அம்பேத்கர் உலகத் தலைவர்களில் ஒருவர் ஜாதி ஒழிப்பில் தீவிரவாதி! – பெரியார் கருத்து

வேலூர் நகராட்சி மன்றத்தில் பெரியார்

ஈ.வெ.ரா. அவர்கள் 28.10.1956ஆம் தேதி டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்தைத் திறந்து வைத்துப் பாராட்டிப் பேசியதிலிருந்து சில முக்கிய கருத்துகள் கீழே தரப்படுகின்றன.

அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை, என்று சொல்வதெல்லாம் இரண்டாவது தான். அவரை விடப் படித்தவர்கள் திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற – மக்களுக்குப் பயன்படுகிற – தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்டநாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்கிறேன் உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் நாஸ்திகர்கள் தான்; நாஸ்திகராக இருக்கிறவர்கள் தான் ஆராய்ச்சியின் சிகரமாக அறிவு பிரகாசிக்கக்கூடிய மனிதர்களாக ஆகமுடிகிறது. அவர்கள் தான் தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்துகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய அறிஞர். அதன் காரணமாகவே அவர் ஒரு பெரிய நாஸ்திகர். அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து, தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாம் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இது போலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார். இப்பொழுது அதிசயமான உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்ந்தது, இப்போது பேருக்குத்தான் அவர் புத்தமதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர, அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.

டாக்டர் அம்பேத்கர் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இந்து மதத்தை ஒத்துக்கொள்வதில்லை. அவர் காந்தியைப் பற்றிச் சொல்லும்போது “காந்தி ஒரு பச்சை இந்து; மனுதர்ம முறை, வர்ணாசிரம முறையைப் பாதுகாக்க நினைப்பவர்; அவர் ஆதிதிராவிட மக்களுக்கு என்ன செய்ய முடியும்?” என்று கடுமையாகத் தாக்கி, வர்ணாசிரம ஆதார சுலோகங்களையெல்லாம் கூட எடுத்துப் போட்டு, காந்தி பச்சை இந்துவாக இருப்பதால்தான் அவர் புத்தி இப்படிப் போகிறது என்று எழுதினார்.

1930-35லேயே ஜாதி ஒழிப்பில் தீவிர கருத்துள்ளவராக இருந்தார்; ஜாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் “ஜத்பட் தோரக் மண்டல்” என்று கருதுகிறேன். ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஓர் அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்த சபையினர் ஜாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமையுரையாக (Address) 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப் போட்டு, ஜாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் “உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள்” என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தொடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார்.

அதைப் பார்த்து விட்டு “உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஜாதி ஒழிப்புச் சங்கமே தவிர இந்துமத ஒழிப்புச் சங்கமல்ல; ஆகையால் நீங்கள் இந்துமதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஓர் அத்தியாயத்தை (Chapter) நீக்கி விடவேண்டும் என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். அதற்கு அம்பேத்கர் “ஜாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழிய வேண்டும்” என்கிறதுதான் அஸ்திவாரம்; அதைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது? ஆகையால் அதை நீக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர், “நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்: தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அது பற்றி பேசுகிறேன்” என்று சொல்லி விட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய் விட்டது. நான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி “ஜாதியை ஒழிக்கும் வழி” என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார். நாம் இராமாயணத்தைப் பற்றி வாயால் பேசிக்கொண்டிருக்கும்போதே அதாவது 1932லேயே அவர் இராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு சிவராஜ் தான் தலைவர். இதெல்லாம் “குடிஅரசில்” இருக்கிறது.

அவர் ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்த போது கீதையைப் பற்றி பேசும்போது, “கீதை ஒரு பைத்தியக்காரனின் உளறல்” என்றே பேசினார். அப்போது சி.பி.ராமசாமி அய்யர் போன்றவர்கள் “இதென்ன அக்ரமம்; வெறும் அம்பேத்கர் பேசியிருந்தால் கூடக் கவலையில்லை; ஒரு கவுன்சில் மெம்பராக இருக்கிற அம்பேத்கர் அதுவும் சென்னையில் வந்து கீதை பைத்தியக்காரனின் உளறல் என்று பேசுவதென்றால் அக்ரமம்” என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள்.

நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்த்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். அந்த மாநாட்டுக்கு சண்முகம் செட்டியார் வரவேற்புரை அளித்தார். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக ஜெயக்கர் வந்திருந்தார். அவர் ஏதோ நம்மைப் பாராட்டிப் பேசி விட்டுப் போய்விட்டார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அந்த சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம் ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம்; “தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்துவிடாதீர்கள். குறைந்தது 1 லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான், அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானா சொல்கிறபடிதான் கேட்க வேண்டும். அவர்களோ கைவைக்கக்கூடாத மதம் (Perfect Religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கைவைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது. இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது, உதைக்க வந்தால் கூட சிபாரிசுக்காவது ஆள் வேண்டாமா?” என்று சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக்கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்து விட்டார். என்றாலும் அவர் ஏற்கெனவே புத்தர்தான். நாங்கள் உலக புத்தர் மாநாட்டிற்குச் சென்றபோது அவரை பர்மாவில் சந்தித்தேன். புத்தர் மாநாட்டில் நான் பேசுவதாக “ப்ரோகிராமில்” போட்டிருந்தார்கள். ஆனால், எனக்குச் சொல்லவில்லை. நான் போனேன். பிறகு என்னமோ வேறொருவரை பேசச் சொல்லி விட்டார்கள். அப்போது, அம்பேத்கர் என்னிடம் இன்றைக்கே கையெழுத்துப்போட்டு புத்தமதத்தில் சேர்ந்து விடுவோம் என்று சொன்னார்.

‘‘மைசூர் மகாராஜா புத்த மதக் கொள்கையில் ரொம்பப் பற்றுள்ளவர். நானும் மைசூரிலேயே நிரந்தரமாகத் தங்கலாமென்றிருக்கிறேன். அவர் எத்தனையோ ஏக்கர் நிலம்கூட தருவதாகச் சொல்லி இருக்கிறார். இப்படி இதையெல்லாம் வைத்து ஒரு பெரிய யூனிவர்சிடி ஆரம்பிக்காமல் நாமும் சாகிற வரையில் பேசிக்கொண்டேயிருந்து தான் என்னாவது? ஏதாவது சாவதற்குள் செய்ய வேண்டாமா?’’ என்று இன்னும் என்னென்னமோ சொன்னார். அதோடு தைரியமாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்து விட்டார். சேர்ந்த பிறகு ஒரு அறிக்கை வெளியிட்டார்.

“நான் இனிமேல் ராமன், கிருஷ்ணன், சிவன், இந்திரன் முதலியவைகளைக் கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. அவதாரங்கள் என்பவைகளை எற்றுக்கொள்வதில்லை. உருவ வணக்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஜாதி முறையில் இன்னும் மோட்சம் – நரகம் இவற்றை நம்புவதில்லை. சடங்கு திதி-திவசங்கள் ஆகியவைகளில் நம்பிக்கையில்லை. இனி மேல் இவைகளைச் செய்ய மாட்டேன்.” இதுபோல இன்று நாம் எதை எதைக் கண்டிக்கிறோமோ ஒத்துக் கொள்வதில்லையோ, அதை நாம் நம்பவும் கூடாது.

அம்பேத்கர் மக்களுக்கு வழிகாட்டுபவர். ஜாதிமத குறைபாடுகளை மனதில் பட்டதை தைரியமாக எடுத்துக் கூறி வந்தார். சுயநலமில்லாமல் பாடுபட்டவர்; இந்தியா பூராவும் விளம்பரம் பெற்றவர். அவர் தமது மக்களுக்கு பவுத்த மதத்திற்குப் போகும்படி வழி காட்டியிருக்கிறார். இங்கும் பலர் மாறக்கூடிய நிலை ஏற்படும். தன் சமுதாயத்திற்குப் படிப்பு உத்தியோகம் முதலிய காரியங்களில் முயற்சி செய்து பல வசதிகளைச் செய்திருக்கிறார். உத்தியோகத்தில் 100க்கு 15 என்று வாங்கிக் கொடுத்தார். அவர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. அவர் சமதர்ம காலத்திற்கு முன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர் அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற தலைவர் ஏற்பட முடியாது என்று சொல்லக்கூடிய அவருக்கு நிரந்தரமான நினைவுச் சின்னம் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்த வேலூர் நகரசபையினரைப் பாராட்டுகிறேன் என்றார்.

– ‘விடுதலை’, 7.12.1956

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *