பெங்களூரு, மார்ச் 28 கருநாடகாவில் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த இருமொழிக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில், சித்தராமையா தலைமையிலான மாநில அரசு மிக முக்கியமான அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனி பொதுத்தேர்வு முடிவுகளில் ஹிந்தி மொழி மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னட அமைப்புகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, மாநில அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது இதுவரை கட்டாயப் பாடமாக இருந்த ஹிந்தி, இனி விருப்பப் பாடமாக மாற்றப்பட்டுள்ளது. ஹிந்தித் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் இனி தரவரிசைப் பட்டியலுக்குக் கணக்கிடப்படாது. அதற்குப் பதிலாக A, B, C, D என்ற அடிப்படையில் கிரேடு மட்டுமே வழங்கப்படும்.
இந்த மாற்றம் காரணமாக, எஸ்.எஸ்.எல்.சி தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 625-லிருந்து 525-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கருநாடகாவில் ஹிந்தித் திணிப்புக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக, எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஹிந்தியை மதிப்பெண் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம், தமிழ்நாட்டைப் போலவே கருநாடகாவிலும் இருமொழிக் கொள்கையை வலுப்படுத்துவதற்கான முதல் படியை முதலமைச்சர் சித்தராமையா எடுத்து வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மாநில உரிமைகள் மற்றும் மொழிப் பற்றைப் பாதுகாப்பதில் இது ஒரு மைல்கல் என்று கன்னட ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மாநில அரசின் இந்த முடிவிற்கு கர்நாடக பாஜகவும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
கருநாடகாவில் கடந்த ஆண்டு நடந்துமுடிந்த பொதுத்தேர்வில் ஹிந்தியில் மட்டும் 12.4 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இவர்கள் அனைவருமே கன்னடம் மற்றும் ஆங்கிலத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள். அவர்களின் பாதிபேருக்கு கருணை மதிப்பெண் வழங்கி தேர்ச்சி அடையாச்செய்த மாநில அரசு இந்த ஆண்டு இதுபோன்ற சூழல் வந்துவிடக்கூடாது என்ற முடிவில் ஹிந்தி மொழிப்பாடத்திற்கு மதிப்பெண் கிடையாது என்று கூறியுள்ளது மட்டுமல்லாமல் தேர்விற்குச் சென்றாலே போதுமானது என்றும் கூறியுள்ளது.
