நடிகர் விஜய் நடித்து “ஜனநாயகன்” என்றொரு படம் தயாரிக்கப்பட்டு, சென்சார் துறையினால் இழுத்தடிக்கப்பட்டதால் வெளியீடு தள்ளிப் போனது. (தயாரிப்பு நிறுவனத்தில் தவறான மேல்முறையீட்டு அணுகுமுறைகளையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.)
தேர்தல் சமயத்தில் தங்களுக்குப் பயன்படும் என்று கருதியே, தங்கள் அரசியல் கட்சியையும், நடிகர் விஜய்யையும் முன்னிறுத்தும் வகையில் அந்தப் படம் உருவாக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், மேற்சொன்ன காரணங்களாலும், அடுத்து, தேர்தல் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டதாலும், படத்தை வெளியிட முடியாத சூழல் அமைந்தது.
மற்றொருபுறம், படத்தை வெளியிடாமல் தடுப்பதாகச் சொல்லி அதன் மூலம் தங்களுக்கும், பாஜகவுக்கும் தொடர்பில்லை என்பதாக அவர்களே ஓர் ‘இமேஜை’ உருவாக்கிக் கொள்ள முயல்வதாகவும் விஜய் தரப்பு மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
கரூர் 41 பேர் மரணச் சம்பவத்தைப் போலவே, இப் படத்தின் வெளியீட்டையும் காட்டி, ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க., இவரைக் கூட்டணிக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. சென்சார் துறை வாயிலாக ஒன்றிய அரசு நெருக்கடி கொடுத்தாலும், அதைக் குறித்து எங்கும் வாய் திறக்காமல் இருந்த நடிகர் விஜய், அண்மையில் ஒரு மேடையில் பேசும்போதும், ஒன்றிய பா.ஜ.க. அரசை நேரடியாகக் குறிப்பிடத் துணிவின்றி, “யார் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும்!” என்று பொத்தாம் பொதுவாகப் பூசி மொழுகி வந்தார். அவர் கட்சியில் அடுத்த மட்டத்திலிருக்கும் ஆதவ் அர்ஜூனா போன்றோர், இதற்குத் தொடர்பே அற்ற திமுகவைத் தொடர்புபடுத்தி, பாஜகவுடன் சேர்ந்து சதி செய்வதாகப் பேசி வந்தனர்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் இரவு, முதலில் அப் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளிவந்ததாகவும், பின்னர் முழுப் படமும் வெளிவந்ததாகச் சொல்லப்படுகிறது. இப் படத்தின் உயர்தரமான பிரதி (HD Print) வெளிவந்தது எப்படி என்று பலரும் தங்கள் ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர். தற்காலத் திரைப்படங்களில், ஒவ்வொரு பணிக்காகப் படம் வெவ்வேறு இடங்களுக்கு (படத் தொகுப்பு, ஒலிப்பதிவு, வண்ணக் கலவை, கணிணி வரைகலை) செல்லும்போதும், அவை குறித்த நீர்க்குறி (Watermark) போடப்படும்.
வழக்கமாக வெளிவரும் ‘திருட்டு டிவிடி’ அல்லது ‘இணையப் பிரதி’ என்பது, முதலில் திரையரங்கில் கேமரா கொண்டு பதிவு செய்யப்பட்டதாகவே இருக்கும். அதன் பிறகு தான் எப்படியாவது நல்ல பிரதியைத் தேடி வெளியிடுவார்கள். ஆனால், திரையரங்கில் இன்னும் படம் வெளியாகாத சூழலில், இம்முறை வெளிவந்திருக்கும் பிரதி “Editing 14012026” என்ற நீர்க்குறியுடன் இருக்கும் உயர்தரமான பிரதி ஆகும். இத்தகைய பிரதிகள் தயாரிப்பாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர், நடிகர் போன்ற திரைப்படம் தொடர்புடைய மிக முக்கிய நபர்களிடம் மட்டுமே இருக்கும். அதில் ஒன்று தான் வெளிவந்திருக்கிறது என்பதால், இந்தத் தரப்பில் இருந்து தான் வெளிவந்திருக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
திரைப்படத் துறையைச் சார்ந்த பலரும் இது குறித்து
‘சி.பி.அய். விசாரணை வேண்டும்’ என்று சொல்லியிருக்கும் சூழலில், படக் குழுவும், தயாரிப்பு நிறுவனமும் வெறும் எச்சரிக்கை மட்டுமே விடுத்துள்ளனர். புகார் எதுவும் கொடுத்ததாகத் ‘தகவல்’ இல்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அக் கட்சியின் முக்கியப் பொறுப்பாளரான ஆதவ் அர்ஜூனா கடைசி இரண்டு வாரத்திற்கு ‘‘எங்களிடம் ஓர் ஆயுதம் இருக்கிறது. பிறகு பாருங்கள்!’’ என்று சொன்னதற்கு இது தான் அர்த்தமா? அவர்களே படத்தைக் கசியவிட்டு, இப்போது அதைக் கொண்டு சென்சார் போர்டையும் ஏமாற்றி, பழியை பிற கட்சிகள் மீது போட்டு, ரசிகர்களிடம் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்களா என்று சந்தேகம் எழுப்புகின்றனர் ஊடகத்தினர்.
திமுக மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு, அக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆமாம்… படம் வெளியானது குறித்து முறையான சி.பி.அய். விசாரணை வேண்டும் என்று ஏன் இன்னும் படத் தயாரிப்பாளர், நடிகர் தரப்பில் இருந்து குரல் ஏதும் வரவில்லை என்பது முக்கியமான கேள்வியாகத் தொக்கி நிற்கிறது!
– பார்வையாளன்

