திருச்சி, மார்ச் 25- ஆறடிக் கம்பைத் தூக்கி ஆடும் வீரர்களுக்கு மத்தியில், ஆறே வயதில் தேசியப் பதக்கங்களைச் சுழற்றி எடுத்து வந்துள்ளார் திருச்சி மண்ணின் சிறுமி சுவஸ்திகாசிறீ.
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும் இம்மாணவி, தனது அபார சிலம்பத் திறமையால் தேசிய அளவில் தமிழ்நாட்டின் பெருமையை நிலைநாட்டி யுள்ளார்.
கேரளாவின் மூணாறு நகரில் நடைபெற்ற 24-ஆவது தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் (SGADF 2025) சுவஸ்திகா சிறீ ‘தனி கம்பு வீச்சு’ பிரிவில் மின்னல் வேக வித்தைகளைச் செய்து காட்டி வெள்ளிப் பதக்கத்தைக் கைபற்றினார். ‘படிவம்-2’ (Form-2) சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1-ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற முதலாவது தேசியப் பாரம்பரிய சிலம்பப் போட்டியில், ‘இரட்டைக் கம்பு வீச்சு’ பிரிவில் கலந்துகொண்ட சுவஸ்திகா சிறீ, இரண்டாம் இடம் பிடித்து மெரிட் சான்றிதழை வென்றார்.
மாணவியின் விடா முயற்சியையும், பயிற்சியையும் பாராட்டிப் பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து களைத் தெரிவித்தனர்.
