* தி.மு.க. அறிக்கையின் நகல் + ‘‘ஜூம்லாக்கள்’ = அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை!
* தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. ஆட்சி நிறைவேற்றியதுபோல, அ.தி.மு.க.வால் நிறைவேற்ற முடியாது!
* ஆண்டுக்கு ஆண்டு ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்?
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை செயலில் நிறைவேற்றிக் காட்டியது; தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்து, இரட்டிப்பு வாக்குறுதியைக் கொடுக்கும் அ.தி.மு.க., அதற்கான ரூ.80 ஆயிரம் கோடிக்கான நிதிக்கு எங்கே போகும்? சொன்னதை செயல்படுத்தும் தி.மு.க.வே சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியில் அமர்வது உறுதி என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ‘நகலாக’வே அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எவற்றையெல்லாம் தி.மு.க. கடந்த தேர்தல் அறிக்கையில் சொல்லி, அதன்படி ஆட்சி ஏற்றதும் செய்துவந்ததோ, அதையெல்லாம் இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துவோம் என்பதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ‘காப்பி’யாகவே அமைந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கென்று தனியாக ஒரு குழு அமைத்து, மக்களின் தேவைகளையும், அவற்றை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து, அவற்றை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்து, வெற்றி பெற்று, வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது என்ற வரலாற்றை உருவாக்கி இருக்கிறது.
மக்களின் அடிப்படைத் தேவைகள் முதல் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான கட்டமைப்புகள் வரை பலவற்றையும் கருத்தில் கொண்டு தான் அதன் தேர்தல் அறிக்கைகள் அமைந்துள்ளன.
கலைஞர் வழங்கிய
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
முதல்முறையாக, கலைஞர் – தொலைக்காட்சிப் பெட்டி எல்லோருக்கும் வழங்கப்படும் என்று தி.மு.க. சொன்னபோது, அது சாத்தியமா என்று கேட்டார்கள்; அதில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்த்தார்கள்; அந்தத் தொலைக்காட்சிப் பெட்டி எவ்வளவு நாள் பயன்படும் என்று ஏளனம் பேசினார்கள். ஆனால், இவையெல்லாவற்றையும் பொய்யாக்கினார் கலைஞர். சொன்னபடி வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி என்ற உறுதிமொழியைச் சாத்தியப்படுத்தினார்; அனைத்துக் கட்சியினரையும் கொண்ட குழு அமைத்து தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவதற்கான நடவடிக்கைகளை வெளிப்படையாகச் செய்தார், இன்னமும் கூட கலைஞர் வழங்கிய தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், அதற்குப் பிறகு அதே போல மின்விசிறியும், மிக்சியும் வழங்குவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் தந்த பொருட்கள் எப்படி இருக்கின்றன என்பதை அதே ஆட்சியிலேயே மக்கள் அறிந்து கொண்டார்கள்.
வண்ணத் தொலைக்காட்சி என்பது, வெறும் வீட்டு அலங்காரம் அல்ல; அது வெகுமக்களுக்கு அறிவின் திறவுகோலாகப் பயன்பட்டது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அவற்றை இலவசமாக வழங்கி மக்களைக் கவருவது என்ற நோக்கில் தி.மு.க. செய்யவில்லை!
