திருச்சி, ஏப். 11– திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், பெரியார் நலவாழ்வு சங்கம் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்துறை இணைந்து உலக சுகாதார நாளான 07.04.2026 அன்று தாளாளர் ஞா.ஆரோக்கியராஜின் உறுதுணையுடன் பெரியார் தொடக்கப்பள்ளியில் இளம் பிஞ்சுகளுக்கான விழிப் புணர்வு நிகழ்ச்சியினை நடத்தியது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை பள்ளி மாண வர்களிடத்தில் தனி சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரம் குறித்த பல தகவல்களை சிறப்பாக எடுத்துரைத்ததுடன், மாணவர்களிடத்தில் கேள்விகள் கேட்டு, பதில்களின் மூலம் ஆரோக்கியம் குறித்த செய்திகளை மனதில் பதியும் விதமாக எடுத்துரைத்தார்.
மேலும் தாங்கள் என்னவாக உயர விருப்பம் என்று கேட்டவுடன் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர், மருத்துவர், காவல்துறை ஆய்வாளர், ஆசிரியர், இராணுவ வீரர் என ஆர்வத்துடன் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி இளம் வயதி லேயே மாணவர்கள் எந்த சூழ்நிலையினையும் எதிர்கொண்டு மகிழ்ச்சியாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும் என்பதனை பதிவு செய்தார்.
உடல் நலம் – மனநலம்
பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.முனவர் சுல்தானா மனிதனின் சுகாதாரம் என்பது உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டும் இணைந்தது என்பதனை தெரிவித்ததுடன் உடல் நலம் பெற சத்தான உணவும் நல்ல பழக்கவழக்கங்களும் எப்படி முக்கியமானதோ அதே போல் உள்ளம் தெளிவு பெற அறிவு மேம்பட மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும். பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பெரியார் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் பி.விஜய லெட்சுமி, நலவாழ்வு நாளில் பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற அரியதொரு வாய்ப்பை வழங்கிய பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
ஒழுக்கம் – உண்மை
மேலும் சுகாதாரம் குறித்து மாணவர்கள் இன்று அறிந்து கொண்ட பல தகவல்களை தங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்றும் ஒழுக்கம், உண்மை இவை இரண்டையும் பின்பற்றி உயர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் துறைத் தலைவர் பேராசிரியர் க.உமாதேவி முன்னிலை வகித்து மாணவர்களை வழிநடத்தினார்.
கைகழுவுதல் குறித்த விழிப்புணர்வு
அதனைத் தொடர்ந்து மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பத்துறை மாணவர்கள் கை கழுவுவதன் மூலம் தொற்றுக்கிருமிகள் உள்ளே நுழையாதபடி பார்த்துக்கொள்ள முடியும் என்பதை தெரிவித்ததோடு, கைகழுவும் முறைகள் குறித்து விவரித்து, அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினர்.
ஊட்டச்சத்துக்கள் குறித்த விழிப்புணர்வு
உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலைக்கு உலகம் சென்றதற்கான காரணம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகளை தவிர்த்து துரித உணவுகள், வறுத்த, பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்டு செறிவூட்டப்பட்ட உணவுகளை இக்கால இளைய தலைமுறைகள் விரும்பி உண்பதால்தான் ஏற்படுகின்றது என்பதனை விளக்கி புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் குறித்த பல தகவல்களையும், அவை அடங்கியுள்ள உணவு பொருட்களையும் பட்டியலிட்டனர்.
உடற்பயிற்சி
கைப்பேசி, தொலைக்காட்சி போன்றவற்றில் நேரத்தை தொலைத்து நலவாழ்வை கெடுத்துக் கொள்ளாமல் தினசரி செய்ய வேண்டிய சிறு சிறு உடற்பயிற்சிகள் குறித்து செய்முறை பயிற்சியினை மாணவர்கள் செய்து காட்டினர். பள்ளி மாணவர்களும் அதனை ஆர்வத்துடன் செய்தனர்.
நலவாழ்வு குறித்த விழிப்புணர்வு நாடகம்
பள்ளி மாணவர்களுக்கு புரியும் விதமாக இக்கால மாணவர்கள் உண்ணும் துரித உணவுகள் குறித்த விழிப்புணர்வு நாடகத்தினை கல்லூரி மாணவர்கள் நடித்து காட்டினர். நாடகத்தின் நிறைவில் பள்ளி மாணவர்களும் மருத்துவராக, மருத்துவப் பயனாளியாக நடித்துக்காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
அறிவியல் வழியில் மூடநம்பிக்கை ஒழிப்பு
உலக சுகாதார நாளின் மய்யக்கருத்தான “அறிவியலின் துணை கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து சுகாதாரத்தைக் காப்போம்” என்பதற்கிணங்க விரல் நகங்கள், கைகளில் கட்டியுள்ள கயிறுகள் ஆகியவற்றை நுண்ணோக்கியின் மூலம் பள்ளி மாணவர்களை பார்வையிடச் செய்தபோது அதில் நுண்கிருமிகள் இருப்பதை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். மேலும் இக்கிருமிகளால் ஏற்படும் நோய்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மூடநம்பிக் கைகளை விதைத்து நோய்களை உண்டாக்கும் கயிறு கட்டுதல் போன்ற பழக்கங்களை மாணவர்கள் இனிமேல் செய்யமாட்டோம் என்று தெரிவித்தனர்.
விழிப்புணர்வின் உச்சமாக திகழ்ந்த மதிப்பீட்டுப் போட்டிகள்
பதாகைகள், விளக்கப் படங்கள் கொண்டு விழிப்புணர்வை வழங்கிய இந்நிகழ்ச்சியினை மாணவர்கள் உள்வாங்கியுள்ளனரா என்பதனை அறியும் வண்ணம் வினாடி வினா, ஓவியம், நினைவுத் திறன் போட்டி, அறிவுத் திறனை மேம்படுத்தும் பல போட்டிகள் அவர்களுக்கு நடத்தப்பட்டது. அதில் ஆர்வமுடன் மாணவர்கள் பங்கு கொண்டு சரியான பதில்களை தெரிவித்ததோடு பலர் வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர்.
ஊட்டச்சத்து மிக்க கடலை மிட்டாய் மற்றும் சுண்டல்
இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பட்டாணி சுண்டல் மற்றும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டு, அனைவரும் சுகாதாரம் குறித்த உறுதிமொழியினை ஏற்றனர். காலை 10 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி இளம் பிஞ்சுகளின் மனதில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை விதைத்து மதியம் 1 மணியளவில் நிறைவு பெற்றது.
பெரியார் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் மல்லிகா மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்வில் பள்ளியின் சத்துணவு பணியாளர் விவேகி பகுத் தறிவுமிக்க பாடல்களை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

