புதுடில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதான சிம்ரன் பாலா ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். ஒன்றிய காவல் படையின் (சிஆர்பிஎஃப்) உதவித் தளபதியான (Assistant Commandant) இவர், ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பில் கடமைப் பாதையில் (Kartavya Path) 140-க்கும் மேற்பட்ட ஆண் வீரர்களைக் கொண்ட படைப்பிரிவைத் தலைமை தாங்கி வழிநடத்தி சாதித்து உள்ளார். சிஆர்பிஎஃப் வரலாற்றில் ஒரு பெண் அதிகாரி,முழுமையாக ஆண்கள் மட்டுமே கொண்ட ஒரு பெரிய படைப்பிரிவை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும்.
சிம்ரன் பாலா ஜம்மு காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான ரஜோரியைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்திலிருந்து நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப்-இல் அதிகாரி நிலைக்குத் தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமை இவருக்கு உண்டு.
ஜம்முவின் காந்திநகரில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற இவர், விடாமுயற்சியுடன் மத்திய பொதுப்பணி ஆணையத்தின் (யுபிஎஸ்சி) தேர்வில் வெற்றி பெற்று இத்துறையில் கால் பதித்தார்.
பயிற்சிக் காலத்திலேயே தனது திறமையை நிரூபித்த சிம்ரன் பாலா, குருகிராமில் உள்ள சிஆர்பிஎஃப் அகாடமியில் சிறந்த அதிகாரி மற்றும் சிறந்த பேச்சாளருக்கான விருதுகளை வென்றவர். 2025-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவருக்கு, சத்தீஸ்கர் மாநிலத்தின் நக்சல் எதிர்ப்புப் பிரிவான ‘பஸ்தாரியா’ (Bastariya) பட்டாலியனில் முதல் பணி வழங்கப்பட்டது.
அடர்ந்த காடுகளிலும் சவாலான சூழலிலும் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தலைநகரில் நடைபெற்ற மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய விழாவில் தனது படையை வழிநடத்தும் கவுரவத்தைப் பெற்று சாதித்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சிம்ரன் தனக்கு கிடைத்த பணிக்கான காலத்தை வெற்றிக்கான காலமாக மாற்றிக் கொண்டார். வாழ்க்கையில் கிடைக்கும் அங்கீகாரங்கள் மற்றும் சிறப்பான வெற்றிகள் வாழ்க்கை முழுவதும் மன நிறைவையும், மகிழ்ச்சியும் நமக்கு தருகிறது. எனவே இளமையில் உங்களுக்கு கிடைத்த காலத்தை வெற்றிக்கான காலமாக மாற்றுங்கள்!
