திருவனந்தபுரம், மார்ச் 25 கேரள பாஜக தலைவரும், நேமம் தொகுதி வேட்பாளருமான முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ரூ.200 கோடி பங்களாவை கணக்கில் காட்டவில்லை என்று குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல்
இதுதொடர்பாக ஆதாரங் களை வெளியிட்டு காங்கிரஸ் கட்சி, அவரின் வேட்புமனுவைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணை யத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நேற்றுடன் (24.3.2026) வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், பாஜக சார்பில் நேமம் தொகுதி யில் போட்டியிட ராஜீவ் சந்திர சேகர் வேட்புமனுத் தாக்கல் செய் துள்ளார்.
அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 93 கோடிக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ராஜீவ் சந்திரசேகருக்கு சுமார் ரூ. 107 கோடி அளவிலான கடன் பொறுப்புகளும், அவரது மனைவிக்கு சுமார் ரூ. 1.62 கடனும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பெங்களூரு கோரமங்கலாவில் உள்ள ரூ. 200 கோடி மதிப்பிலான பங்களாவை பிரமாணப் பத்திரத்தில் ராஜீவ் சந்திரசேகர் காட்டவில்லை என்று காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”நேமம் தொகுதியின் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர், பெங்களூரு, கோரமங்களா 3ஆவது பிளாக்கில் உள்ள தனது 49,000 சதுர அடி பங்களா குறித்த தகவலைத் தனது பிரமாணப் பத்திரத்தில் வெளியிடவில்லை.
இது நாட்டின் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ள 1.07 ஏக்கர் சொத்து ஆகும், இப்பகுதியில் பல இந்திய பெரும் பணக்காரர்கள் வசிக்கின்றனர். இங்கு ஒரு சதுர அடி நிலத்தின் விலை சுமார் ரூ. 35,000 முதல் ரூ. 50,000-க்கும் அதிகமாகும். தோராயமாக ராஜீவ் சந்திரசேகர் நிலத்தின் மதிப்பு ரூ. 200 கோடியாக இருக்கலாம்.
கடந்த ஆறு நாள்களுக்கு முன்னதாக, மார்ச் 17 அன்று இந்த பங்களாவுக்கு சொத்து வரி செலுத்தப்பட்டுள்ளது.
இது பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருடையதுதானா என்பதில் சந்தேகம் இருப்பின், அவருடைய 2024 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், ‘408, கோரமங்களா 3வது பிளாக்’ என்ற முகவரியை அவரது வசிப்பிடமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் சந்திரசேகர் ஒரு தொடர் குற்றவாளி. மீண்டும் மீண்டும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை தவறாக வழிநடத்த முடியும் என்று அவர் நம்புகிறார். அவர் பெரும் தொழிலதிபராக இருந்தபோதிலும், அவருக்குச் சொந்தமாக பங்களாவோ, காரோ இல்லை என்று பிரமாணப் பத்திரம் குறிப்பிடுகிறது.
இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் தின்படி வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இல்லையெனில், தேர்தல் ஆணையம் பாரபட்ச மின்றி செயல்படுகிறதா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புவது உண்மையாகிவிடும்” எனக் குறிப் பிடப்பட்டுள்ளது.
