* பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவேண்டிய அவசியம் என்ன?
* மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அவசியமே! அனைத்து மாநில உறுப்பினர்களும் பங்கேற்று விவாதித்து முடிவெடுக்க வேண்டாமா?
*தமிழ்நாடு – மேற்குவங்க மாநிலங்களின் தேர்தல்களைக் குறி வைத்துதான் இந்தத் திட்டம்!
பல மாநிலங்களிலும் சட்டப் பேரவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், அவசர அவசரமாக நாடாளு மன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்துவது ஏன்? மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத் திருத்தம் என்பது எவ்வளவு முக்கியம்! அனைவரும் பங்கேற்று விவாதித்து சிறப்பான முடிவை எடுக்கவேண்டாமா? தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை முன்வைத்து ஒன்றிய பி.ஜே.பி. அரசு மேற்கொள்ளும் சூழ்ச்சியே! தென்மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் நோக்கம் இதன் பின்னணியில் உள்ளது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது இது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அய்ந்து மாநிலத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, அதில் கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலத் தேர்தல்கள் முடிவுற்றுவிட்டன. ஏப்ரல் 23, ஏப்ரல் 29 ஆகிய நாள்களில் தமிழ்நாடு (ஒரே கட்டமாக), மேற்கு வங்க (இரண்டு கட்டங்களாக) மாநிலங்களில் இன்னும் தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது.
இரு மாநிலங்களிலும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், கட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பரப்புரைகளை மேற்கொண்டு தேர்தல் களப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திடீரென்று நாடாளுமன்ற
சிறப்புக் கூட்டம் ஏன்?
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி முடிந்த நிலையில் திடீரென மூன்றாம் பகுதியாக ஏப்ரல் 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 29 ஆம் தேதி அனைத்து சட்டமன்றத் தேர்தல்க ளும் நிறைவுபெற்ற பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து விவாதித்து முடிவெடுக்கலாம் என்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தும் கூட, அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதில் ஒன்றிய அரசு மும்முரமாக இருக்கிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களை மய்யப்படுத்தி இந்த ஏற்பாடு!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் பணிகளை முடக்குவதுடன், சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், மிக முக்கியமான மேற்கு வங்கம், தமிழ்நாடு தேர்தல்கள் முடிவடையாத சூழலில், “மகளிருக்கு இட ஒதுக்கீடு தரும் பா.ஜ.க.” என்று மார் தட்டி ஓட்டு வேட்டையாடுவதற்காகவே இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள். சட்டமன்றத் தேர்தல் காலத்தில் எந்த அறிவிப்பும் மாநில அரசுகள் செய்ய முடியாதென்றால், அதே தேர்தலில் பங்கேற்கும் கட்சி தானே ஒன்றிய அரசை ஆள்கிறது. அவர்களின் புதிய அறிவிப்புகள், சட்டங்கள், சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாதா? தமிழ்நாடு, மேற்கு வங்கத் தேர்தல்களைக் குறி வைத்தே இந்த அவசரம் என்பது எல்லோருக்கும் தெரிகிறதே! தேர்தல் ஆணையத்தின் கண்களுக்கு இதெல்லாம் தெரியாதா?
எதற்கு இந்த அவசரக் கூட்டம்? 2023 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நாரி சக்தி வந்தன் அபினியம் என்ற பெயரிலான 33% மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான செயல்களில் இறங்கு வதற்குரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை நிறை வேற்றுவது இதன் முக்கிய நோக்கம் என்று சொல்லப்படுகிறது. அதற்காக நாடாளுமன்ற இடங்களை அதிகப்படுத்துவது என்று முடிவெடுத்துள்ளார்கள்.
2021 ஆம் ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடியவில்லை!
2021 ஆம் ஆண்டுக்குரிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இன்னும் முடியாத நிலையில், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கை வைத்தே நாடாளுமன்ற மக்களவை இடங்களை 543-இல் இருந்து 816-ஆக உயர்த்தி, அதில் 33% இட ஒதுக்கீடு வழங்கப்போவதாக அவசர அவசரமாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதன் பின்னால் ஒளிந்திருப்பது, தென் மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் மிகப் பெரிய சூழ்ச்சியாகும். மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற இடங்களைக் கூட்டுகிறோம் என்ற போர்வையில், ஒப்பீட்டளவில் தென்மாநிலங்களுக்குக் குறைவான இடங்களும், வட மாநிலங்களுக்கு அதிக இடங்களும் ஒதுக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தங்கள் பாசிச ஆதிக்கம் நிலைக்கும்படியான கட்டமைப்பைச் சட்ட ரீதியாக உருவாக்கும் வேலையைத் தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. இதன் மூலம் திட்டமிட்டுள்ளது.
இந்தத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான பேச்சு கடந்த ஆண்டு எழுந்தபோதே, திராவிடர் கழகம் தெளிவாக இந்த ஆபத்தை எடுத்து விளக்கியுள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் தெளிவுபடுத்தி உள்ளது. “தொகுதி மறுசீரமைப்பால் (Delimitation) தென் மாநிலங்களுக்கு இடம் குறையாது என்றும், வட மாநிலங்களுக்கு இடங்கள் அதிகரிப்பதால் பிரச்சினை இல்லை” என்றும் மாய்மாலம் பேசினார்கள். தென் மாநிலங்களின் ஜனநாயக வலிமையைக் குறைக்க, வட மாநிலங்களின் நாடாளுமன்ற இடங்களை அதிகரிப்பது என்பது, ஒரு கோட்டினை சிறிதாக்க வேண்டு மென்றால் பக்கத்தில் ஒரு பெரிய கோடு போடும் ‘சின்னக் கோடு – பெரிய கோடு’ தத்துவமே ஆகும். இதைக் கண்டு தமிழ்நாடு ஏமாறாது. இது ஜனநாயகத்திற்கும், மாநில உரிமைகளுக்கும், சமூகநீதிக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், மதச்சார்பின்மைக்கும் பேராபத்து. நாடாளுமன்றத்தின் மூலமே சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தச் செய்யப்படும் சூழ்ச்சி!
ஜனநாயக விரோத செயலே!
இது குறித்து அனைவரும் கூடி விரிவாக விவாதிக்க வேண்டும் என்ற நியாயமான ஜனநாயக ரீதியான கோரிக்கையை மறுத்து, அவசர கதியில் கூட்டப்படும் இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் நிரந்தரமாகத் தங்கள் பாசிச, பார்ப்பனிய ஆதிக்கம் நிலைக்க வழிகோலுகிறது ஆர்.எஸ்.எஸ்!
இந்த நாடாளுமன்றக் கூட்டமும், அதில் நிறைவேற்றப்பட விருக்கும் சட்டத் திருத்தங்களும், சட்ட விரோதம் – ஜனநாயக விரோதம் – நியாய விரோதம் – பாசிச ஆபத்து!
பேராபத்தைத் தடுக்க வேண்டியது அவசரம் – அவசியம்
சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதுடன் நமது ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டது என்று குடிமக்கள் கருதிவிடக் கூடாது. இதனால் பாதிக்கப்படவிருப்பது தென்மாநிலங்கள் மட்டுமல்ல – ஒட்டுமொத்த இந்தியாவும், அதன் ஜனநாயகமும்! இந்தப் பேராபத்தைத் தடுக்க வேண்டி யது அவசரம் – அவசியம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
12.4.2026

