டி.ஆர்.பாலு எம்.பி. பரிந்துரையின் பேரில் 10 பேருக்கு பிரதமர் மருத்துவ நிதி உதவி!

2 Min Read

புதுடில்லி, ஏப்.11- திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, தனது திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  பொதுமக்கள் பலரின் பல்வேறு மருத்துவ சிகிச்சை களுக்காக, சில சிறப்பு சூழ்நிலைகளில் ஏழை மக்களுக்கு இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்கு, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பகுதி நிதியுதவியில் இருந்து  “ரூ.25 லட்சம்” பெற்றுத் தந்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

மருத்துவ நிதிஉதவி

அம்பத்தூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளைச் சேர்ந்த லோகநாதன் மற்றும்  நல்லதம்பி ஆகியோரது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகவும், செங்கல்பட்டு மாவட்டம், திரிசூலம் பகுதியைச் சேர்ந்த இராமதாஸ், பல்லாவரத்தைச் சேர்ந்த சரினா, குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் தர்ஷித், திருப்பெரும்புதூர், ஆர்.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த சாவித்திரி, குரோம்பேட்டையைச் சேர்ந்த  முருகன், அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அலமேலு மற்றும் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த லாவண்யா ஆகியோரது புற்றுநோய் சிகிச்சைகளுக்காகவும், அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து என்பவரது இதயநோய் சிகிச்சைக்காகவும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவிடுமாறு முறையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனித்தனியே கடிதங்கள் எழுதியிருந்தார்.

டி.ஆர்.பாலுவின் பரிந்துரையினையும் வேண்டுகோளினையும் ஏற்ற பிரதமர் மோடி, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து நல்லதம்பி அவர்களின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாயும், லோகநாதன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மூன்று லட்சம் ரூபாயும், இராமதாஸ், முருகன், சிறுவன் தர்ஷித் ஆகியோரின் புற்றுநோய் சிகிச்சைகளுக்காக தலா மூன்று லட்சம் ரூபாயும், சரினா, சாவித்ரி, அலமேலு மற்றும் லாவண்யா ஆகியோரின் புற்றுநோய் சிகிச்சைகளுக்காக தலா இரண்டு லட்சத்து அய்ம்பதாயிரம் ரூபாயும், சவரிமுத்து இதயநோய் சிகிச்சைக்காக அய்ம்பதாயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இது விசயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவிற்கு, பிரதமர் அலுவலகம் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ள விவரம் பின் வருமாறு:

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, மருத்துவ சிகிச்சைகளுக்காக வழங்கப்படும் உதவித் தொகையானது மேற்கண்ட பயனாளர்கள் சிகிச்சை பெறும் – பிரதமர் தேசிய நிவாரண நிதியின்கீழ் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளான புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, கோயம்புத்தூர் கிட்னி சென்டர் & ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகள், சென்னை அடையாறு புற்றுநோய் மய்யம் மற்றும் சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் ஆகிய மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும், சிகிச்சை முடிவடைந்த பின்னர், உரிய ஆவணங்களின் நகலைப் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், ஆவணங்கள் கிடைத்த பின்னர், உதவித் தொகையானது உடனடியாக மேற்கண்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், பிரதமர் அலுவலகக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *