சீர்காழி, ஏப்.8- தமிழ்நாடு வளரக் கூடாது என்பதே பா.ஜனதாவின் ஒரே நோக்கம் ஆகும். எனவே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக் கூடாது என்று சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீர்காழியில் நேற்று (7.4.2026) பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
நாள்தோறும் கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. அதில், தி.மு.க. கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை கூடக் கூட, தோல்வி பயத்தில் பழனிசாமியின் தரம் கீழே, கீழே இறங்கிக் கொண்டே போகிறது. 2026 தேர்தல் முடிவுகள் அவரை அரசியலில் இருந்தே துடைத்தெறிய வேண்டும்.
தமிழ்நாட்டில் தி.மு.க.ஆட்சியில் இருப்பதால்தான், தொகுதி மறுவரையறைப் பற்றி, பா.ஜனதா அரசு அறிவிப்பதற்கு முன்பே விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தினோம். ஒருவேளை பழனிசாமி ஆட்சியாக இருந்திருந்தால், தமிழ்நாட்டை கூறுபோட்டு விற்றிருப்பார்; நல்லவேளை இல்லை. வரும் தேர்தலிலும் பழனிசாமியும் – என்.டி.ஏ. கூட்டணியும் ஒரு தொகுதியில் கூட, வெற்றி பெறக் கூடாது.
‘பிளாக்மெயில்’ செய்வதா?
தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு எந்தச் சிறப்புத் திட்டத்தையும் செய்வதில்லை என சொல்லி வருகிறோம்.அதற்கு ஆதாரமாக, அண்மையில் வெளியான ஒரு செய்தியில், ஒன்றிய அரசின் உள்கட்டமைப்பு திட்டங்கள் அதிகமாக நடக்கும் ‘டாப் 10’ மாநிலங்கள் என்று பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில், இந்திய அளவில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மராட்டியம் அதில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால், அதிர்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், முதல் பத்து இடத்தில், தமிழ்நாடு எங்குமே இல்லை. வரி கட்டுவதற்கு மட்டும், தமிழ்நாட்டு மக்கள் பணம் வேண்டும். ஆனால், எங்களுக்கு எந்தத் திட்டமும் கிடையாதா? சிறப்புத் திட்டமும் இல்லை, பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டுக்கு முட்டைதான் போடுகிறார்கள். ரயில்வே திட்டங்களிலும் தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்தான் போடுகிறார்கள்!
இதில் மதுரைக்கு வந்த மராட்டிய பா.ஜனதா முதலமைச்சர் பட்னாவிசிடம் “மதுரைக்கு ஏன் மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டது?” என்று செய்தியாளர்கள் கேட்கிறார்கள். அதற்கு அவர், மதுரையில் பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றால், மதுரைக்கு மெட்ரோ கிடைக்கும்” என்று சொல்கிறார். அவருக்கும், மதுரை மெட்ரோவுக்கும் என்ன சம்பந்தம்? அவர் என்ன பிரதமரா? இல்லை.
அவருக்கு இப்படி, ‘பிளாக் மெயில்’ செய்ய வெட்கமே இல்லையா, பழனிசாமி இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
“உங்கள் ஊர் மாப்பிள்ளையாக,
மருமகனாக ஓட்டுக்கேட்கிறேன்”
சீர்காழி பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் மற்ற ஊருக்கெல்லாம் நான் முதலமைச்சர். ஆனால், இந்த சீர்காழியைப் பொறுத்தவரையில், நான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே, உங்கள் ஊர் மாப்பிள்ளை. 7ஆவது முறையாக தி.மு.க. அரசு அமைய, ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமைய, உங்கள் ஊரில் பெண்ணை எடுத்த உரிமையோடு, உங்கள் ஊர் மருமகனாக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.
என்னதான் உங்கள் ஊர் மருமகனாக இருந்தாலும், வெறும் கையோடு நான் உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. 5 ஆண்டுகாலமாக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்த உரிமையுடன் உங்கள் ஆதரவைக் கேட்க வந்திருக்கிறேன்’ என்றார்.
நடைப்பயிற்சியின்போது வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேநீர்க் கடையில் அமர்ந்து தேநீர் குடித்தும் ஆதரவு திரட்டினார்
மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு நேற்று (6.4.2026) முன்தினம் இரவு வந்தார்.
நேற்று (7.4.2026) காலை 7 மணியளவில் சீர்காழியின் முக்கிய வீதிகளான புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை சாலை மற்றும் கடைவீதி பகுதிகளில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். முதலமைச்சரை நேரில் கண்ட பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததுடன், ஆர்வத்துடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். அவர்களிடம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் செந்தில் செல்வனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நடைப்பயிற்சியின்போது ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்து தேநீர் குடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தவர்களிடம், உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இடிந்து விழும் பாலங்கள்
ஒன்றிய அரசு செய்யும் சில வேலையும், ஒழுங்காகச் செய்வது இல்லை. இங்கு பக்கத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.6 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஒன்றிய அரசு கட்டிய மேம்பாலம் உள் வாங்கி சேதமடைந்திருக்கிறது. நிறைய இடத்தில் திறப்பதற்கு முன்பே கொலாப்ஸ் ஆகிறது. பிரதமர் மோடியின் குஜராத்திலேயே, மோர்பி பாலம் இடிந்து விழுந்து 140 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள். இப்படி என்னால் பெரிய லிஸ்டே போடமுடியும்.இப்படி ஊழலும், பொறுப்பின்மையும், அலட்சியமும் நிறைந்த அரசு தான் ஒன்றிய பா.ஜனதா அரசு.
இவர்கள் அனைவரும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு வந்து நம்மை விமர்சிக்கிறார்கள், வாக்கு கேட்கிறார்கள் என்று தெரியவில்லை?
பா.ஜனதாவின் ஒரே நோக்கம் தமிழ்நாடு வளரக்கூடாது. ஆனால், அதையெல்லாம் மீறித்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான திட்டங்களை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறேன்.
திராவிட மாடலும்,
அடிமை மாடலும்!
உங்களுக்கு என்ன செய்திருக்கிறோம் என்று சொல்லி, இனி செய்யப் போவதை சொல்லி வாக்கு கேட்டால், அது நம்முடைய திராவிட மாடல். அவதூறுகளை மட்டுமே பேசி, பொய்யை மட்டுமே சொன்னால், அது ‘அடிமை பழனிசாமி மாடல்’. சாதனையோடு, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக துணிச்சலுடன் குரல்கொடுக்கும் ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா? இல்லை, டில்லிக்கு அடிமை சேவகம் செய்யும் பழனிசாமி ஆட்சி வேண்டுமா? நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைத்தான் நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