தி.மு.க.வின் ஒவ்வொரு திட்டமும் நிகழ்த்தியிருக்கும் சமூக மாற்றத்தைத் தனிப் புத்தகமாகச் சொல்லலாம்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டங்களுக்கு அடிப்படையாக இருப்பது அதில் உள்ளூர அமைந்திருக்கும் சமூக மாற்றத்திற்கான நோக்கங்கள் தான். மகளிர் திருமண நிதி உதவித் திட்டத்திற்கு கல்வியை அடிப்படையாக வைத்தது தான், பெண் கல்வியில் தமிழ்நாட்டின் பெரும் பாய்ச்சலுக்குக் காரணமாக அமைந்தது. அதை வெறும் திருமண நிதி உதவித் திட்டமாக மட்டும் புரிந்துகொள்வது போலத் தான் அ.தி.மு.க. எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறது. அதனால் தான், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிகள் நிகழ்த்தும் பண்பு மாற்றத்தை அ.இ.அ.தி.மு.க.வால் நிகழ்த்த முடியவில்லை. இப்படி ஒன்று இரண்டு அல்ல; திமுகவின் ஒவ்வொரு திட்டமும் நிகழ்த்தியிருக்கும் சமூக மாற்றத்தைத் தனிப் புத்தகமாகச் சொல்லலாம். (அதன் ஒரு பகுதியைத் தான் “Dravidian Model” என்ற பொருளாதார ஆய்வுப் புத்தகம் சொன்னது)
ஆனால், அதிமுகவோ, மேலோட்டமாக அவற்றை வெறும் இலவசம் என்ற கணக்கில் மட்டும் தான் புரிந்துகொள்கிறார்கள் என்பதைத் தான் இந்தத் தேர்தல் அறிக்கை கூட அப்பட்டமாகச் சொல்கிறது. அதனால் தான், ஃபிரிட்ஜ் வழங்குகிறோம் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கிய ‘டிரெண்டில்’ இன்னமும் தேங்கி நிற்கிறார்கள். என்ன செய்ய… உண்மையான சமூக நோக்கம் இருந்தால் தானே, அவை செயல்திட்டங்களாக வெளிவரும்?
பதவியில் அமரும் ஆசையும், கட்சியில் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கமும் மட்டுமே இருந்தால், மக்கள் நலன் பற்றி சிந்திப்பது எப்படி சாத்தியப்படும்?
காலத்தைத் தாண்டி சிந்திக்கும்
திராவிட முன்னேற்றக் கழகம்!
திராவிட முன்னேற்றக் கழகமோ கல்வி, பொரு ளாதாரம், வேலைவாய்ப்பு, கட்டமைப்பு என்று காலத்தைத் தாண்டி சிந்தித்து, அதனைச் செயல்படுத்தி, வெற்றிக் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டி ருக்கிறது. அதன் மக்கள் நலத் திட்டங்கள் மக்களை முடக்கும் திட்டங்கள் அல்ல; எழுந்து நடப்பதற்கும் ஓடுவதற்குமான உடல்வலுவைக் கொடுக்கும் திட்டங்கள் என்பதை உலகமே வந்து பாடம் படித்துச் செல்கிறதே!
கடந்த 2021 தேர்தலில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப் போவதாக தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளிவந்ததும், ‘அது சாத்தியப்படாது – பொருளாதாரம் இடம்தராது’ என்று சொன்னவர் தான் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். ஆனால், வெற்றிகரமாக அதைச் செயல்படுத்தி, மகளிர் உரிமையை நிலை நாட்டியுள்ளது – தி.மு.க. தலைவர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு.
இன்று அதே எடப்பாடி பழனிசாமிதான் ‘மாதத்துக்கு ரூ.2000 தருவோம் மகளிருக்கு’ என்று அறிவிக்கிறார்! அதுமட்டுமல்ல, குடும்பத்துக்கு ரூ.10,000, இலவச கேஸ் சிலிண்டர், அரிசி, பருப்பு, எண்ணெய், குளிர்சாதனப் பெட்டி என்று பலவற்றையும் அறிவித்துள்ளார். தி.மு.க. செயல்படுத்தி வரும் திட்டங்களையெல்லாம் இரட்டிப்பாக்குவோம் என்று வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார்! இவற்றையெல்லாம் செய்வதற்கு என்ன வாய்ப்பிருக்கிறது என்பது பற்றி யோசித்தார்களா என்பது முக்கியக் கேள்வி அல்லவா?
