‘தமிழ்நாட்டில் கோயில்களில் வழிபாட்டு மொழியாக தமிழ் வர வேண்டும்’ என்றும், ‘உயர்நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும்’ என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
சென்னை பெரியார் திடலில் 25.12.1980அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ் வழிபாட்டுரிமை மாநாடு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலிய பெரு மக்கள் பங்கேற்று கருத்துரையாற்றினர்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி வரவேற்பு உரையாற்றினார். மாநாட்டில் ‘கோயில்களில் தமிழில் வழிபாடு கட்டாயம் வேண்டும்’, ’சமஸ்கிருதம் மட்டுமே அர்ச்சனை மொழி என்ற ஆதிக்கம் கூடாது’ ‘பக்தர்களுக்குப் புரியும் வகையில் தாய் மொழியில் அது நடக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 46 ஆண்டுகளுக்குப்பிறகு – மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
தீர்மானங்களை ஏற்கும் வகையில் உயர்நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. குறிப்பாக 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம், தமிழ் வழிபாட்டு உரிமையை அங்கீகரித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய ‘‘அன்னைத் தமிழ் அர்ச்சனை’’ திட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் மனுவை, அப்போதைய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதிகள் பி.டி. ஆதிகேசவலு ஆகியோரைக் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், புதிதாக இது தொடர்பான வழக்கு விசாரணை தேவையற்ற ஒன்றே!
இப்பொழுது நீதிபதி பரதச்சக்கரவர்த்தி அவர்களும் இதனை உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
குட முழுக்கானாலும், மற்றபடி வழிபடும் நிலையானாலும் – இரண்டும் அடிப்படையில் ஒன்றே!
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து சிவன் தமிழாய்ந்தார் என்றெல்லாம் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படவில்லையா? (அவர்கள் நம்பிக்கைப்படி)
‘‘கண்ணுதற் பெருங் கடவுளும்
கழகமோடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த
இப்பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண
வரம்பிலா மொழி போல்
எண்ணிடைப் படக்கிடந்ததா
எண்ணவும் படுமோ?’’
இது திருவிளையாடல் புராணம் கூறும் ஒன்றாகும். இவ்வளவு ஆதாரங்களும் குவிந்து கிடக்கக் கூடிய நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு என்பது வல்லடி வழக்கே!
இதற்கிடையே உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இடம் பெற வேண்டும் என்ற வழக்கு விசாரணையில் (தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு) ‘‘இதில் நீதிமன்றம் தலையிட முடியாது – இது அரசின் கொள்கை முடிவு’’ என்று கூறியுள்ளது.
இவற்றை எல்லாம் தெள்ளிதின் உணர்ந்தே நீதிபதி பரதச் சக்கரவர்த்தி அவர்கள் நெற்றியடித் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
உண்மை என்னவென்றால் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோதே கடந்த 2006 டிசம்பர் 6ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் ‘தமிழ் வழக்காடு மொழியாக அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாடு அரசின் கொள்கை இந்தப் பிரச்சினையில் என்னவென்பது வெளிப்படையாகத் தெரியவில்லையா?
உயர்நீதிமன்றத்தில் தமிழும் வழக்காடு மொழியாக வருவதற்கு ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் தடையாக இருக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் வட இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தான், அலகாபாத், பாட்னா உயர்நீதிமன்றங்களின் ஹிந்தி வழக்காடு மொழியாக அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையிலும் இருந்து வருகிறது.
ஏனிந்த பாரபட்சம் என்ற கேள்வி எழுகிறதா இல்லையா? தமிழும் வழக்காடு மொழியாக உயர்நீதிமன்றத்தில் இடம் பெற வேண்டும் என்று கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழ்நாடே ஒருமித்த நிலையில்தான் உள்ளது.
வழக்குரைஞர்கள் கால வரையற்ற உண்ணாநிலைப் போராட்டங்களையும் நடத்தினார்கள் (2024 பிப்ரவரி 28).
இவ்வளவும் நடந்த நிலையில் தமிழை வஞ்சிக்கும் போக்கு உயர்மட்ட அதிகார மய்யங்களில் குடி கொண்டிருக்கிறது என்பது வெளிப்படை!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு வழக்கு மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி குறித்த நீதிபதி பரதச் சக்ரவர்த்தி அவர்களின் தீர்ப்பு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வெளி வந்திருப்பது – பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதன்முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பு வெளிவந்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு இடம் வேண்டும் என்பதற்கான சைகையாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இதைப்போல ‘கோயில் குடமுழுக்கானாலும், வழிபாடானாலும், எங்கும் சமஸ்கிருதமே’ என்ற ஆதிக்க வேர் வெட்டப்பட்டு, தமிழுக்கு உரிய இடம் உண்டு; குறிப்பாகப் பக்தர்்களின், உரிமைபற்றிய விடயம் அது என்று வெளிவந்த இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பும் மேலும் வரவேற்பைப் பெறுகிறது.
இவற்றை எதிர்ப்போர் சட்ட நிலைக்கு எதிரானவர்களே என்றே கருதப்பட வேண்டும்.

