சென்னை, ஏப்.17 சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (16.4.2026) செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கையை கடுமையாகச் சாடினர்.
அவர்கள் பேசியதாவது:
“2014-இல் கருப்புப் பணத்தை ஒழித்து ரூ. 15 லட்சம் போடுவதாகச் சொன்ன வாக்குறுதி என்னவானது? பணமதிப்பிழப்பால் நாட்டுக்கு ஒரு பைசா லாபமாவது கிடைத்ததா? இப்போது கொண்டு வரப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா தென்னிந்தியாவை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் முயற்சியாகும்.
இந்த மசோதாவில் மாநிலங்களுக்கான பாதுகாப்பு குறித்து எந்த உத்தரவாதமும் இல்லை. வாய் வார்த்தைகளை நம்ப நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. கலைஞர் வழியில் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார். ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெற்றது போல், இதிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும்.”
மேலும், தோல்வி பயத்தினால் ஒன்றிய அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இது ஒரு “சோதா மசோதா” என்றும் அவர்கள் கிண்டல் செய்தனர்.
மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எப்படி தோல்வியில் முடிந்ததோ, அதேபோல் தொகுதி மறுவரையறை நடவடிக்கையும் பெரும் தோல்வியைச் சந்திக்கும் என திமுக மூத்த நிர்வாகிகள் விமர்சித்துள்ளனர்
தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் வலிமையைக் குறைத்து, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே மோதல்களைப் பிரதமரே உருவாக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
“தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படாது” என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வார்த்தைகளை நம்ப முடியாது என்றும், மசோதாவில் இதற்கான எந்த எழுத்துப்பூர்வ உத்தரவாதமும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

