ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் இயல்பு வாழ்க்கை என்ன பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

வாசிங்டன், ஏப். 5- மத்திய கிழக்கில் வெடித்துள்ள ஈரான் மீதான போர், வெறும் எல்லைப் போராக மட்டும் நின்றுவிடாமல், வீட்டுச் சமையலறை முதல் குழந்தைகளின் பலூன்கள் வரை அனைத்தையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

‘நியூயார்க் டைம்ஸ்’ (NYT) ஏட்டில் ஆதாரத்துடன் வெளிவந்துள்ள இந்தத் தகவல்கள், உலகம் எந்தளவுக்கு ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளது என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

ஈரானுடன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திவரும் யுத்தம் எந்தெந்த நாடுகளை எப்படி பாதித்துள்ளது என்பது குறித்த ஒரு பார்வை.

விவசாயமும் உணவும்

ஆஸ்திரேலியாவின் கோதுமை பாதிப்பு: உலக உர விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு ‘ஹார்மூஸ்’ நீரிணை (Strait of Hormuz) வழியாகவே செல்கிறது. போர் காரணமாக உர விலை விண்ணைத் தொடுவதால், ஆஸ்திரேலிய விவசாயிகள் கோதுமை பயிரிடுவதைக் குறைத்துள்ளனர்.

இனிப்பு கசக்கிறது: உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளரான பிரேசில், தற்போதுள்ள எரிசக்தி தட்டுப் பாட்டைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட, சர்க்கரைக்கு பதில் ‘பயோ-ஃபியூயல்’ (Biofuel) தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சர்க்கரை விலை உயர வாய்ப்புள்ளது.

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகள்

குறுகிய நேரக் குளியல்: தென் கொரியா தனது குடிமக்களைக் குறைந்த நேரம் குளிக்குமாறு (Shorter showers) அறிவுறுத்தியுள்ளது. அங்கு தண்ணீர் சூடுபடுத்தப் பயன்படுத்தப்படும் எரிசக்தி இறக்குமதி செய்யப்படுகிறது.

அரைக்கை சட்டைகள் (Short Sleeves): தாய்லாந்து பிரதமர் தனது அமைச்சரவை மற்றும் அரசு ஊழியர்களை அரைக்கை சட் டைகள் அணியுமாறு கூறியுள்ளார். இதன் மூலம் ஏசி பயன்பாட்டைக் குறைத்து மின்சாரத்தைச் சேமிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

மின் தூக்கி (Elevator) தவிர்த்தல்: பிலிப்பைன்ஸ் அரசு ஊழியர்களை லிஃப்ட் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கேட்டுக்கொண்டுள்ளது. எகிப்து நாடு வாரத்தில் 5 நாட்கள் கடைகள் திறக்கும் நேரத்தைக் குறைத்துள்ளது.

போக்குவரத்து
மற்றும் வர்த்தகம்

தேங்கி நிற்கும் ஆடைகள்: வங்கதேசத்தின் பின்னலாடை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து ரத்து செய்யப் பட்டுள்ளதால், ஏற்றுமதி செய்ய வேண்டிய ஆடைகள் விமான நிலையங்களிலேயே மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

மருந்து தட்டுப்பாட்டு அபாயம்: துபாய் மற்றும் தோஹா போன்ற சரக்கு போக்குவரத்து மய்யங்கள் மூடப்பட்டுள்ளதால், புற்றுநோய் மருந்துகள் மற்றும் குளிர்சாதன வசதியில் வைக்கப்பட வேண்டிய முக்கிய மருந்துகள் உரிய நேரத்தில் நோயாளிகளைச் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரம்
மற்றும் முதலீடு

வீடு வாங்குவது கடினம்: அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்து, அதன் விளைவாக வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் (Mortgage rates) உயர்ந்துள்ளன. இதனால் சாமானியர்கள் வீடு வாங்குவது எட்டாக்கனியாகி வருகிறது.

தங்கத்தின் வீழ்ச்சி: வியப்பாகத் தோன்றினாலும், முதலீட்டாளர்கள் பணப்புழக்கத்திற்காகத் தங்கத்தை விற்று வருவதால் அதன் விலை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எதிர்பாராத பாதிப்புகள்

கூடுதல் விலை டிராக் சூட்கள்: பெட்ரோலியப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் செயற்கை இழைகளால் (Petrochemicals) உருவாக்கப்படும் டிராக் சூட் மற்றும் விளையாட்டு உடைகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காணாமல் போகும் பலூன்கள்: உலகின் ஹீலியம் (Helium) தேவையில் மூன்றில் ஒரு பங்கு கத்தாரில் இருந்து கிடைக்கிறது. போர் சூழலால் ஹீலியம் தட்டுப்பாடு ஏற்பட்டு, பார்ட்டி பலூன்கள் கிடைப்பது அரிதாகலாம்.

கலை மற்றும் விளையாட்டு

ரத்து செய்யப்பட்ட போட்டிகள்: பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியாவில் நடைபெறவிருந்த புகழ்பெற்ற ‘ஃபார்முலா-1’ (Formula-1) கார் பந்தயங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒத்திவைக்கப்பட்ட இசை நிகழ்ச்சிகள்: ஷகிரா (Shakira), கிறிஸ்டினா அகுலேரா போன்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கை ஏற்கெனவே புதன் கிழமைகளைப் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. லாவோஸ் நாடு பள்ளிகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே நடத்த முடிவு செய்துள்ளது. இவை அனைத்தும் எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவைக் குறைப்பதற்கான தீவிர முயற்சிகளாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *