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க வேண்டிய நிலைக்கு ஆளான போதே நரேந்திர மோடி உருவாக்கி வைத்திருந்த பிம்பம் வடக்கிலும் தகர்ந்து போனது. கமுக்கமாக அந்தத் தோல்வியை மறைத்து ஆட்சியைப் பிடித்து மீண்டும் வீராப்பு பேசத் தொடங்கினார்.
அதற்கு முன்பே விவசாயிகள் போராடிப் பணிய வைத்தார்கள் என்பது தனிக் கதை. ‘வீட்டில் புலிவேசம்; வெளியில் எலிவேசம்’ என்பவையெல்லாம் அயல்நாடுகளில் மட்டும் காணக் கிடைக்கும் ‘ஜியோ பிளாக்’ எபிசோடுகள்!
ஆனால், நேற்று முன்தினம் (17.4.2026) நடந்தது அவரால் மறைக்க முடியாத தோல்வி. அதுவும் ஒட்டுமொத்த நாடே உற்று நோக்க நோக்க பளிச்சென்று தோற்ற உணர்விலிருந்து வெளிவர முடியாத படபடப்பு. ஓட்டுப் போட வந்தபோது தொலைக்காட்சியில் காட்டியதோடு சரி, ஓட்டுப் போடும்போதோ, தோல்வி உறுதியான பின்போ, பிரதமர் மோடியின் முகத்தை ‘சன்சத் தொலைக்காட்சி’ காட்டவேயில்லை; காட்டக்கூடாது என்பதுதான் அவர்களுக்கு உத்தரவு!
கடந்த 16-ஆம் தேதி கூட்டப்பட்ட சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் (வழக்கத்துக்கு மாறாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது அமர்வு) தொகுதி மறுவரையறை, நாடாளுமன்ற மக்களவை இடங்கள் அதிகரிப்பு, மகளிருக்கு நாடாளுமன்ற மக்களவையில் 33% இடங்களை ஒதுக்குதல் என்று மூன்று சட்டத் திருத்த மசோதாக்களைக் கொண்டு வந்தது ஒன்றிய அரசு.
பிரதமர் மோடி, மகளிருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் இணைந்து தோற்கடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்; காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் என்று தான் நினைத்ததாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்றும் புலம்பினார்; பெண்கள் இந்த அவமானத்தை எப்படித் தாங்குவார்கள் என்று ‘கிளிசரின்’ தடவினார். தி.மு.க., சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் எல்லோரையும் மகளிர் சக்தியை உதாசீனம் செய்த பாவத்துக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று சாபமிட்டார். இப்படியாக 8.30 மணிக்கு நேரலை என்று சொல்லப்பட்டாலும், முன்பே பதிவு செய்யப்பட்ட வீடியோ எல்லா செய்தித் தொலைக்காட்சிகளிலும் நேற்று ஒளிபரப்பப்பட்டது. (வேட்டி சட்டையுடன் கோவையில் மாலை 6 மணிக்குப் பேசிய மோடி, ‘கோட்டு’ போட்டு டில்லியில் போய் 8.30 மணிக்குப் பேசியது எப்படி? என்று வியக்காதீர்கள்! எல்லாம் ரெக்காடட்ர்டுதான்!)
அந்தப் பேச்சின் ஒரு பகுதியாகத் தான், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாததற்கு தாய்மார்களிடம், சகோதரிகளிடம், மகள்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் பேசினார். அதாவது யாரோ செய்த தவறுக்கு, தன்னால் இயலாமல் போனதற்கு மன்னிப்புக் கேட்பதைப் போல நாடகமாடினார்.
உண்மையில் இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டியது யார்?
நீங்கள் தான் மிஸ்டர் மோடி!
மகளிர் இடஒதுக்கீடு இன்னும் நடைமுறையில் வராமல் இருப்பதற்குக் காரணம் யார்?
நீங்கள் தான் மிஸ்டர் மோடி!
ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த பிரச்சினையை, 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றுவதற்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஆதரவை வழங்கின. நாடாளுமன்ற மக்களவையில் 2 பேர் தவிர 454 பேர் ஆதரவாக வாக்களித்து நிறைவேற்றித் தந்தார்களே! அந்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவராததற்கு மன்னிப்பு கேட்க வேண்டியது யார்?
நீங்கள் தான் மிஸ்டர் மோடி!
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைக்குக் கொண்டுவராமல், ‘2026-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்து, அதன் முடிவுகள் வெளிவந்த பின்னர் நடைபெறும் பொதுத் தேர்தலில் 33% இடஒதுக்கீட்டை வழங்குவோம்’ என்று எந்த நியாயமான காரணங்களும் இன்றி, எந்த உறுதியான கெடுவும் அதைத் தள்ளிப் போட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டியது யார்?
நீங்கள் தான் மிஸ்டர் மோடி!
