தேர்தல் வாக்குறுதிகளை திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நிறைவேற்றுவோம்! தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

7 Min Read

நூற்றாண்டை கடந்தது திராவிடப் பேரியக்கம்!
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை நிறைவேற்றும்
அரசியல் இயக்கமே திராவிட முன்னேற்றக் கழகம்!

1916-இல் சர்.பிட்டி. தியாகராயரும், டாக்டர் டி.எம்.நாயரும், டாக்டர் சி. நடேசனாரும் இணைந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் துவக்கினார்கள். இது பல நூற்றாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களது சமூக, பண்பாட்டு, அரசியல், பொருளாதார உரிமைகளை மீட்டெடுக்கக் குரல் கொடுத்த இயக்கமான நீதிக்கட்சி எனப்பட்டு, 1921 சென்னை மாகாணத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியது.

சமூகநீதி, சமுதாயச் சீர்திருத்தம், விளிம்புநிலை மக்களின் மேம்பாடு, மகளிர் உரிமைகள், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை உருவாக்கிய நீதிக்கட்சியின் ஆட்சி, சென்னை மாகாண மக்களின் வாழ்க்கையையும் – மாகாணத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒளிவிளக்காக அமைந்தது.

1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கி, சுயமரியாதை – பகுத்தறிவு – சமூகநீதி – தமிழர் உரிமைகள் – தமிழ்ப் பாதுகாப்பு – பெண் விடுதலை – ஒடுக்கப்பட்டோர் உரிமைகள் – பொதுவுடைமை – பொது உரிமை ஆகிய விழுமியங்களைத் தமிழ்ச்சமூகத்தின் வேர்கள் வரை தனது பரப்புரை மூலமாகக் கொண்டு சேர்த்தார் தந்தை பெரியார். சுயமரியாதைச் சுடரொளி நாடு முழுவதும் பரவியது. 1938-ஆம் ஆண்டு நீதிக்கட்சித் தலைவரானார் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் இணைந்து 1944-ஆம் ஆண்டு திராவிடர் கழகமாக உருவானது.

தமிழ்நாடு

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை ஆட்சியின் இலக்குகளாகக் கொண்டு நிறைவேற்ற வலிமையான அரசியல் இயக்கம் அவசியம் என்பதை உணர்ந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்கள். 75 ஆண்டுகளைக் கடந்து – பவளவிழாவைக் கண்டு, நூற்றாண்டு விழாவை நோக்கிப் பீடுநடைப் போட்டுக் கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

சுயமரியாதை உணர்வு, மொழிப்பற்று, இன உரிமைகள், தமிழ்நாட்டின் வளர்ச்சி, இந்தியக் கூட்டாட்சியில் தமிழ்நாட்டுக்கான சுயாட்சி ஆகிய உன்னதமான கொள்கைகளை விதைத்த பேரறிஞர் அண்ணா அவர்கள், மக்களின் பேராதரவைப் பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தை 1967-ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார். தாய்த்தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம், தமிழும் ஆங்கிலமுமே பயிற்றுமொழி எனும் இருமொழிக் கொள்கை ஆகிய மூன்று முக்கியமான இலக்குகளைச் சட்டங்களாக நிறைவேற்றினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

தமிழ்நாடு

1969-இல் பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு, அவரது அடிச்சுவட்டில் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையின்கீழ் திராவிட முன்னேற்றக் கழகம் எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் செயல்பட்டது. இந்தியா முழுமைக்கும் ஜனநாயக, கூட்டாட்சிக் கோட்பாடுகளைக் காக்கும் கூட்டணி ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக்கும் இயக்கமாகக் தி.மு.கழகத்தைத் தலைநிமிர வைத்தார் தலைவர் கலைஞர். 1971, 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர வைத்த தலைவர் கலைஞர் அவர்கள், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பியாகச் செயல்பட்டார்.

2018-இல் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் துணையோடு நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாகப் பொறுப்பேற்றேன். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழித்தடத்தில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறேன். 2019-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறோம். 2019, 2024 ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் முழுமையான வெற்றி பெற்றோம்.

தமிழ்நாடு

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்த்தினோம்.

திராவிட மாடல் ஆட்சி

எனது தலைமையிலான ஆட்சிக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று பெயர் சூட்டினேன். சுய மரியாதை – சமூகநீதி – சமத்துவம் – சகோதரத்துவம் – மதச்சார்பின்மை – கூட்டாட்சிக் கருத்தியல் – அதிக அதிகாரங்களைக் கொண்ட மாநிலங்கள் – அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சம உரிமை ஆகியவை தான் திராவிட மாடல் அரசின் உள்ளடக்கம். இதனை மய்யமாகக் கொண்ட மகத்தான ஆட்சியை அய்ந்தாண்டுகாலம் வழங்கினேன்.

