சியல்டா, மார்ச் 29– மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சாகிதுல்லா முன்ஷி (68) பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்போது அம்மாநில வக்பு வாரியத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
நீதிபதி சாகிதுல்லா முன்ஷி சில ஆண்டு களுக்கு முன்பு தனது வசிப்பிடத்தை ‘போபஜார்’ பகுதியில் இருந்து ‘என்டலி’ பகுதிக்கு மாற்றியிருந்தார். புதிய முகவரிக்கு தனது வாக்காளர் அடையாள அட்டையை மாற்றுவதற்காக, பாஸ்போர்ட் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தார். ஆனால், புதிய முகவரியில் பெயர் சேர்க்கப்படுவதற்குப் பதிலாக, வாக்காளர் பட்டியலில் இருந்தே அவரது பெயர் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள அவர் கூறியதாவது: “தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல் மிகவும் அவமானகரமானது மற்றும் மனவேதனை அளிக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும்போதே, எனது குடியுரிமை மற்றும் அடையாளம் குறித்து கொலிஜியம் மற்றும் குடியரசுத் தலைவரால் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒருவரின் பெயரை, எந்தவித அடிப்படை ஆய்வும் இன்றி இயந்திரத்தனமாக நீக்கியுள்ளனர்.” இந்த நீக்கத்திற்கான அதிகாரப்பூர்வக் காரணங்கள் கிடைத்தவுடன், தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு உயர் பொறுப்பில் இருந்தவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன என்ற கேள்வியும் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
