டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக கட்சியில் கடும் உள்கட்சி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தேர்தல் சீட்டு (வேட்பாளர் தேர்வு) வழங்கலில் பணம் வாங்கி சீட்டு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து, பல இடங்களில் பாஜக அலுவலகங்கள் மீது போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த குற்றச் சாட்டுகளை கட்சி அதிகாரப்பூர்வமாக மறுத்தாலும், கட்சியின் உள்ளே அதிருப்தி வெளிப்படையாகி விட்டது என்று கூறப்படுகிறது.
* மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் (EC) நடத்தும் சிறப்பு வாக்காளர் பட்டியல் (SIR)” குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. சுமார் 32 லட்சம் பேர் அளித்த மனுக்களில் 12.8 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 6 – வேட்பாளர் மனு தாக்கல் கடைசி நாள். அதற்குள் எஸ்.அய்.ஆர். முடிவடையவில்லை என்றால் பலருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பே கிடைக்காமல் போகலாம். இந்த SIR நடவடிக்கை வாக்காளர் பட்டியலை சரி செய்யும் பெயரில் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பாதிக்கக்கூடும் என்று தலையங்க கட்டுரை எச்சரிக்கிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* திருநங்கைகள் சட்ட மசோதாவை திரும்பப் பெறுக; உச்சநீதிமன்றம் அமைத்த குழு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல். திருநங்கைகள் உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு, ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.. அதே நாளில், மக்களவையில் இந்த சர்ச்சைக்குரிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
தி இந்து:
* பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தது. சட்டமன்றத் தேர்தலுக்கு மத்தியில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பெண்கள் இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட அரசு முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* எதிர்க்கட்சிகளை விட 10 மடங்கு அதிக நன் கொடைகளை பாஜக பெற்றுள்ளது: நிதி இடைவெளியை சுட்டிக்காட்டும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) அறிக்கையில் கடந்த 2024-2025ஆம் ஆண்டில், தேசியக் கட்சிகளால் அறிவிக்கப்பட்ட ரூ.20,000க்கும் மேலான நன்கொடைகள் 11,343 பங்களிப்புகள் மூலம் ரூ.6,648.563 கோடி வந்துள்ளன. இதில், பாஜக மட்டும் ரூ.6,074.015 கோடியை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ரூ.517.394 கோடியை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உச்ச நீதிமன்றத்தை விமர்சித்ததால் சர்ச்சை எழுந்த நிலையில், மாணவருக்கு ஆதரவாக நின்றது திருச்சியில் உள்ள தமிழகச் சட்டப் பல்கலைக்கழகம். 8-ஆம் வகுப்பு NCERT பாடத்திட்டம் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எடுத்த நிலைப்பாட்டை விமர்சித்து, “உச்ச நீதிமன்றத்திற்கு முதுகெலும்பு இல்லை” (THE SC HAS NO SPINE) என்ற தலைப்பில் தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார் தமிழக தேசியச் சட்டப் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர் ஏ. ரிஷி குமார்.
– குடந்தை கருணா
