தீண்டாமை என்னும் சொல் பெரியாருக்கே சொந்தமானது போன்று அவரால் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொல், அறுபது ஆண்டுகளுக்கு முன்னும் அறுபது ஆண்டுகளுக்கு பின்னும் ஆகிய இரு காலக்கட்டங்களிலும் இந்தச் சமுதாயம், தீண்டாமை என்ற அதே சொல்லைப் பெரியாருடன் பொருத்திப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் வியப்பிற்குரிய செய்தி, ஆம், அன்று 1950களிலும் பெரியார் தீண்டத்தகாதவராகத் தெரிந்தார், இன்று 2010க்குப் பின்னர் இன்றும் தீண்டத்தகாதவராகவே எண்ணப்படுகிறார். அதே வேளை 20.21 ஆகிய இரு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் பெரியாருக்குப் பங்கு இருந்திருக்கிறது: அவரது பணி பேசப்பட்டிருக்கிறது. இவ்வாறு எதிர்ப்பும் ஏற்புமாய் எழுந்தவர். வளர்ந்தவர். திகழ்ந்தவர் பெரியார்.
தகைமைசால் தலைவர்
தமிழகத்தைப் பொருத்தவரை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் பெரியாரே: பெரியாரே! தான் உயர்வு பெற எண்ணாமல் தமிழன் உயர்வு பெற வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர் அவர் ஒருவர்தானே! வாழுங்காலத்திலும் வாழ்வுக்குப் பின்னும் போற்றலும், தூற்றலும்,ஏற்பும், எதிர்ப்பும் பெரியாருக்குச் சமமாகவே இருந்தது. வாழ்த்தையும், வசையையும் அவர் சமமாகவே புரிந்து கொண்டார். வசையாளர்களை விட வாழ்த்தாளர்களிடம் சிறிது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று எண்ணுவதுதான் பெரியாரின் இயல்பு.
இயல்பாகப் பொருந்திய தலைமைப் பண்பு
தம் வாழ்நாளில் யாரையும் அவர் தலைவராக ஏற்றுக் கொண்டவரில்லை.. ஓர் இயக்கத்தில் தொண்டர் நிலையில் தொடங்கிப் படிப்படியாக உயர்ந்து தலைவர் ஆனவரும் இல்லை. ஏதோ புறக்காரணங்களால் ஆக்கப்பட்ட தலைவரும் இல்லை. இயல்பாகவே தலைமைப்பண்பு அவருக்குப் பொருந்தி வந்தது. இன்னும் சொல்லப் போனால் அவரிடம் வாய்த்திருந்த அறிவு, ஆற்றல், அருங்குணங்கள் ஆகியவையே ஓர் தலைமைக்குரிய இலக்கணங்களாக இந்தச் சமூகத்திற்குக் கற்பிக்கப்பட வேண்டியவையாகத் திகழ்ந்தன.
தற்சிந்தனையாளர்
பெரியாரின் மிகப் பெரிய வலிமை,அவருடைய சொந்த அறிவு, ‘உன் சொந்தப் புத்தியைப் பயன் படுத்திப் பார்’ ‘மனிதனிடம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஒரே கருவி புத்திதான்’ என்றெல்லாம் அவர் பிறர்க்குச் சொல்லும் முன்னே தன் சொந்த அறிவைப் பயன்படுத்தினார். சொந்தமாகச் சிந்தித்தார்.
‘என்னுடைய பகுத்தறிவின் துணைகொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்துச்’ செயல்படுவதாகத் தானே கூறிக் கொண்டார். இன்னும் சொல்லப் போனால் தன் சொந்த அறி விலும், சிந்தனையிலும் முழு நம்பிக்கை வைத்தார்.