நடப்பில் இருக்கும் 543 மக்களவை இடங்களிலேயே 181 இடங்களை மகளிருக்கு ஒதுக்கி, வெகு இயல்பாகக் கொண்டுவந்திருக்க வேண்டிய இடஒதுக்கீட்டைச் சம்பந்தமே இல்லாமல், ‘850 பேர் உட்காருவதற்கு மண்டபம் கட்டிவிட்டேன்; சேர் போட்டுவிட்டேன்; ஏசி போட்டுவிட்டேன்; அதனால் மண்டபத்தை நிரப்பாமல் கல்யாணம் கட்டமாட்டேன்’ என்று அடம்பிடிப்பதைப் போல நாடாளுமன்ற இடங்களை அதிகப்படுத்தும் முயற்சியோடு முடிச்சுப் போட்டு வீணடித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டியது யார்?
நீங்கள் தான் மிஸ்டர் மோடி!
நாடாளுமன்ற இடங்களை அதிகப்படுத்தினாலும், அதையும் 1971 மக்கள் தொகை அடிப்படையில் செய்ய மாட்டோம்; எதன் அடிப்படையில் செய்யலாம் என்பதை சிம்பிள் மெஜாரிட்டி கொண்டே முடிவு செய்வோம் என்னும் வகையில் சட்டத்தைத் திருத்த முனைந்து, அதில் தென்னாட்டைப் புறக்கணித்து வடநாட்டுக்கு அதிக இடங்களை ஒதுக்கும் வகையில் சூழ்ச்சி செய்து தோற்றதற்கு மன்னிப்பு கேட்க வேண்டியது யார்?
நீங்கள் தான் மிஸ்டர் மோடி!
மகளிர் இடஒதுக்கீட்டை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ்.சின் சூழ்ச்சித் திட்டங்களான மாநிலங்களை ஒழிப்பது, மாநில உரிமைகளை மறுப்பது, நாடாளுமன்றத்தின் மூலமே நிரந்தரமாக சர்வாதிகாரத்திற்கு அடிகோலுவது என்று ‘வெய்மார் அரசியலமைப்பின் 48ஆம் ஷரத்தைப் போல’ உங்கள் பாணி 131-ஆவது இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்ததைக் கொண்டு வந்த சூழ்ச்சித் திட்டத்தை நடப்பு சட்டமன்றத் தேர்தல்களுக்கும் பயன்படுத்தலாம் என்ற குறுக்குப் புத்தியுடன் செயல்பட்டு, அந்தச் சூழ்ச்சியும் அம்பலப்பட்டு நிற்பது யார்?
நீங்கள் தான் மிஸ்டர் மோடி!
மகளிருக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைத்துவிடக் கூடாது; ‘ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்’ என்று பழியை மட்டும் எதிர்க்கட்சிகளிடம் தூக்கிப் போட்டுவிட்டு, தான் கரையேற வேண்டும் என்று நினைத்து மகளிர் இடஒதுக்கீடு ஓடத்தைக் கவிழ்த்துவிட்ட வேடதாரி யார்?
நீங்கள்… நீங்கள்… நீங்களே தான் மிஸ்டர் மோடி!
உங்கள் சூழ்ச்சிகள் தெரிந்ததால்தான், தங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கக் கூடும் என்றாலும் இந்தச் சூழ்ச்சிக்கு இரையாகாமல், துணிச்சலுடன் எதிர்த்து நின்றனர் அகிலேஷும், தேஜஸ்வியும்!
மகளிரிடம் பொய் அழுகை நாடகம் ஆடி, காங்கிரஸ் கட்சி மீது அவதூறு சுமத்துவீர்கள் என்று தெரிந்தும் உங்கள் சூழ்ச்சியைத் தோற்கடித்தனர் காங்கிரசார்! உங்களை நாடாளுமன்றத்திலேயே கதறவிட்டனர் எதிர்க்கட்சி எம்.பிக்கள்!
நடக்கும் தேர்தலில் இதையே ஓர் ஆயுதமாக எடுப்பீர்கள் என்று தெரிந்தும், உங்கள் ஆயுதத்தை முறித்துப் போட்டது மட்டுமல்லாமல், மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனிநபர் மசோதா கொண்டு வரச் செய்தார் தி.மு.க. தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின்!
மகளிருக்கு உரிமை கிடைத்துவிடக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் சூழ்ச்சியில் இப்போது நீங்கள் வெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால், மகளிருக்கான இடஒதுக்கீடு 50% ஆக இந்திய அளவில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் வந்தே தீரும்!
பெண்களைச் சிறுமைப்படுத்தி, இழிபிறவிகளாகச் சித்தரித்து வந்த உங்கள் வேத, இதிகாச, புராணப் புரட்டுகளை ஒழித்துக்கட்டும் வகையில் பெண்ணுரிமைக் கொடி கோட்டையேறியே தீரும்!!