தேர்தல் நேரத்தில் எதையும் சொல்லலாம். பின்னாளில் கேட்கும் போது அதெல்லாம் ‘ஜூம்லா’ என்று தங்கள் டில்லி எஜமானர்கள் பாணியில் சொல்லிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்களா? அவர்கள் தான் ‘வங்கிக் கணக்கைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். 15 லட்சம் ரூபாய் பொத் பொத்தென்று வந்து விழும்’ என்று சொன்னார்கள். நடந்தது என்ன? பணம் போட்டுத் தொடங்கிய வங்கிக் கணக்கில் இருப்பு குறைவாக இருக்கிறதென்று, அந்த இருப்பையும் பறித்துக் கொண்டது தான் மிச்சம். ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு என்றார் மோடி. 40% படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்று ஆய்வுத் தகவல் வெளிவந்திருக்கிறது. இதுதானே அவர்களின் ’உறுதிமொழி’களின் உறுதித்தன்மை! அப்படித் தான் இருக்கிறது இவர்களின் இந்தத் தேர்தல் அறிக்கையும்!
கடன் மூலம் கொண்டு வருவார்களா? அல்லது வரியை உயர்த்துவார்களா?
அதிமுக அறிவித்துள்ளபடி செயல்படுத்த வேண்டு மானால், ஆண்டுக்கு 80,000 கோடி ரூபாய் அரசுக்குச் செலவாகும்.
அது தவிர, ஒரு முறை செலவு என்று கணக்கிட்டால், அது 50,000 கோடி ரூபாய் வரை வரும். (சில கணக்கீடு கள் தனியே)
தமிழ்நாட்டின் நிதிநிலையைக் கொண்டு இதை எப்படி சாத்தியப்படுத்துவார்கள்? மேற்சொன்ன தொகை களை எப்படி கொண்டு வருவார்கள்? ஏற்கெனவே இருப்பதிலிருந்து குறைந்தது 30% அதிக நிதி தேவைப்படுமே! அவற்றைக் கடன் மூலம் கொண்டு வருவார்களா? அல்லது, வரியை உயர்த்துவார்களா?
5 ஆண்டுகால திமுக அரசின் சாதனை!
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரட்டை இலக்கத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவந்து 11.19% என்ற அளவை எட்டியது; திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டமிடலுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலை மைக்கும் கிடைத்த வரலாற்று வெற்றி அல்லவா இது? தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மைப் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் பெரும் பணியின் வெளிப்பாடல்லவா? தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16% வளர்ச்சியை எட்டியிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது 5 ஆண்டுகால திமுக அரசின் சாதனையல்லவா?
அதிலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் முட்டுக்கட்டை களையும், தடைகளையும், தொழில் முதலீட்டைப் பறிக்கும் துரோகங்களையும் தாண்டி பெற்ற வெற்றி யல்லவா? தமிழ்நாடு அரசால் திறம்பட முன்னோக்கி நகர்த்தி இழுத்துச் செல்லப்படும் அரசு வாகனத்தை, பின்பக்கத்தில் ஒரு என்ஜினைப் பொருத்தி, பின்னோக்கி இழுக்கப் பார்க்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் டப்பா என்ஜின்களைச் செயலிழக்கச் செய்து அசகாய அசுரனாக இழுத்துச் செல்லும் வல்லமை பொருந்திய அரசல்லவா மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு!
இவையெல்லாம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடக்கக் கூடியதா? அதிகம் கடன் வாங்குகிறார்கள் என்று புலம்பினார்களே! தமிழ்நாடு அரசு, கடன் வாங்குவதற்குத் தகுதி படைத்த அளவு பொருளாதாரத்தை உயர்த்தி யதோடு, அதிக பட்ச அளவை மீறாமல் மிகச் சிறப்பாகப் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகிறதே, இப்படியொரு வரலாறு அதிமுகவுக்கு, குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு உண்டா?
‘எப்படியும் வெல்லப் போவதில்லை – இந்த அரசியல் ஏலத்தையாவது ஏற்றிவிடுவோம்’ என்கிற எண்ணத்தில் தான் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்களா? இதில், மக்கள் நலத் திட்டங்களையெல்லாம் ஏதோ இலவசங்கள் என்று கிண்டல் பேசிய புதிய அரிதாரங்களின் கட்சி, இதே வரிசையில்தான் மாதத்துக்கு மகளிருக்கு ரூ.2500 என்று அறிவித்துள்ளதாம்! போட்டி அரசியலின் பொல்லாத செயல்கள்!
