சென்னை, ஏப்.1- பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவரம் வெளியாகியுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் போட்டி யிடும் விஜய், தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில், விஜய்-யின் மனைவி சங்கீதாவின் பெயரில் இந்தியன் வங்கியில் சுமார் 25 கோடி ரூபாயும் ஆக்ஸிஸ் வங்கி கணக்கில் சுமார் 40 கோடி ரூபாயும் வைப்புத் தொகையாக இருப்பதாகவும் எச்டிஎப்சி வங்கிக் கணக்கில் 20 கோடி ரூபாயும் வைப்புத் தொகையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் 30.3.2026 அன்று தொடங்கியது. இந்த நிலையில், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விஜய், வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அவருக்கு மாற்று வேட்பாளராக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலின்போது கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். மேலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட உள்ள விஜய், அங்கு ஏப்ரல் 2ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
மேலும், தனது குடும்பத்தில் தன்னைத் தவிர மற்றவர்கள் தனியாக வருமானம் ஈட்டவில்லை என்றும் அவர் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. விஜய் பெயரில் 883 கிராம் தங்கம் இருப்பதாகவும், அவரது மனைவி சங்கீதா பெயரில் 391 சவரன் தங்க நகைகள் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
