ஆண்டு தொண்ணூறானாலும், தொண்டுக்கு வயது இல்லை என்ற நியதியை நிரூபிப்பது போன்றே, சென்னை குரோம்பேட்டையில் ‘திருக்குறள் பேரவை’யை நிறுவி, வியக்கத்தக்க வகையில் – பலரையும் வயது இடைவெளி சிறிதுமின்றி, மிகச் சிறப்பாகக் கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓடும் ஒரு ஜீவ நதிபோல நாளும் பயனுறு பகுத்தறிவுத் தொண்டை நடத்தி வருகிறார் பெருமகனார் மானமிகு தெ.பொ. இளங்கோவன் அவர்கள்.
அவர் (முன்பு) வாரந்தோறும் பெரியார் திடலில் – புதுமை இலக்கியத் தென்றலின் குளுமையை நேயர்களுக்கு அளித்துப்பரவசப்படுத்தும் கடமையைத் தவறாது செய்து மகிழ்ந்த ஒரு ‘பெரியாரிஸ்ட்’ ஆவார்.
அவர் எழுதிய ‘திருவள்ளுவரும் திருக்குறளும்’ என்ற நூலை படித்து, உள்வாங்கி, மகிழ்ந்தோம்.
அந்நூலுக்கு அணிந்துரை எழுதிய முதுபெரும் ஆய்வறிஞர் புலவர் கோ. வெற்றியழகன் அவர்களது அணிந்துரை, மானிடவியல் வரலாற்றை குறுகத்தறித்த குறள் போல எழுதி, ஊருணி போன்ற இந்நூலைப் படித்து மகிழும் வாய்ப்பை ஊக்குவிக்கும் ஒரு செறிவான செயலூக்கியாக அமைந்துள்ளது.
திருக்குறள் பேரவையின் நிறுவனர் பெருந்தகை தெ.பொ. இளங்கோவனாரின் திருக்குறள் பேரவையின் தொண்டு – ‘திருக்குறளைப் படித்தால் மட்டும் போது; வாழ்வில் வள்ளுவத்தை இளைய தலைமுறைக்கு(ம்) பாடமாக பின்பற்றும் நல்லொழுக்கமாக்கிட வேண்டும்’ என்பதற்காக மற்ற எவரும் செய்யாத ஒரு விரும்பத்தக்க வினையாற்றி வருகிறார். இந்நூலில் அக்குறிப்பு உள்ளது.
‘‘… பேரவையின் துணை அமைப்பாக ‘Thirukural Clinic’ (‘திருக்குறள் சிகிச்சையகம்’) ஒன்றை ஆரம்பித்து திருக்குறள் நெறிப்படி வாழாமல் நிலை தடுமாறுபவர்களுக்கு ஆலோசனை நல்கி, அவர்கள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டி வருகிறேன்.
பள்ளியில் மாணவர்களுக்கிடையே நேர்மை, உண்மை என்ற பண்புகளை வளர்க்க ‘Honest Shop’ என்ற ஒரு சிறிய கடையைப் பள்ளித் தாழ்வாரத்தில் இயங்க ஏற்பாடு செய்தேன். இந்தக் கடையில் மாணவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், ரப்பர் போன்ற பொருள்களை வைத்திருந்தேன். விலைப்பட்டியல் தொங்கவிடப்பட்டிருந்தது. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு அவற்றின் விலையை உண்டியலில் செலுத்துவர். கடையைக் கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள். மாணவர்கள் தாங்களாகவே நேர்மையாக நடந்து கொள்வர்.
முன்பு கடவுளை – மதத்தை மறுத்த சோவியத் ரஷ்யாவில், செய்தித்தாள் விற்பனை நிலையங்களில் இந்த முறை இருந்தனவே நான் பல கூட்டங்களில் சுட்டிக்காட்டியதுண்டு –
நம் நாட்டில் கோடிக்கணக்கான கோயில்களின் கடவுள்களுக்கு பக்தி, திருவிழாக்கள் எல்லாம் நித்தம் நித்தம் செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட ‘சர்வசக்தி’ கடவுளைப் பூட்டுப் போட்டு கோயிலுக்குள் வைக்கும் விசித்திரம் இங்கே!
அதேபோல், கடவுளர் மூலச் சிலைகளை – பாதுகாப்புப் பெட்டகத்திலே வைத்து ஆண்டிற்கு ஒருமுறை ‘கைதிக்குப் பரோல்’ கொடுப்பதுபோல, உற்சவம் நடத்தும்போது ஊர் சுற்றி உள்ளே அனுப்பி விடுவர்! அது மட்டுமா? பெரிய மதில் சுவரும், பெரும் பூட்டும், காவலும் தேவை.
தன்னை உணர்ந்து நாணயம் உள்ள மக்கள் சமுதாயம் மலர்ந்த நாடாக, சமூகமாக இருந்தால் வீடாவது வேண்டியதாவது!’’
என்ற பாடத்தை செயல் வடிவத்தில் ஆக்கிக் காட்டும் அரிய பரிசோதனைக்கூடமாக்கி சொல்லிக் கொடுக்கும் பெருந்தகையாளரின் பான்மையைப் பாராட்டுகிறோம்.
இந்நூல் ஒருகுறள் இலக்கியக் கருவூலம்.
‘‘நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு. – குறள் : 994
நூலின் இறுதியில் ஒரு நல்ல செய்தி – (பக்கம் 224)
‘தமிழ்நாடு அரசின் மேனாள் நிதி அமைச்சர் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் அதிகாரிகள் இடையே பேசும்போது –
IF NOT YOU, WHO?
IF NOT NOW, WHEN?
என்ற கேள்வியைக் கேட்பார்.
இந்தக் கேள்விக் கணைகளில் உள்ள ‘You’ என்பதற்குப் பதிலாக ‘We’ என்பதைப் பொருத்திப் பார்க்கிறேன்.
திருக்குறளைப் பரப்ப நாம்தான் முயற்சிக்க வேண்டும். அதை இப்பொழுதே முடிவெடுத்துத் திருக்குறளைப் பரப்ப வேண்டும்.
இப்பணியில் வெற்றி பெறுவோம்.
1948இல் தந்தை பெரியார் சென்னையில் 2 நாள்கள் ‘திருக்குறள் மாநாடு’ நடத்திப் பரப்புரைகளைச் செய்து புலவர்களின் வீட்டு அலமாரிகளில் புழுக்கத்துடன் இருந்த வள்ளுவத்தை – குறளை பாமர மக்களிடையே பரப்பிட்ட தொண்டறத்தால் பரவசம் அடைந்தார்!
6 அணாவிற்கு முதற்பதிப்பு வெளியிட்ட தந்தை பெரியார் அடுத்த பதிப்பில் அதிகம் விற்பனையானதால், ஒரு புதுமை செய்தார். 4 அணா என்று விலையைக் குறைத்து – பல மடங்கு பிரச்சாரம் செய்தார்!
பொதுவாக வெளியீட்டாளர்கள் ‘கிராக்கி’ வந்தால் விலையைக் கூட்டுவார்கள்.
தந்தை பெரியார் விலையைக் குறைத்துப் பரப்பிப் பார் முழுவதும் விற்றுச் சாதனைச் சரித்திரம் படைத்தார் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்.
