பட்டுக்கோட்டை, மார்ச் 29 தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதுமுகங்கள் – மூத்தவர்கள் – இளைஞர்கள் – பெண்கள் – படித்தவர்கள்! வெற்றி எங்கே இருக்கிறது என்பது எளிதில் விளங்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்
அஞ்சாநெஞ்சன் அழகிரியின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று (28.3.2026) பட்டுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
‘அ’னா, ‘ஆவன்னா’ கூடத் தெரியாதவர்
செய்தியாளர்: நடிகர் விஜய், தேர்தல் பிரச்சாரத்திற்குத் தி.மு.க. தடையாக இருக்கிறது என்று சொல்கிறாரே, அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: இது அவருடைய அரசியல் அறியாமையைக் காட்டக் கூடிய ஒன்றாகும். காரணம், இப்போது தமிழ்நாட்டில் நடைபெறுவது தி.மு.க.வினுடைய முழு அதிகாரம் உள்ள ஓர் ஆட்சியல்ல.
தேர்தல் தேதி அறிவித்தவுடன், தேர்தல் ஆணையம் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ளும். அதற்கு உதாரணமாகக் காவல்துறை அதிகாரிகள் பலரும் மாற்றப்படுகிறார்கள். இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வாங்க வேண்டுமானால், தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம்தான் அனுமதி வாங்கவேண்டும்.
தேர்தல் நடைபெற்றுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் முடிந்துவிட்டது என்று அவர்களால் அறி விக்கப்படுகின்ற வரையில், அவர்களிடம்தான் அதிகாரம் இருக்கும்.
ஆகவே, இதில் யாரும் குறுக்கிட முடியாது.
அரசியலில் ‘ஆனா’, ‘ஆவன்னா’கூட தெரியாதவர் ஒருவர் கட்சி நடத்துகிறார் என்றால், அவருடைய அரசியல் அறியாமைக்கு நாம் இரங்க வேண்டும். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், எத்தனையோ தலைவர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட அறிவுச் சூன்யங்கள் இதுவரையில் வந்ததில்லை.
எனவே, தேர்தலில் ஓட்டுப் போடுவதன்மூலமாக, அவருக்கு அறிவுறுத்தி, இனிமேலாவது அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை மக்கள் அவருக்குக் கற்றுக்கொடுத்தால், அது தமிழ்நாட்டிற்கும் நல்லது; எதிர்காலத் தலை முறை யினருக்கும் நல்லது.
தி.மு.க. வேட்பாளர்களைப்பற்றி…
செய்தியாளர்: இன்றைக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், தி.மு.க. வேட்பாளர்களைத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள், உங்களுடைய கருத்து என்ன?
தமிழர் தலைவர்: அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனுபவம் உள்ளவர்கள். அவர்களுக்குச் சட்டப்பேரவை என்றால், என்னவென்று தெரியும். நினைத்ததையெல்லாம் சாதித்துவிடுவேன் என்று சொல்லமாட்டார்கள். ஏற்கெனவே அவர்கள் பண்படுத்தப்பட்டவர்கள்.
தி.மு.க. வேட்பாளர்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் முறை வரவேற்கத்தக்கது. புதியவர்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறார். முதியவர்கள் என்று சொல்லக்கூடிய அரசியல் முதிர்ச்சி பெற்றவர்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறார்.
பெண்களுக்குக் கணிசமான வாய்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது!
ஆகவே, இது ஒரு நல்ல அரசியல் கலவையாக இருக்கிறது.
வளர்ந்து வரக்கூடிய தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கலாம் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது.
உறுதியாகச் சொல்கிறோம், மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சிதான்! மே 4 ஆம் தேதிக்குப் பிறகு, கோட்டைக்குப் போகப் போகிறவர் அவர்தான் என்பது உறுதி.
கூட்டணி வேறு; கூட்டணி ஆட்சி வேறு என்பதைத் தெளிவுபடுத்தியே தமிழ்நாட்டு அரசியல் அமைந்திருக்கிறது.
இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல், ஏதோ, தூண்டிலைத் தூக்கினால், தன் பின்னாலே வருவார்கள் என்று நினைத்தார்கள். தூண்டில்தான், அதில் ஏமாந்ததே தவிர, எந்த மீனும் சிக்கவில்லை என்பது ஒன்று.
எழுச்சிமிகு திராவிட மாடல் ஆட்சி மீண்டும் வரும்.
அது மே 5 ஆம் தேதிக்குப் பிறகு உறுதி என்பதுதான் உண்மை.
எதிரணி அமைத்திருக்கின்ற கூட்டணி, பலமில்லாத கூட்டணி என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய அரசின் பொய்!
செய்தியாளர்: சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு, சிலிண்டர் தட்டுப்பாடே இல்லை என்று சொல்கிறது, அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: ஒன்றிய பா.ஜ.க. அரசு, உண்மையைச் சொல்லவில்லை என்று அர்த்தம். உண்மையைப் பேசியே பழக்கம் இல்லை அதற்கு! அந்த வகையில், இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
செய்தியாளர்: தமிழ்நாட்டிற்குத் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வரப் போகிறார்கள். அதனால், ஏதாவது விளைவுகள் ஏற்படுமா?
தமிழர் தலைவர்: அந்தக் கூட்டணியில் 11 இடங்களை வாங்கிய ஒருவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், ‘‘எங்களுக்கு 11 இடங்களை அமித்ஷாதான் ஒதுக்கிக் கொடுத்தார். அம்மா ஆட்சி வரும், ஜெயலலிதா ஆட்சி வரும் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். ஜெயலலிதா ஆட்சி இல்லை என்பதில் எங்களுக்கு ஏமாற்றம்தான். அமித்ஷா ஆட்சிதான்’’ என்று அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் சொல்கின்ற வார்த்தைகளே சாட்சி!
எதிர்க்கட்சி கூட்டணிக்குத் தலைவர் யார்?
அதைவிட மிக முக்கியம் என்னவென்றால், அந்தக் கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லை என்பதற்கு அடையாளம், அந்தக் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவதாகச் சொல்லிக் கொள்கிறார்களோ, அந்த அ.தி.மு.க.வினுடைய ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி – அம்மா ஆட்சி என்று அவர் சொல்வதை, நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று சொல்கிறவர்கள்தான், அந்தக் கூட்டணியில் இருக்கிறார்கள்.
எனவே, அந்தக் கூட்டணியையும், தி.மு.க.வில் தலைமையிலான கூட்டணியில் இருக்கும் ஒருங்கி ணைந்த கூட்டுக்கும், இடங்கள் குறைந்தாலும்கூட எங்களுக்குக் கொள்கைதான் முக்கியம் என்று திடச் சித்தத்தோடு இருக்கின்ற கூட்டணியை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், வெற்றி எங்கே இருக்கிறது என்று, சாதாரண மக்களுக்கும் புரியும்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