முழு ஒப்படைப்பு
பெரியார், தான் ஏற்ற இலட்சியத்திற்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர். ஏனோ தானோ என்ற பணி எப்போதும் அவரிடம் கிடையாது. இது நடக்குமா. நிறைவேறுமா. நடக்குமளவு நடக்கட்டும் என்ற ஊசலாட்டத்துடன் அவர் எந்தச் செயலையும் தொடங்க மாட்டார். ‘சுதந்திரநாள் துக்கநாள்’ என்று அறிவித்த அவர் துணிவை எண்ணிப் பாருங்கள். இந்திய துணைக் கண்டத்தில் நூறு விழுக்காட்டினரும் ஏற்றுக் கொண்ட நிகழ்வா இந்திய சுதந்திரம்? மறுப்பதற்கும், முரண்படுவதற்கும்,தயங்குவதற்கும் வடகோடி முதல் தென்கோடி வரை பலருக்கும் பலகாரணங்கள் இருக்கத்தான் செய்தன. சுதந்திரத்தை மறுத்தால், தேசவிரோதிகளாகி விடுவோம்: பழி தூற்றுவார்கள்: மக்கள் செல்வாக்கு குறைந்துவிடும் என்றெல்லாம் எழுந்த தயக்கத்தில் பலரும் இருந்தனர்.
”வெறும் அரசியல் மாற்றமே இந்த சுயராஜ்ஜியம்: பொதுசன விடுதலையில்லை!’
என்ற தன் கருத்தில் வலுவாக இருந்ததால் பெரியாரால் மட்டும்தான், ‘சுதந்திரநாள் துக்கநாள்’ என அறிவிக்க முடிந்தது.ஏற்ற இலட்சியத்திற்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட தகுதியாளர் அல்லவா!
ஏற்றுக் கொண்ட இலட்சியத்தைச் செயல்படுத்து வதில் தன் தொண்டர்கள் அனைவரைக் காட்டிலும் தானே முன் நிற்பார் பெரியார். தோற்றுவிடுவோம்; வீழ்ந்து விடுவோம் என்ற எதிர்மறைச் சிந்தனை அவருக்கு எப்போதும் இம்மியளவும் இருந்ததில்லை. மக்கள் எதற்கெல்லாம் ஆதரவு தருவார்களோ அவற்றையே பட்டியலிட்டுத் தன் கட்சியின் கொள்கைகள் அவை எனக் கூறிக் கட்சி ஆரம்பிக்கும் தலைவர்கள் காலம் இது. பெரியாரோ, தன் சிந்தனை இது; கொள்கை இது முடிவு இது! இதை எவர் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கவலை இல்லை. நானே பரப்புநர்: நானே தொண்டர் எனச் செயல்பட்டவர். ஆயிரம் பேர் தன் இயக்கத்தில் தொண்டு செய்யப் பின் தொடர்ந்தாலும்; பின் தொடர்ந்த ஆயிரம் பேரும் விலகி விட்டாலும், கலங்காத, கவலைப்படாத, பொருட்படுத்தாத பாறை நெஞ்சமுடையவர் பெரியார். மோதுவது மலையுடன் என்றாலும்; தான் மட்டும்தான் மோதிக் கொண்டிருக்கிறோம் என்றாலும்: மலை விழும்வரை அல்லது அவர் விழும்வரை முட்டிக் கொண்டேயிருப்பார் பெரியார்.
வெளிப்படையாகப் பேசும் துணிவு
பெரியார் பேசிய காலம். பாமரர்கள் வாழ்ந்த காலம். மடமை கோலோச்சிய மண்ணாக இருந்தது நாடு. கற்றவர் விரல் விட்டு எண்ணத் தக்கவரே. கல்லாமை, இல்லாமை.அறியாமை பரவியிருந்த காலம் அது. புராணத்தையும், இதிகாசத்தையுமே வரலாறாகக் கண்டு அதையே கற்றவர். கற்பித்தவர் காலம். தான் நம்பியதையே விடாமல் பற்றியிருக்கும் பேதைமை மிக்கோர், மூர்க்கர்கள் நிரம்பி வழிந்த சமுதாயம் அது. அதில், பெரியார் கூற வந்த கருத்துக்களோ முழு முரண்பாட்டுக் கருத்துகள்; முன்னைய நம்பிக்கைகளைப் புரட்டிப் போட்ட சிந்தனைகள்: தாம் இதுவரை ஏற்றுக் கொண்டவைகளுக்கு முற்றும் எதிர்மாறானவை. ஆனால், பெரியார் பேசினார்… தவறுகளை, குற்றங்களை, ஏமாற்றப்பட்டதை வெளிப்படையாகப் பேசினார்… நீ நம்புவது பொய்; உன்னை நம்பவைத்தவன் ஏமாற்றுபவன்; உன் நம்பிக்கை அறிவுக்குப் பொருந்தாதது என்பதைத் துணிச்சலாகச் சொன்னார்.
