தமிழ்நாட்டில் ஜாதி கலவரம் இல்லை – பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் போன்று மதக் கலவரங்கள் இல்லை!
உத்தரப்பிரதேசம் போன்று கும்பல் வன்முறை இல்லை –
மணிப்பூர் போன்று தொடர் வன்முறைகள் இல்லை!
இவை அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று
பா.ஜ.க. செய்த சூழ்ச்சிகளை நாம் முறியடித்திருக்கிறோம்!
திருச்சி, ஏப்.2 – தமிழ்நாட்டில் ஜாதி கலவரம் இல்லை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் போன்று மதக் கலவரங்கள் இல்லை. உத்தரப் பிரதேசம் போன்று கும்பல் வன்முறை இல்லை. மணிப்பூர் போன்று தொடர் வன்முறைகள் இல்லை. இப்படி அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று பா.ஜ.க. செய்த சூழ்ச்சிகளை நாம் முறியடித்திருக்கிறோம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (1.4.2026) திருச்சியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆற்றிய உரை வருமாறு: –
நேற்று (31.3.2026) மாலை திருவாரூரில்பரப்புரையைத் தொடங்கினேன். இன்று (1.4.2026) தீரர்கள் கோட்டமாம் திருச்சிக்கு வந்திருக்கிறேன். மூன்று வாரத்திற்கு முன்புதான், இதே திருச்சியில் மாபெரும் மாநில மாநாட்டிற்காக வந்தேன்! இப்போது மீண்டும் நம்முடைய வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் நான் திருச்சிக்கு வருவது போன்று, திராவிட மாடல் ஆட்சியும் மீண்டும் மீண்டும் வர வேண்டும்! அதற்கு நீங்கள் தயாரா?
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் இருக்கும் 9 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியைக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் தந்த அந்த வெற்றியால், இரண்டு சிறப்பான அமைச்சர்களைத் தமிழ்நாட்டிற்கு நீங்கள் தந்திருக்கிறீர்கள்! இந்த முறையும் திருச்சியில் முழு வெற்றி. நூறு சதவிகிதம் வெற்றியைத் தருவீர்களா? தருவோம் (மக்கள்). மகிழ்ச்சி, நன்றி!
தி.மு.கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பீர்!
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் நமது வெல்லும் வேட்பாளர் திருச்சியின் தீரர் – மாநாட்டு நாயகர் – கழகத்தின் முதன்மைச் செயலாளர் – என்னுடைய ஆருயிர் சகோதரர் கே.என். நேரு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.
அடுத்து, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் நமது வெல்லும் வேட்பாளர்அருமைத் தம்பி அன்பில் மகேஸ் பொய்யா மொழி, என்னுடைய ஆருயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி அவர்களின் அருமை மகன். எப்போதும் சிரித்த முகத்துடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் தம்பி அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்களுக்கு, திருவெறும்பூர் மக்கள் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து, வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத்தொகுதியின் நமது வெல்லும் வேட்பாளர் சகோதரர் இனிகோ இருதயராஜ் அவர்கள், சிறுபான்மை மக்களுக்காக என்னிடம் எப்போதும் பேசி, எதையும் சாதிக்கும் ஆற்றலைப் படைத்தவர். தொகுதி மக்களுடன் ஏற்கெனவே இரண்டறக் கலந்தவர். சகோதரர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு நமது வெல்லும் வேட்பாளர் பாரிவள்ளல் அவர்கள், அவருடைய பெயருக்கு ஏற்றவாறு, மக்களுக்கு நிச்சயம் தொண்டாற்றக் கூடியவர். கழகத்திற்காக உழைத்த தந்தை தங்கவேல் அவர்கள் வழியில் வந்திருக்கும் தம்பி பாரிவள்ளல் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து, வெற்றியைத் தேடித் தந்திட வேண்டும்.
அடுத்து, மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் நமது வெல்லும் வேட்பாளர் கதிரவனுக்கு நீங்கள் ஆதரவு தந்திட வேண்டும். தொகுதி மக்களுக்காக கடந்த 5 ஆண்டு களாக எண்ணற்ற திட்டங்களையும், உதவிகளையும் செய்த வர்.அப்படிப்பட்ட தம்பி கதிரவனுக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னானவாக்குகளை நீங்கள் அளிக்க வேண்டும்.