ஒன்றிய அரசை எதிர்த்துப் பேசும் திராணி இருந்ததுண்டா அ.தி.மு.க.வுக்கு?
நிதிப் பகிர்வைப் படிப்படியாகக் குறைத்துள்ளதைச் சுட்டிக்காட்டி கூடுதல் நிதி கோருவார்களாம். இவர்களின் கூட்டணிக் கட்சி தானே ஒன்றியத்தை ஆளுகிறது. நடக்கும் அநீதிகளை என்றைக்காவது சுட்டிக்காட்டி, போராடியது உண்டா? வாதாடியது உண்டா? தமிழ்நாட்டின் கண்களில் மட்டும் சுண்ணாம்பைத் தடவும் ஒன்றிய அரசை எதிர்த்துப் பேசும் திராணி இருந்ததுண்டா – அடகு வைக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவுக்கு?
மக்கள் நலத் திட்டங்கள் என்பதைக் கடந்து, சமூகநீதிக் கண்ணோட்டத்திலோ, மாநில உரிமைக் கண்ணோட்டத்திலோ ஏதாவது வளர்ச்சிப் போக்கு உண்டா அதிமுக தேர்தல் அறிக்கையில்?
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடாமல் இன்னமும் தமிழ்நாட்டின் தொன்மையை மறைக்கப் பார்க்கிறதே ஒன்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அரசு! அதற்குத் துரும்பைக் கிள்ளிப் போட்டதுண்டா அ.(அமித்ஷா)தி.மு.க? தடையின்றித் தொடர்வோம் என்று எழுதியிருக்கிறார்களே… கடந்த ஆண்டுகளில் தடை ஏற்பட்ட போது, மக்கள் கொதித்தெழுந்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராடிய பின்னர் தானே கீழடி அகழாய்வைத் தொடர்வதற்கு அடியெடுத்து வைத்தார் எடப்பாடியார்?
மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால், தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வித் தொகையைத் தர மாட்டோம் என்று பா.ஜ.க. அமைச்சர் தர்மேந்திர பிரதான் அடம்பிடித்தாரே! என்ன செய்தது அ.தி.மு.க? இரயில் நிலையங்கள், வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள் எல்லாவற்றிலும் ஹிந்தியைத் திணித்துக் கொண்டிருக்கிறதே ஒன்றிய பா.ஜ.க.அரசு. அதை எதிர்த்துப் போராடியதுண்டா?
பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பறித்தது யார்? இதே அதிமுக தானே! அதைச் சரிப்படுத்தி புதிய திட்டம் காண 21 ஆண்டுகள் ஆகியிருக்கிறதே! இப்போது அரசு ஊழியர்களுக்குக் கரிசனம் காட்டுவது போல் பேசத் தகுதியுண்டா அதிமுகவுக்கு?
யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்?
கிறிஸ்துவத்துக்கு மதம் மாறும் ஒடுக்கப்பட்டோருக்கு, பட்டியலினத்தோருக்கான எந்த உரிமைகளும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் வாதாடி, உரிமைகளை மறுத்து தீர்ப்பு பெற்றுள்ளதே ஒன்றிய பா.ஜ.க. அரசு, அவர்களிடம் போய் மீண்டும் நிற்போம் என்கிறார்களே தேர்தல் அறிக்கையில்! யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்?
வெறும் கரண்டியை வைத்திருப்போர் எப்படியும் ஆட்டலாம்; ஆட்சிக்கு வரப் போவதில்லை என்றதும், எதையும் சொல்லலாம்! ஆனால், செயல்படுத்தும் நோக்கத்துடன் இருக்கும் கட்சி, செயல்படுத்திக் காட்டிய கட்சி, எதையும் கவனமாகத் தான் கையாளும் – எண்ணெய்க் கரண்டியைப் பிடித்த கை போல!
அ.தி.மு.க. வெறும் கரண்டியைப் பிடித்துச் சுற்ற நினைக்கிறது. தி.மு.க. தான் ெபாறுப்போடு அறிவித்து, சிறப்போடு நடத்திக் காட்டி வெற்றிக் கரங்களைப் பற்றப் போகிறது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.3.2026
