புதுடில்லி, மார்ச் 23- உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை விநியோகத்தை கூடுதலாக 20 சதவீதம் அதிகரிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் உணவு விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கான எரிவாயு உருளை விநியோகம் தற்போது 50 சதவீதத்தை எட்டியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக பன்னாட்டு அளவில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வணிக எரிவாயு உருளை விநியோகம் 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருந்தது. தற்போது உள்நாட்டு உற்பத்தி சீராகியுள்ளதால் இந்தத் தட்டுப்பாடு நீங்கியுள்ளது.
தொழிற்துறை உணவகங்கள் மற்றும் பொது சமையல் கூடங்கள். உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்கள்.
கூடுதல் ஒதுக்கீடு பெற விரும்பும் நிறுவனங்கள் கீழ்க்கண்ட விதிகளைப் பின்பற்றுவது அவசியம்: சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களிடம் முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும். குழாய் மூலம் எரிவாயு இணைப்பு (PNG) பெறுவதற்கு கட்டாயம் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
வீட்டு உபயோக எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல் விநியோகத்தில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை என அரசு உறுதிப்படத் தெரிவித்துள்ளது. கள்ளச்சந்தையைத் தடுக்க நாடு முழுவதும் 3,500 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 1,400 எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கண்காணிப்புப் பணிகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப் பட்டுள்ளன. மாலுமிகள் பாதுகாப்பு: பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள 22 இந்தியக் கப்பல்களில் பணியாற்றும் 611 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
