புதுடில்லி, ஏப்.1 நாடு முழுவதும் இந்த முறை டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனால், மாநிலம் வாரியாக, சுய விபர பதிவு மற்றும் கணக்கெடுப்பாளர் வீடு தேடி வரும் தேதிகள் மாறுபடுகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் பொதுமக்கள் தங்களது சுய விபரங்களை, ஜூலை 17 முதல் 31ஆம் தேதி வரை அதற்கான இணையதளத்தில் பதிவு செய்யலாம். வீடு தேடி வரும் நேரடி கணக்கெடுப்பு, ஆக., 1 முதல் 30ஆம் தேதி வரை நடக்கிறது. புதுச்சேரியில், சுய விபர பதிவு, மே 17 முதல் 31ஆம் தேதி வரையிலும், வீடு தேடி வரும் கணக்கெடுப்பு, ஜூன் 1 முதல் 30ஆம் தேதி வரையிலும் நடக்கிறது.
இந்த கணக்கெடுப்பின் அனைத்து பணிகளையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது. கணக்கெடுப்பாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி, மொபைல் செயலி மூலம் நேரடியாக தரவுகளைச் சேகரித்துச் சமர்ப்பிப்பார்கள். சுய கணக்கெடுப்பு முறையானது, கணக்கெடுப்பாளர் வருவதற்கு முன்பு, ஒருவர் தனது சொந்த வசதிக்கேற்ப தகவல்களை நிரப்புவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
இந்த பிரமாண்ட பணி இரு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி பற்றிய கணக்கெடுப்பு எடுக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு இருக்கும். இதில் தான் ஜாதி, மதம் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு பணியில், 31 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். இரண்டாம் கட்டத்திற்கான கேள்விகள், பின் அறிவிக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், பிரிவு 15இன் படி, நீதிமன்ற ஆதாரமாகவோ அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகவோ கேட்டு பெற முடியாது என்றும், சைபர் பாதுகாப்பு முகமைகளின் உதவியுடன், பொதுமக்களின் தரவுகள் அனைத்தும், ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டு சர்வரில் பாதுகாக்கப்படும் என்றும் நாட்டின் பதிவாளர் ஜெனரலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருமான மிருதுஞ்சய் குமார் நாராயண் தெரிவித்திருந்தார்.