அடுத்து, திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியின் நமது வெல்லும் வேட்பாளர் எஸ்.துரைராஜு அவர்கள், இவர் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியத்தின் பெருந்தலைவராக 2 முறை சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். இப்போது, திருவரங்கம் தொகுதியில் போட்டி யிடும் அவருக்கு, அந்தத் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.
அடுத்து, மணப்பாறை சட்டமன்றத் தொகுதி, அங்கு நமது வெல்லும் வேட்பாளர் மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சகோதரர் அப்துல் சமது அவர்கள், கூட்டணிக் கட்சியைத் சார்ந்திருந்தாலும், நமது உதயசூரியன் சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். கடந்த முறை போன்றே, இந்த முறையும் அவருக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தந்திட வேண்டும்.
அடுத்து, முசிறி சட்டமன்றத் தொகுதி – நமது வெல்லும் வேட்பாளர் தம்பி கருணை ராஜா அவர்கள், மறைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் அவர்களின் அருமை மகன் – தலைமைச் செயற்குழு உறுப்பினர் – பொறியாளர் அணியின் பொறுப்பில் இருந்து பணியாற்றுபவர் –கருணா ராஜாவுக்கு நீங்கள், உதயசூரியன் சின்னத்தில் முசிறி மக்கள் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.
அடுத்து, துறையூர் சட்டமன்றத் தொகுதி– நம்முடைய தோழமை இயக்கமானகாங்கிரசு இயக்கத்திற்கு அந்தத் தொகுதியைஒதுக்கியிருக்கிறோம். விரைவில் நம்முடைய அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் அறிவிக்க இருக்கும் காங்கிரசு கட்சியின் வேட்பாளருக்குத் துறையூர் மக்கள் கை சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.
வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது!
இங்கே, இந்த மேடையில் இப்போதுநின்று கொண்டி ருக்கும் 8 வேட்பாளர்களுக்கும், அதேபோன்று அறிவிக்க இருக்கும் காங்கிரசு கட்சியின் வேட்பாளரையும் சேர்த்து திருச்சி மாவட்டத்தில் இருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் 9 வேட்பாளர்களுக்கும் உங்களின் பொன்னான வாக்குகளை நீங்கள் வழங்கி வெற்றி பெற வைக்க வேண்டும்என்று நான் உங்களை எல்லாம் அன்போடுகேட்கிறேன்… பண்போடு கேட்கிறேன்… பாசத்தோடு கேட்கிறேன்… உரிமையோடு கேட்கிறேன்… உங்கள் முத்துவேல்கருணாநிதி ஸ்டாலின் கேட்கிறேன்… வெற்றி உறுதியா? (உறுதி என மக்கள் முழக்கம்). வெற்றி உறுதி யாகிவிட்டது, வேட்பாளர்கள் உட்காரலாம். உங்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுவிட்டது.
இந்த அளவிற்கு ஏன் உரிமையுடன் நான் பேசுகிறேன் என்று கேட்டால், அந்த அளவிற்கு இந்தத் திருச்சிக்காகப் பல முத்திரைத் திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் நாம் செய்து கொடுத்திருக்கிறோம். அவற்றை எல்லாம் சொல்ல முடியாது. காரணம், நேரமில்லை. கொடுமையான வெயிலில் நீங்கள் எல்லாம் இங்கே காத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, சுருக்கமாக – தலைப்புச் செய்தியாக மிக மிக சிறப்புக்குரிய சிலவற்றை மட்டும் நான் உங்களிடம் லிஸ்ட் போடக் காத்திருக்கிறேன்.
பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட, “இது என்னப்பா! ஒரு பஸ் ஸ்டாண்டே ஏர்போர்ட்டை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது என்று வியந்து போய் காணொலி போடும் திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், அதன் அருகிலேயே பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம்.
தலைநகர் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி இன்றைக்குத் தரம் உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். மொத்தமாக டோட்டல் போட்டால், நான் பெருமையோடு சொல்கிறேன்… கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் திருச்சிக்காக 26 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் உரிமையுடன் உங்களிடத்தில் உரிமையோடு வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
கொடுக்காத பல வாக்குறுதிகளையும் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்!
2021 ஆம் ஆண்டு எங்கள் மேல் நீங்கள் எல்லாம் நம்பிக்கை வைத்து, ஆதரவளித்து பொறுப்பில் உட்கார வைத்தீர்கள். உங்களின் நம்பிக்கையை நான் இன்றைக்குக் காப்பாற்றி இருக்கிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் இன்றைக்கு நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். கொடுக்காத பல வாக்குறுதிகளையும் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயண வசதி செய்து தருவோம் என்று சொன்னேன். முதலமைச்சரான முதல் நாளே பதவியேற்றுக் கொண்டு, கோட்டைக்குச் சென்று, முதல் கையெழுத்தைப் போட்டேன். மகளிர் அனைவரும் இன்றைக்கு டவுன் பஸ்ஸில் கட்டணமில்லாமல் பயணிக்கிறீர்களா, இல்லையா?
மகளிருக்கு மாதம்தோறும் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று சொன்னோம். ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை வழங்குகிறோம். உண்டா, இல்லையா? இப்போது நம்மைப் பார்த்துதான் மற்ற மாநிலங்களிலும் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
காலை உணவுத் திட்டம், வாக்குறுதியில் சொல்லாத திட்டம்.
19 இலட்சம் பிள்ளைகள் சூடான சுவையான காலை உணவைச் சாப்பிட்டு படிக்கிறார்கள்.
நான் முதல்வன் திட்டமும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படவில்லை. 48 இலட்சம் திறன் பயிற்சி சான்றிதழ்களை நம்முடைய இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்தில் இன்றைக்குப் பெற்றிருக்கிறார்கள்.
அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதை உறுதிசெய்ய உருவாக்கப்பட்ட திட்டங்கள்தான் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள். 9 இலட்சம் மாணவ–மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவை நீங்கள் எல்லாம் சிறப்பாகக் கொண்டாட 3,000 ரூபாய் வழங்கினோம். 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அனைவருக்கும் வந்ததா?
மகளிர் உரிமைத் தொகையைத் தேர்தலை காரணம் காட்டித் தடுக்க நினைத்தார்கள். அதையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு, மூன்று மாதங்களுக்கான தொகையையும், கோடை காலச் சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாயும் சேர்த்து, 5 ஆயிரம் ரூபாயை அட்வான்சாகக் கொடுத்தோம். 5 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு வந்ததா, இல்லையா?
அரசு ஊழியர்களின் நீண்ட ஆண்டுகாலப் பிரச்சினை, சற்றேறக்குறைய 22 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறை வேற்றி, சொன்னபடியே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தி, இன்றைக்குச் சாதனை படைத்திருக்கிறோம்.
பா.ஜ.க. செய்த சூழ்ச்சிகளை
நாம் முறியடித்திருக்கிறோம்!
இவை அனைத்திற்கும் மேல், தமிழ்நாட்டில் ஜாதி கலவரம் இல்லை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் போன்று மதக் கலவரங்கள் இல்லை. உத்தரப் பிரதேசம் போன்று கும்பல் வன்முறை இல்லை. மணிப்பூர் போன்று தொடர் வன்முறைகள் இல்லை.
இப்படி அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று பா.ஜ.க. செய்த சூழ்ச்சிகளையும் நாம் முறியடித்திருக்கிறோம். அமைதியான சூழலும், திறமையான மனித வளமும், நம்முடைய ஆட்சியில் இருக்கும் காரணத்தினால்தான் இன்றைக்கு முதலீடுகளும் தமிழ்நாட்டில் வந்து கொண்டி ருக்கிறது. இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்! அதற்கான தெளிவான செயல்திட்ட அறிக்கையாக தி.மு.க. தேர்தல் அறிக்கையை நான் வெளி யிட்டிருக்கிறேன்.
பேசு பொருளாக மாறிய இல்லத்தரசி திட்டம்!
அதேபோன்று, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் இன்னொரு சூப்பர் டூப்பர் வாக்குறுதியையும் கொடுத்தி ருக்கிறோம். இல்லத்தரசிகள் தங்களின் வீட்டிற்குத் தேவை யான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ–வேவ் அவன், இண்டக்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவும் அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் இத்தகைய பொருட்களை கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு வாங்கிக் கொள்ளவும் ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அதுவும் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள உங்களுக்குப் பிடித்த கடைகளிலேயே உங்களுக்குப் பிடித்த கம்பெனி, உங்களுக்கு பிடித்த மாடலாகப் பார்த்து, இந்தப் பொருட்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு ரூபாய் கூப்பன்? தலா 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் கொடுக்கப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறோம். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இதைப் பற்றித்தான் ஒரே பேச்சாக இருக்கிறது.
– இப்படி ஏராளமான வாக்குறுதிகளை நாம் கொடுத்தி ருக்கிறோம்.
சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன்!
நாங்கள் சொன்னால் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். நான் கலைஞரின் மகன். சொன்ன வாக்குறுதி களை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதி நிலையைச் சீராக்கி, ஒவ்வொன்றாக நாங்கள் நிறைவேற்றி வரும் திட்டங்களே அதற்கு சாட்சி!
தன்னுடைய பத்தாண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் படுகுழிக்குத் தள்ளிய அ.தி.மு.க.வும், இந்தியாவை வரலாறு காணாத சரிவுக்குக் கொண்டு சென்றிருக்கும் பா.ஜ.க.வும் சேர்ந்து அமைத்திருக்கும் கூட்டணிக்கு இந்தத் தேர்தலிலும் வழக்கம்போல் படு தோல்வியைத்தான் நீங்கள் பரிசாக தர வேண்டும்!
தி.மு.க. செய்யும் ஒவ்வொரு திட்டமும் தரமானதாக இருக்கும்! எடுத்துக்காட்டுக்குச் சொல்கிறேன்… தலைவர் கலைஞர் அவர்கள் 2006 தேர்தலின்போது, கலர் டி.வி. வழங்குவோம் என்று சொன்னார். ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனே, கலர் டி.வி.யின் கொள்முதல் நேர்மையாகவும், தரமானதாகவும், யாரும் குறை சொல்ல முடியாததாகவும் இருக்க வேண்டும் என்று, அதற்கான டெண்டரை முடிவு செய்ய, எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வையும் சேர்த்து அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைத்தார்.
20 ஆண்டுகளாக இருந்துவரும்
கலர் டி.வி.க்கள்!
2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே கலர் டி.வி.க்களை வழங்கும் விழாவைத் தொடங்கி, ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான, நம்முடைய தமிழர்களின் வீடுகளுக்கு கலர் டி.வி.க்களை வழங்கினோம். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. இன்றைக்கும் பல வீடுகளில் கலர் டி.வி.யாக மட்டுமல்ல; கலைஞர் டி.வி.யாக அது நிலைத்து நிற்கிறது! இதற்கு பெயர்தான் குவாலிட்டி!
கடந்த 11 ஆண்டு காலத்தில் பா.ஜ.க. தமிழ்நாட்டிற்கான எதையும் செய்யவில்லை. நம்முடைய மக்களின் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. 12 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்காக இதுவரை ஒரு சிறப்புத் திட்டம் கூட இல்லை. அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையும் இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். இப்போது வரை கட்டி முடிக்கப்படவில்லை.
7 ஆவது முறையும்
நமது ஆட்சி தொடர வேண்டும்!
தமிழ்நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும் தொடர வேண்டும் என்றால், ஏழாவது முறையும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வேண்டும், திராவிட மாடல் தொடர வேண்டும். பா.ஜ.க.வும் அதன் கொத்தடி மைக் கூட்டமும் ஆட்சிக்கு வந்தால் அதன் தீமைகள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும்! தமிழ்நாடு தமிழ்நாடாகத்தான் இருக்க வேண்டும்!
உத்தரப்பிரதேசம் போன்று, மணிப்பூர் போன்று வன்முறைக் காடாக ஆகக் கூடாது! இவர்கள் வந்தால் தமிழ்நாட்டின் பெயரையே தட்சிண பிரதேஷ் என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்! இதைத் தடுக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக, ஓரணியில் இணைய வேண்டும்! நம்முடைய எதிரிகளையும் பா.ஜ.க.வின் உதிரிகளையும் வீழ்த்த வேண்டும்!
திராவிட மாடலின் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது!
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நாம் போராடுவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல; நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக! பா.ஜ.க.வின் டப்பா எஞ்சின் முன்னால், நம்முடைய திராவிட மாடலின் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது! நம்முடைய ஸ்பீடு என்ன என்று காண்பித்துவிடலாமா? வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டில்லி அணியா? ஒரு கை பார்த்துவிடலாமா?
நடக்க இருக்கும் இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, அனைவரும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்! கலைஞரின் மகனாக உங்களிடம் கேட்கிறேன், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு உங்கள் பொன்னான வாக்குகளைத் தாருங்கள். இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல; தமிழ்நாட்டின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கடமையாகும்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
யாற்றினார்.