‘புத்தியில்லையா?’ எனப் புத்தியிருப்பது தெரியாமல் இருந்தவனிடமும் கேட்டார்: தனக்கு மட்டும்தான் புத்தியிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தவனிடமும் கேட்டார். இந்த வெளிப் படைத் தன்மையும், துணிச்சலும் உடையவர் பெரியார் மட்டுமே.
வாதத்திற்கு அஞ்சாத வழக்கறிஞர்
பொதுக் கூட்டங்களிலும் சரி, சிறப்பு அரங்கங்களிலும் சரி, பெரியார் பேச்சிற்கு எத்தனையோ சமயங்களில் முரண்பாடும். எதிர்ப்பும், வினாக்களும் எழுவது உண்டு!.. இதை அவர் இயல்பானதாகவே ஏற்றுக் கொண்டார். தன் கருத்தை மேலும் வலியுறுத்த, புரிய வைக்கக் கிடைத்த கொள்கை விளக்க வாய்ப்பாகவே வினாக்களையும், விவாதங்களையும் மகிழ்வுடன் ஏற்றார். வினா எழுப்பியவரை மதிப்பார்; முன்னிலைப் படுத்துவார்; தன் பற்றாளர்களின் எதிர்ப்பிலிருந்து அவரைக் காத்து ஆதரவளிப்பார்: கூட்டம் முழுவதும் புரிந்து கொள்ளுமாறு வினாவைச் சொல்லச் செய்வார்; வினா – விடை வடிவில் விவாதத்தை மேல் எடுப்பார்; தெளிவுறுத்துவார்! பேச்சில் மட்டுமல்ல; எழத்திலும் இந்தநிலை தான். காலணா கடுதாசியில் கடைக் கோடியிலுள்ள கந்தனோ, முருகனோ எழுதும் மறுப்புக் கடிதத்திற்குத் தன் ‘குடிஅரசு’ இதழில் விளக்கமாக விரிவாக பதில் எழுகத் தவறவே மாட்டார். ஏனென்றால், தன் கருத்தை உறுதியாக எவருடனும் விவாதித்து எற்று கொள்ள வைக்க முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் அவரிடம் நிறைந்திருந்தது.
வன்முறை விரும்பாமை -இடுக்கண் அழியாமை
முரட்டுத் தோற்றம் காட்டும் உடல்வாகு பெரியாருடையது. ஆனால். அவர் உள்ளமோ மிக மென்மையானது. கொள்கையில் கரடுமுரடாகத் தோன்றுபவர்; ஆனால், எவருக்கும் நட்பும், அன்பும். மதிப்பும் கொடுத்துப் பழகுவார். யாருக்கும் சிறு தீங்கும் எண்ணவும் அஞ்சும் இயல்பினர். வாடிய மனிதனைக் கண்ட போதெல்லாம் வாடியவர்.
தீக்கொளுத்து-உடைத்தெறி-அழித்தொழி என வஞ்சக மதத்தின் மீதும் கற்பிக்கப்பட்ட கடவுள்மீதும் தீப்பரப்பியவர் அவர். ஆனால் தன் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்தவர்கள், தன்னால் உண்டான பாதிப்பின் காரணமாகப் புழுதிவாரித் தூற்றியவர்கள் எவர்மீதும் இந்தக் கோபத்தையும் எதிர்ப்பையும் வன்முறையையும் எண்ணியவரும் இல்லை: தூண்டியவரும் இல்லை!