தமிழ்நாடு

கடந்த அய்ந்தாண்டு காலத்தில்…

*  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

*  கட்டணமில்லா விடியல் பயணம்

*  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

*  புதுமைப்பெண்

*  தமிழ்ப்புதல்வன்

*  நான் முதல்வன்

*  மக்களைத் தேடி மருத்துவம்

*  இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48

*  வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை

*  கலைஞர் கைவினைத் திட்டம்

*  கலைஞர் கனவு இல்லம்

*  அன்புக்கரங்கள் திட்டம்

*  அன்புச்சோலை திட்டம்

*  தோழி விடுதிகள்

*  உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடி நியமனம்

*  அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்

*  தொல்குடித் திட்டம்

*  பேராசிரியர் அன்பழகனார் கல்வி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

*  பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்

*  அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

*  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

*  முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டுத் திட்டம்

*  கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்

* இரண்டு லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு

தமிழ்நாடு

உள்ளிட்ட ஏராளமான திட்டங்களைச் செயல் படுத்தி தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் வளர்த்தோம். தொலைநோக்குத் திட்டங்கள் மூலமாகத் தமிழ்நாடு முழுமையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் ஒவ்வொரு தனிமனிதரும் பயனடையும் திட்டமாக இவை அமைந்துள்ளதுதான் இதன் சிறப்பு!

முதன்மை மாநிலமாக…

கடந்த நிதியாண்டில் 11.19 விழுக்காடு என்ற உயரிய பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாடு எட்டியது திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனைகளுக்கான மணிமகுடம்!

அனைத்து மக்களுக்கும்…

*  ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மூன்று மாத கால உரிமைத்தொகையான 3 ஆயிரம் ரூபாயையும், கோடைகால சிறப்புத் தொகையாக 2 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தினோம்.

தமிழ்நாடு

*  அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகாலக் கோரிக் கையான பழைய ஓய்வூதியக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) செயல்படுத்தப்பட்டது.

மகளிர், இளைஞர், குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநர் – திருநங்கையர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மை யினர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களால் தமிழ்நாடே புது எழுச்சியைக் கண்டிருக்கிறது,

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு உருவாக்கிய செயற்கைப் பேரிடர்களையெல்லாம் வென்று, அவர்களின் வஞ்சனைக்குத் துணை நிற்கும் கூட்டத்தை எதிர்கொண்டு இந்த எழுச்சி யைப் பெற்றுள்ளோம்.

*  தமிழ்நாட்டைக் காக்க வேண்டுமானால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி தொடர வேண்டும்!

*  தமிழ்நாட்டின் கல்வியை, கட்டமைப்பை, சமூகநீதியை, இதுவரை நாம் அடைந்த முன்னேற்றத்தை பாதுகாக்க வேண்டுமானால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சித் தொடர வேண்டும்!

*  தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக – சமூகநல்லிணக்கத்துடன் வாழவும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறவும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சித் தொடர வேண்டும்!

*  தனித்துவமான தமிழர்கள் மண் – மொழி – மானம் காக்கத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சித் தொடர வேண்டும்! திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும்!

அதற்கு அடித்தளமாக, தமிழ்நாட்டு மக்களான உங்களின் கனவுகளை நிறைவேற்ற “Stalin Statement”-அய் வழங்கியிருக்கிறேன். அதன் விரிவாக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தத் தேர்தல் அறிக்கை.

தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து – அனைத்துதரப்பு மக்களின் கருத்துகளைக் கேட்டு, இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்த தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கோவி.செழியன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம், சுரேஷ் சம்பந்தம் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“சொன்னதைச் செய்வோம்; செய்வதைத் தான் சொல்வோம்” என்பார் முத்தமிழறிஞர் கலைஞர்.

“சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம்” என்பது எனது தலைமையிலான திராவிட மாடல்.

எளிமையான நிருவாகத்தால் வலிமையான அரசை உருவாக்குவோம்.

அனைத்து மக்களது கனவையும் உள்ளடக்கியதாக அரசின் திட்டங்களை அமைப்போம்.

கடைக்கோடி மனிதரையும் அரசின் கரங்கள் மூலம் அரவணைத்துக் காப்போம்.

திராவிட முன்னேற்றக் கழகம் சொன்னால் செய்யும்; உறுதியாகச் செய்யும்! – எனும் தமிழ்நாட்டு மக்களின் இந்த நம்பிக்கையை எந்நாளும் கட்டிக் காப்போம்.

17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை – 2026 என்ற இந்த மாபெரும் மக்கள் சாசனத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து வாக்குறுதிகளையும், உங்களின் பேராதரவோடு அடுத்து அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் உறுதியாக நிறைவேற்றுவோம்! வெல்வோம் ஒன்றாக!

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *