புதுடில்லி, ஏப். 2- மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையிலும், இந்தியாவில் அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாகவும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமிருக்காது என்றும் ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது.
பெட்ரோல் – டீசல் விலை உயருமா?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களும், அதற்கு பதிலடியாக ஈரான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் மேற்கு ஆசியப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. இதனால் உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பன்னாட்டு சந்தையில் கடந்த மாதம் ஒரு பேரல் 70 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, தற்போது 100 டாலராக உயர்ந்துள்ளது.
இந்தச் சூழல் குறித்து ஆலோசிக்க நேற்று (1.4.2026) ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்த முக்கியத் தகவல்கள் வருமாறு:
விலை மாற்றம் இல்லை
பன்னாட்டு சந்தையில் விலை உயர்ந்தாலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தப் போவதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
வரியில் மாற்றம்
நுகர்வோரைப் பாதுகாக்கும் பொருட்டு கலால் வரியை அரசு நீக்கியுள்ளது. மேலும், உள்நாட்டில் டீசல் தட்டுப்பாட்டைத் தவிர்க்க ஏற்றுமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
போதிய கையிருப்பு
நாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் தடையின்றி இயங்கி வருகின்றன. அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இந்தியாவிடம் உள்ளது.
சில்லறை விற்பனை நிலையங்களில் எங்கும் எரிபொருள் வறட்சி ஏற்படவில்லை. “எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் முன்கூட்டியே பெட்ரோல், டீசலை வாங்கி சேமிக்கத் தேவையில்லை. நாட்டின் எரிபொருள் சந்தை சீராக உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார். 2022 ஏப்ரல் முதல் பெட்ரோல் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி சீராகப் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய வரிவிதிப்பு முறையில் மாற்றம்!
புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025′ அமல்!
புதுடில்லி, ஏப். 2- இந்தியாவின் நேரடி வரி விதிப்பு முறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, புதிய வருமான வரிச் சட்டம் – 2025 நேற்று (1.4.2026) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. 60 ஆண்டுகாலப் பழைமையான 1961-ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறை: வரி கொள்கைகளில் மாற்றங்கள் ஏதுமின்றி, பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய மொழியிலும், தெளிவான வடிவத்திலும் இந்தச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று தற்போது சட்டமாக உருவெடுத்துள்ளது.
புதிய படிவங்கள்
நேரடி வரிகளுக்கான ஒன்றிய வாரியம் (CBDT) கடந்த மார்ச் 20-ஆம் தேதி இதற்கான புதிய விதிகளை வெளியிட்டது. இதன் மூலம் வரி தாக்கல் செய்யும் படிவங்கள் மற்றும் செயல்முறைகள் கணிசமாக எளிமையாக்கப்பட்டுள்ளன.
நவீனமயமாக்கல்: இந்தியாவின் வரி நிர்வாகத்தை நவீனப்படுத்துவதோடு, ‘அகண்ட பாரதம்’ இலக்கை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்லாக இந்தச் சீர்திருத்தம் பார்க்கப்படுகிறது.
“இந்த புதிய சட்டம் இந்திய வரி நிர்வாகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இது வரி செலுத்துவோருக்கு கூடுதல் தெளிவையும், எளிமையையும் வழங்கும்.” என வருமான வரித் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் வரி செலுத்துபவர்கள் இனி சிக்கலான சட்டச் சொற்களுக்குப் பதில், எளிமையான மற்றும் வெளிப்படையான நடைமுறைகளைப் பின்பற்றி தங்களது வரி கடமைகளை நிறைவேற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் பின்னலாடைநூல் விலை உயர்வு
பெரு முதலாளிகளுக்கு லாபம் ஈட்ட வழிவகை செய்யும் மோடி!
திருப்பூர், ஏப். 2– தமிழ்நாட்டின் பின்னலாடை உற்பத்தி மய்யமான திருப்பூரில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நூல் விலை கிலோவுக்கு ரூ.12 உயர்ந்துள்ளதால் தொழில்துறையினர் பெரும் கவலையடைந்துள்ளனர்.
திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆர்டர்களைப் பெற்ற பிறகு நூல்களைக் கொள்முதல் செய்து ஆடைகளைத் தயாரிக்கும் இவர்களுக்கு, மூலப்பொருளான நூலின் விலை உயர்வு பெரும் சவாலாக மாறியுள்ளது.
கடந்த மாத உயர்வு: மார்ச் மாதத்தில் கிலோவுக்கு ரூ.7 உயர்த்தப்பட்டது.
தற்போதைய உயர்வு: ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே நேற்று முன்தினம் (31.3.2026) ரூ.10, நேற்று (1.4.2026) ரூ.2 என மொத்தம் ரூ.12 உயர்ந்துள்ளது.
காரணங்கள்: பஞ்சு தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி செய்யப்படும் பஞ்சு மீதான வரி விதிப்பு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தொடர்ச்சியான விலை உயர்வால் ஆடை உற்பத்திக்கான செலவு அதிகரித்து, முன்கூட்டியே ஒப்பந்தம் செய்த ஆர்டர்களை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய அரசு தலையிட்டு பஞ்சு வரி விதிப்பு மற்றும் தட்டுப்பாட்டுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செயற்கை இழை தயாரிப்பில் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனம் நெருக்கடி தருவதால் பருத்தி இறக்குமதி மட்டுப்படுத்தி செயற்கை இழைகளையே வாங்க மறைமுக நிர்பத்தம் செய்யப்படுவதாக இந்த விலையேற்றம் குறித்து விமர்சனம் செய்துவருகின்றனர்.
