தமிழ்நாட்டின் ‘நீர்க்கொள்கை’ ஒரு மாநிலத்தின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கான அஸ்திவாரம்

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நகரங்களின் வளர்ச்சி பெரும்பாலும் மேம்பாலங்கள், மெட்ரோ ரயில்கள் மற்றும் விமான நிலையங்களை வைத்தே அளவிடப்படுகிறது. ஆனால், ஒரு நகர்ப்புறப் பொருளாதாரத்தின் உண்மையான உறுதித்தன்மை என்பது கண்ணுக்குத் தெரியாத நீர் மேலாண்மை அமைப்புகளில்தான் அடங்கியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தண்ணீர் என்பது வெறும் நகராட்சி சேவை அல்ல; அது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு ‘காப்பீடு’.

2019 ஒரு படிப்பினை

ஜூன் 2019-இல் சென்னை சந்தித்த கடும் தண்ணீர் தட்டுப்பாடு, இந்த ‘காப்பீடு’ தவறியபோது ஏற்படும் விளைவுகளை உலகுக்கு உணர்த்தியது. புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் வறண்டபோது, உணவங்கள் – விடுதிகள் மூடப்பட்டன, தொழிற்சாலைகள் முடங்கின. பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த ‘ஒரு கட்டமைப்பு பலவீனம்’ அன்று வெளிப்பட்டது. மழைக்காலத்தை மட்டுமே நம்பியிருந்த ஒரு பழைய அமைப்பால், வளர்ந்து வரும் 12 மில்லியன் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது.

தமிழ்நாட்டின் சவால்கள்
புவியியல் மற்றும் அரசியல்

தமிழ்நாட்டின்  ‘நீர் மேலாண்மை’ இரண்டு முக்கிய சிக்கல்களைக் கொண்டது:

இயற்கைச் சூழல்: தமிழ்நாடு ஒரு அரை-வறண்ட மண்டலத்தில் உள்ளது. வடகிழக்குப் பருவமழையை மட்டுமே பிரதானமாக நம்பியிருப்பதால், மழையில் ஏற்படும் சிறு மாற்றம் கூட நீர் இருப்பைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

அரசியல் சூழல்: மாநிலத்தின் பல நதிகள் அண்டை மாநிலங்களின் நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தங்களுக்கு உட்பட்டவை. இதனால், மாநிலத்திற்கு வெளியே இருக்கும் ஆதாரங்களின் மீது நமக்கு முழுமையான கட்டுப்பாடு இல்லை.

இந்தச் சூழலில், கழிவுநீரை மறுசுழற்சி செய்வது மற்றும் கடல்நீரைக் குடிநீராக்குவது போன்ற மாற்றுக் கொள்கைகள் வெறும் தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமல்ல, அவை மாநிலத்தின் ‘தன்னாதிக்கம்’ (Sovereignty) சார்ந்த முடிவுகளாகின்றன.

தொலைநோக்குப் பார்வையும்
நிறுவனக் கட்டமைப்பும்

தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை வரலாறு 1970-களின் முற்பகுதியில், முத்தமிழறிஞர் கலைஞர்   அவர்களின் ஆட்சிக் காலத்தில் உருப்பெற்றது. ஒரு நவீன மாநிலத்திற்குத் தேவையான மூன்று முக்கியத் தூண்கள் அப்போது நடப்பட்டவை:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD – 1970): உள்ளூர் அளவிலான சிறிய திட்டங்களைத் தாண்டி, மாநில அளவில் பெரும் பொறியியல் திட்டங்களைச் செயல்படுத்த இது உருவாக்கப்பட்டது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA – 1972-1975): நகரத் திட்டமிடலையும் நீர் ஆதாரங்களையும் இணைக்கும் ஒரு பாலமாக இது அமைந்தது.

சென்னை குடிநீர் வாரியம் (CMWSSB): சென்னை போன்ற பெருநகரங்களுக்கு என்றே பிரத்யேகமான ஒரு நீர் மேலாண்மை அமைப்பின் தேவையை உணர்ந்து இது உருவாக்கப்பட்டது.

இந்த வரிசையில் வீராணம் திட்டம் மிக முக்கியமானது. சென்னையின் தண்ணீர் தேவைக்காக வெளியூர்களில் இருந்து நீரைக் கொண்டு வருவது என்ற ‘ஆதாரப் பன்முகத்தன்மை’ (Source Diversification) கொள்கைக்கு இதுவே தொடக்கப்புள்ளி.

கடல்நீரைக் குடிநீராக்குதல்: ஒரு புரட்சிகர நகர்வு

2006-2011 காலகட்டத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கிய மான முடிவு, கடல்நீரைக் குடிநீராக்கும் தொழில் நுட் பத்தைப் பெரிய அளவில் கையில் எடுத்தது ஆகும்.

மீஞ்சூர் ஆலை (2010): இந்தியாவின் முதல் பெரிய அளவிலான கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது.

நெம்மேலி ஆலை: தெற்கு சென்னைக்காகத் தொடங்கப்பட்ட அடுத்த முக்கியத் திட்டம்.

இவை வெறும் தொழிற்சாலைகள் அல்ல; பருவமழையை மட்டுமே நம்பி வாழ்ந்த நிலையை மாற்றி, வானம் பொய்த்தாலும் தண்ணீர் குறையாது என்கிற ‘நிலைத்தன்மை’யை (Supply Independence) சென்னைக்கு வழங்கியது. பொருளாதார ரீதியாக நீர் பாதுகாப்பு உள்ள நகரமே அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்பதை உணர்ந்து எடுக்கப்பட்ட ஆளுமையான முடிவு இது.

தமிழ்நாட்டின் இன்றைய நீர் மேலாண்மைத் திட்டங்கள் அனைத்தும் கடந்த அய்ம்பது ஆண்டுகளில் போடப்பட்ட இந்த வலுவான அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டுள்ளன. தற்போதைய அரசும் இந்தத் தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

நன்றி: ‘சவுத் நியூஸ் ஆங்கில செய்திஇணையம்

தமிழாக்கம்: சரவணா ராஜேந்திரன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *