கான்பூர், ஏப்.2 உத்தர பிரதேசத்தின் கான்பூரில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சட்டவிரோதமாக நடந்து வந்த சிறுநீரக உறுப்பு கொடையை கண்டுபிடித்து, அதில் தொடர்புடைய அய்ந்து மருத்துவர்கள்கள், ஒரு இடைத்தரகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுநீரக கொடையாளர் ஒருவருக்கு பேசிய பணத்தை வழங்காமல் இழுத்தடித்ததால், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாடு முழுதும் உடல் உறுப்பு கொடை சட்டரீதியாகவே நடக்க வேண்டும்.
பொதுவாக கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளை உறவினர் களிடம் இருந்து நோய்வாய்ப்பட்ட நபர் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லை.
இந்தச் சூழலில், ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி, ஒரு சிலர் சட்டவிரோதமாக உடல் உறுப்பு கொடையை பெற்று வருகின்றனர்.
சட்டவிரோத கும்பல்
அப்படியொரு சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நிகழ்ந்துள்ளது. பீகாரை சேர்ந்த ஆயுஷ் என்ற எம்.பி.ஏ., பட்டதாரி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். வேலை நிமித்தமாக தற்போது உ.பி.,யின் மீரட்டில் வசித்து வருகிறார்.
இவரது வறுமையை அறிந்து கொண்ட, ஷிவம் அகர்வால் என்பவர், எட்டு ஆண்டுகளாக சிறுநீரக செயலழிப்பால் அவதிப்பட்டு வரும் தன் உறவினருக்கு சிறுநீரக கொடை தரும்படி கேட்டுள்ளார். இதற்காக 10 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும் ஆசைக் காட்டி யுள்ளார்.
குடும்ப வறுமையை போக்க இதற்கு ஆயுஷ் சம்மதித்ததும், உ.பி.,யின் கான்பூரில் உள்ள கல்யாண்பூர் பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் வைத்து அவரது சிறுநீரகம் அகற்றப்பட்டது.
பின்னர், அதை மீரட்டை சேர்ந்த பரூல் தோமர் என்பவருக்கு 60 லட்சம் ரூபாய்க்கு விற்று ஷிவம் அகர்வால் உள்ளிட்ட சட்டவிரோத கும்பல் லாபம் பார்த்துள்ளது.
போதாகுறைக்கு பேசியபடி, 10 லட்சம் ரூபாய் வழங்காமல் வெறும் மூன்றரை லட்சம் ரூபாய் மட்டுமே ஆயுஷிடம் கொடுத்துள்ளனர்.
இதனால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆயுஷ், இது பற்றி காவல்துறையிடம் புகார் அளிக்க, சட்டவிரோத உடல் உறுப்பு கொடை வெட்ட வெளிச்சமானது.
ஆயுஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு துணைபோன ‘மெட்லைப், அஹுஜா மற்றும் பிரியா’ ஆகிய மூன்று தனியார் மருத்துவமனைகளுக்கு சீல் வைத்தனர்.
அத்துடன் அந்த மருத்துவ மனையின் உரிமையாளர்களான டாக்டர் பீரித்தி அஹுஜா, அவரது கணவர் டாக்டர் சுர்ஜீத் சிங் அஹுஜா, மருத்துவ நிபுணர்கள் ராம் பிரகாஷ், ராஜேஷ் குமார் மற்றும் சட்டவிரோத உடல் உறுப்பு கொடைக்கு உறுதுணையாக இருந்த மருத்துவ நிபுணர் நரேந்திர சிங் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், ‘டெலிகிராம்’ தகவல் பரிமாற்ற செயலி மூலம் மூளைசலவை செய்து, இளைஞர்களையும், இளம் பெண்களையும் குறிவைத்த இடைத்தரகர் ஷிவம் அகர்வாலையும் கைது செய்தனர்.
கைதான ஆறு பேர் மீதும் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களுக்கு பணத்தாசை காட்டி, அவர்களை வலையில் விழ வைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அறுவை சிகிச்சை
கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 50 – 60 சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கும்பலுக்கு லக்னோ, டில்லி, மும்பை, கொல்கட்டா மற்றும் நேபாளத்தில் வலையமைப்பு இருப்பதையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
இதற்கிடையே சிறுநீரக கொடை யாளரும், அதை பெற்றவருக்கும் உடல்நிலை மோசமடைந்ததால், இருவரும் மேல் சிகிச்சைக்காக லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளனர்.
எச்சரித்த உளவுத்துறை
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அர்பிகா என்ற பெண்ணுக்கு, கடந்த 3-ஆம் தேதி கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரகசியமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவருக்கு சிறுநீரகம் வழங்கியது யார்? எவ்வளவு பணம் கைமாறியது? என்பது குறித்து தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கான்பூரில் பெரிய அளவில் சட்ட விரோதமாக சிறுநீரக வியாபாரம் நடந்து வருவதாக ஏற்ெகனவே மாநில காவல்துறையினர் உளவுத் துறை எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரிகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