இதற்கு மாறாக எத்தனையோ இடங்களில் அவர்மீது பாய்ந்த வன்முறைத் தாக்குதல்கள் பலப்பல…. தமது நம்பிக்கையின் வேரைச் சாய்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத பாமரர்கள், தங்கள் பொய்களையும் புளுகு மூட்டைகளையும் அம்பலப்படுத்திப் பிழைப்பைக் கெடுக்கிறாரே என்று எரிச்சலடைந்த பழமைவாதிகள், தங்கள் இன மேலாண்மைக்கு எதிராகப் பெரியாரைப் பேசவிடக்கூடாது என்பதற்காகச் சில பெரியவர்களால் தூண்டிவிடப்பட்ட கூலிக் கூட்டத்தினர். பெரியார் மீது கல் எறிந்தனர் தடி எடுத்தனர். அத்தனையையும் பெரியார் ஏற்றார்.
இடும்பைக்கு இடும்பைப் படுப்பர்; இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்! தான் பெரியார்.
மனிதனை நினை
யாதும் ஊரே. உண்டாலம்ம இவ்வுலகம்
முதற்றே உலகு, உலகம் யாவையும்
உலகெலாம் உணர்ந்து, உலகம் உண்ண உண்
என அன்று தொட்டு இன்று வரை தமிழன் சிந்தனை விரிந்ததாகவே இருந்தது. தன்னை மட்டும் எண்ணாமல் ஊரையும் உலகையும் நினைத்தே வாழ்ந்தவன் தமிழன். இன்றைக்கும் எலும்பு துருத்தியபடி ஏக்கத்துடன் நிற்கும் எத்தியோப்பிய ஏழைக் குழந்தையின் படத்தைப் பார்த்துவிட்டுத் துடிக்கும் நெஞ்சுக்குச் சொந்தக்காரன் தமிழன். ஓரறிவுயிர் முதல் அய்ந்தறிவுயிர் வரை உள்ள புல் பூண்டு தொடங்கி புலி, சிறுத்தை வரை எல்லா உயிர் நலன்களையும் எண்ணி மகிழும் நெஞ்சினன் தமிழன், ஆனால் அவன் அருகிலேயே, அவன் புரண்ட மண்ணில் புரண்டு, அவன் குடித்த நீரையும் காற்றையும் குடித்து வாழும் தன்னொத்த இன்னொரு மனிதனிடம் மட்டும் அவனுக்கு விருப்பேயில்லாத வெறுப்பு, அவனைக் குற்றுயிராக்கிக் களிக்கும் கொடு நெஞ்சம், குனியக்குனிய அவன் தலையில் குட்டி மகிழும் கொடுமதி ஏன் பிறந்தது? அவன் நன்மையை. நட்பை மட்டும் நீ ஏன் எண்ணிப் பார்க்க மறந்து விட்டாய்? உன் சக மனிதனை எண்ணிப் பார்க்க இடையூறாய் இருப்பவன் கடவுளே ஆனாலும்,
அந்தக் கடவுளை மற; இந்த மனிதனை நினை.
என்ற தகைமை பொருந்திய தலைமைப் பண்பாளர் பெரியார்.
மானங் கருதா மாண்பு
குடிசெயல் வகை என்ற அதிகாரத்தில்…
குடிசெய்வார்க்கில்லை பருவம்: மடி செய்து
மானங் கருதக் கெடும்.
என்று பொது வாழ்விற்கு இலக்கணம் வகுத்தார் வள்ளுவர். பெரியாருக்குப் பிடித்த திருக்குறள் இது. கூடி என்ற சொல்லின் சுருக்கம்தான் குடி. தன்னுடன் கூடி வாழும் கூட்டத்தின் நலனை உயரச் செய்வதுதான் குடி செயல்வகை. குடி என்றால் தன் குடும்பம் இல்லை. தன்னுடன் கூடிவாழும் ஒரு கூட்டம்தான் குடி. கூடுதல் – பொருந்துதல். இந்த நிலப்பரப்பில் இனத்தாலும், மொழியாலும். நெடுநாள் இணைந்து வாழ்ந்த இருப்பாலும் பொருந்திப் போன மனிதக் கூட்டங்கள் ஆங்காங்கே படிந்து கிடந்தன. அவையே ஊராயின நாடாயின. தான் வாழும் கூட்டத்திற்காகத் தன் வாழ்வை ஒப்படைத்துக் கொள்வதுதான் குடிசெயல் வகை, அதாவது ‘பொதுத் தொண்டு’
இந்தப் பொதுத் தொண்டில் ஈடுபடுபவன் நேரம் காலம் கருதக் கூடாது: சோம்பேறியாக இருக்கக்கூடாது; தன்மானம் பார்க்கக்கூடாது என்பதுதான் மேலே உள்ள குறட்பாவின் கருத்து. தன் சொந்த வாழ்வில் யாரும் தன்னை அவமானப்படுத்திவிட்டால் தன்மானம் கொண்டு எழலாம் : எதிர்க்கலாம். ஆனால் பொதுவாழ்வில் உன் தன்மானத்திற்கு இடமில்லை. சிலர் போற்றுவர்: சிலர் புழுதிவாரித் தூற்றுவர். இரண்டையும் ஒத்ததாக ஏற்கும் உள்ளம் வேண்டும். இந்தத் தகுதி, தலைவர் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய தகுதி. ஆனால் எந்தத் தலைவரிடமும் இல்லாத தகுதியாகிவிட்டது. இன்று, ஒரே கூட்டத்திற்கு இத்தனை கட்சி. ஒரே கொள்கைக்கு இத்தனை இயக்கம் எனத் தன்னுடைய மானத்தை மட்டும் பார்த்த தலைவர்களால் பெருகிவிட்டன.
ஆனால் பெரியாரோ, பெரியோரை வியக்க வில்லை. சிறியோரை இகழவில்லை. இந்தத் தமிழர் கூட்ட நலனுக்காக விட்டுக் கொடுத்தார். வீம்பு பாராட்டாதவராயிருந்தார். தன் மீது பகைமை பாராட்டியவர்களிடம்கூட தாமே வலியச் சென்று நட்புக்கொண்டார்.
தான் மதிப்புப் பெற வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய மாட்டார். தனக்கு மட்டும் மதிப்புத் தரும் அரச பதவிகளைத் தன் இறுதிவரை ஏற்க மறுத்தார். தன் சமுதாயத்திற்குத் தான் இந்தப் பதவியைப் பெறுவதால் நன்மை ஏற்படாது என்பதைத் திண்ணமாகப் புரிந்துகொண்டவர் அவர்.
சமூக வாழ்வில் பலமுறை அவர் அலட்சியப் படுத்தப்பட்டார் (மதிக்கப் பெறாமை) பன்முறை தோற்கடிக்கப்பட்டார்: தனிமைப்படுத்தப்பட்டார். இதைப் பொதுமக்கள் செய்தார்கள்; தான் சார்ந்த கட்சி செய்தது; தன்னைச் சார்ந்திருந்த தொண்டர்கள் செய்தார்கள். ஆனால் அதே பொது மக்களிடம். அதே கட்சியிடம், தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற அதே தொண்டர்களிடம் வேறு வேறு சமயங்களில் பெரியார் மீண்டும் நட்புக்கொண்டார். அவர்களை ஆதரித்தார்… ஏன்? எதற்காக? தன் கூட்டத்தின் (குடி) நலனுக்காக.
மானம் பார்க்காது தமிழன் மானம் காத்தார்
எவர்க்கும் தலைவராக வெகுமானம் பெற்றார்!
நன்றி: ‘பெரியார் என்னும் பேரொளி’,
ஆசிரியர்: புலவர் சி.முத்தையா,
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
