சென்னையில் இன்று முதல் பூத் சிலிப் விநியோகம்
சென்னை, ஏப்.10 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. எஸ்.அய்.ஆர் பணிகளுக்கு பின் சென்னையில் 28 லட்சம் வாக்காளர்களுக்கு இன்று (10.4.2026) முதல் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படுகின்றது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று (10.4.2026) முதல் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படுகின்றன. வாக்காளர் பெயர், முகவரி, வாக்கு மய்யம், அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். வாக்குச்சாவடி அலுவலர்கள் பூத் சிலிப் விநியோகத்தை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னையில் 4079 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப்கள் வழங்கப்படும். பூத் சிலிப் கொடுக்க வரும் போது வீட்டில் யாரும் இல்லையெனில் அருகில் உள்ள வீட்டில் இருப்பவர்களிடம் பூத் சிலிப் கொடுக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக கூட்டணிக்கு
வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு
சென்னை, ஏப்.10 சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சி.என்.ராமமூர்த்தி நேற்று (9.4.2026) நேரில் சந்தித்து, திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (9.4.2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், வன்னியர் கூட்டமைப்பின் தலைவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவருமான சி.என்.ராமமூர்த்தியும்-துணைத் தலைவர் கே.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஜோசப்ராஜ் நேரில் சந்தித்து பேசினர்.
அப்போது நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி நிர்வாகிகள் – தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தார்.
அப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் சி.என்.ராமமூர்த்தி அளித்த பேட்டியில், ‘‘ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தோம். முதல்வரை நேரில் சந்தித்து சட்டமன்ற தேர்தலுக்காக நேரில் ஆதரவு தெரிவித்தோம்.
திமுக அரசு பொருளாதார நடவடிக்கை, கல்வி என அனைத்திலும் சிறப்பாக நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும். அனைத்து தொகுதியிலும் திமுக கூட்டணிக்கு பரப்புரை செய்ய இருக்கிறோம். இடஒதுக்கீடு கேட்டு உயிர் நீத்தவர்களுக்கு திமுக அரசு பல உதவிகள் செய்தது. கலைஞர் பல திட்டங்களை செய்தார்” என்றார்.
சாத்தான்குளம் தீர்ப்பு எதிரொலி
ஆய்வாளர்கள் உத்தரவின்றி
லத்தியை எடுக்க காவல்துறையினருக்குத் தடை
சென்னை, ஏப்.10 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் அடித்துக் கொலை செய்த வழக்கில், ஆய்வாளர் சிறீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 காவல்துறையினருக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்துள்ளது.
இந்த தீர்ப்பு, காவல் துறையிரினடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பல்வேறு சம்பவங்களில் காவல்துறையினர் கொல்லப்பட்ட வழக்குகளில், இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்பட்டனவா என, கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு எதிரொலியாக, மாநிலம் முழுதும் காவல் நிலையங்களில், விசாரணையின்போது அடிக்க பயன்படுத்தும் இரும்பு கம்பிகள், பிளாஸ்டிக் குழாய்களை, அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்திருப்பதாவது:-
சாத்தான்குளம் தீர்ப்பை சுட்டிக்காட்டி, எங்களுக்கு காவல் அதிகாரிகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். ஒருவரை அடித்துதான் உண்மையை வரவழைக்க முடியும் என, நம்பும் காவல்துறையினர்கள், இப்பணிக்கே தகுதியற்றவர்கள்.
அறிவியல் ரீதியான புலனாய்வு விசாரணை முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஒருவரை அடிப்பதற்கு காவல்துறையினருக்கு எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை. ஆய்வாளர் மற்றும் டிஎஸ்பிக்கள் கண்காணிப்பின்றி, காவல் நிலையங்களில் யாரையும் விசாரிக்க கூடாது. ஆய்வாளர்களின் உத்தரவின்றி, காவல்துறையினர் லத்தியை எடுக்கவே கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

