புதுடில்லி, மார்ச் 30 மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையிலும், ஈரானின் அனுமதியுடன் ஹார்மூஸ் நீரிணையைக் கடந்து மேலும் இரண்டு இந்திய எல்பிஜி (LPG) டேங்கர் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணித்து வருகின்றன.
பிடபிள்யு டிஒய்ஆர் (PW DYR) மற்றும் பிடபிள்யு இஎல்எம் (PW ELM) ஆகிய இரண்டு கப்பல்கள் தற்போது இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கப்பல்களில் மொத்தம் 94,000 டன் எல்பிஜி எரிவாயு கொண்டு வரப்படுகிறது. இது இந்தியாவின் ஒருநாள் முழுமையான எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவாகும்.
பிடபிள்யு டிஒய்ஆர்: நாளை (மார்ச் 31) மும்பை துறைமுகத்தை வந்தடையும். பிடபிள்யு இஎல்எம்: ஏப்ரல் 1-ஆம் தேதி நியூ மங்களூருவை வந்தடையும்.
ஹார்மூஸ் நீரிணை தற்காலிகமாக மூடப்பட்டபோது, அதன் இருபுறமும் மொத்தம் 28 இந்தியக் கப்பல்கள் சிக்கியிருந்தன. ஒன்றிய அரசின் துரித நடவடிக்கையாலும், ஈரானின் ஒத்துழைப்பாலும் தற்போது வரை மேற்குப் பகுதியிலிருந்து 6 கப்பல்களும், கிழக்குப் பகுதியிலிருந்து 2 கப்பல்களும் பாதுகாப்பாக நீரிணையைக் கடந்துள்ளன.
உள்நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பாதுகாக்க ஒன்றிய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே: எரிபொருள் நிலையங்களில் கூட்டம் கூடுவதையோ, பீதியடைந்து பொருட்களை வாங்குவதையோ (Panic Buying) மக்கள் தவிர்க்க வேண்டும்.
நாட்டில் தட்டுப்பாடு இன்றி எரிபொருள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எல்பிஜி பயன்பாட்டிற்கு மாற்றாக, குழாய்வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) முறைக்கு மாறுவதை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
ஆயுதங்களைக் கைவிட்டு பொது வாழ்விற்குத் திரும்பி வரும் நக்சலைட்டுகள்
புதுடில்லி, மார்ச் 30 பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி: கடந்த 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட நக்சல்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 2,300 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். நடப்பாண்டின் முதல் மூன்று மாதங் களிலேயே இந்த எண்ணிக்கை 630-அய்த் தாண்டியுள்ளது.: 2013-இல் 76 மாவட்டங்களில் நக்சல் பாதிப்பு இருந்த நிலையில், 2025-இல் அது 22 மாவட்டங்களாகக் குறைந்துள்ளது. அதேபோல், நக்சல் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 330-லிருந்து 52-ஆகச் சரிந் துள்ளது.: நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் வன்முறையைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சாலை வசதிகள் மற்றும் பாதுகாப்பையும் அரசு பலப்படுத்தியுள்ளது.
