சென்னை, ஏப்.17 ஒன்றிய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கை, தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை அடியோடு சிதைக்கும் ஒரு மிகப்பெரிய அரசியல் சதி என்று தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதுபோலவே தமிழ்நாட்டின் பல்வேறு மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை வலுவாக எடுத்து வைத்து வருகிறார்கள்,
முதலமைச்சர் கண்டனம்
ஒன்றிய அரசு மேற்கொள்ளத் திட்ட மிட்டுள்ள தொகுதி மறுவரையறை நட வடிக்கைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையும் என்றும், இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தொகுதி மறுவரையறை
குறிப்பாக, மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தண்டனை வழங்குவது போலவும், மக்கள் தொகையை அதிகரிக்க அனுமதித்த மாநிலங்களுக்கு அதிக இடங்களை வழங்குவது போலவும் இந்த நடவடிக்கை அமையும் என்று கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர் இது தென் மாநிலங்களின் அரசியல் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்பதால், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பையே தொகுதி மறுவரையறைக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறார்.
பழ.நெடுமாறன் கருத்து
தமிழ் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “தேர்தல் நடைபெறும் நேரத்தில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளும், மேற்குவங்கத்தில் 69 தொகுதிகளும் உள்ள நிலையில், அனைவரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது ஒன்றிய அரசு அவசரமாக முடிவெடுக்க முயற்சிப்பது சரியல்ல!
இப்போதுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளை 812-க்கும் மேல் உயர்த்த திட்டமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. வட இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் அங்கு தொகுதிகள் அதிகரிக்கும் நிலையில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை முறையாக செயல்படுத்திய தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் பாதிக்கப் படும்.
உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், அரியானா போன்ற மாநிலங் களில் நாடாளுமன்ற உறுப்பினர் எண் ணிக்கை அதிகரிக்கும் போது, தென் மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையாக மாறும் அபாயம் உள்ளது.
ஒன்றிய அரசு அமைத்துள்ள மொழி அமைப்பு மூலம் இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை என கூறப்படுவது தவறானது. பெண்களுக்கு இடஒதுக்கீடு என்ற பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறார்கள்; உண்மையில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் தான் நாம் வரவேற்போம். ஹிந்தி பேசும் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்தி நிரந்தரமாக ஆட்சியை கைப்பற்ற முயற்சி நடைபெறுகிறது,” என்றார்.
துரை வைகோ குற்றச்சாட்டு
அதேபோல திருச்சியில் செய்தியாளர் களை சந்தித்த துரை வைகோ, ஒன்றிய அரசு முன்னெடுத்து வரும் தொகுதி மறுவரையறை திட்டம் ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சி அமைப்பிற்கும் எதிரானதாக உள்ளது என்று கடுமையாக விமர்சித்தார்.
தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சி மற்றும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை ஆதரிப்பதாக கூறிய அவர், அது 2011 மக்கள்தொகை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டால் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரித்தார். தேர்தல் சூழ்நிலையில் அவசரமாக இந்த மசோதா கொண்டு வரப்படுவது சந்தேகத்தை எழுப்புகிறது என்றும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் இது நிறைவேறாது என்ற நம்பிக்கையும் தெரிவித்தார்.
மேலும், பாஜக ஆளாத மாநி லங்களுக்கு ஏற்ெகனவே நிதி மற்றும் திட்டங்களில் பாகுபாடு காட்டப் படுவதாக குற்றம்சாட்டிய அவர், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களே இப்போது பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் எனவும் கூறினார். இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கு எதிரான நடவடிக்கையாக அமையும் எனவும் வலியுறுத்தினார்.

