வேளாண் பொருட்களுக்கு ஊக்கத் தொகை ஒன்றிய அரசின் உத்தரவுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்!

3 Min Read

சென்னை, மார்ச் 21- விவசாயிகள்விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விட, மாநிலஅரசுகள் கூடுதலாக ஊக்கத்தொகைவழங்கக்கூடாது என,ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை வருமாறு:–

வேளாண் பொருட்களுக்கு ஊக்கத்தொகை

கேரள மாநில எம்.பி. ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்தஒன்றியநிதித்துறை அமைச்சகம், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைக்கு மேல் மாநில அரசுகள் எவ்வித கூடுதல்தொகையையும் வழங்கக் கூடாது என்று, அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், கேரளா போன்ற மாநிலங்கள் தற்போது வழங்கி வரும் ஊக்கத் தொகையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். நாடு முழுவதும் 22விளைபொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைக்குமேல் எவ்வித தொகையையும் அரசு ஆதரிக்கவில்லை என்றும் ஒன்றிய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

வேளாண் விளைபொருட்களுக்கான உற்பத்தி செலவு என்பது நாடு முழுவதும் ஒரே சீராக இருப்பதில்லை.

மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் நிலையில், முதலீட்டுக்கான வட்டி, குடும்ப உழைப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் கணக்கில் கொள்ளாமல், ஒரு பகுதியை மட்டும் கணக்கிட்டு அறிவிக்கப்படும் விலையால் விவசாயிகள் பெரும்இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

கைவிட வேண்டும்

இந்த இழப்பை ஈடுகட்டவே, அந்தந்த மாநில அரசுகள் தங்களின் நிதி நிலைமைக்கு ஏற்ப ஊக்கத் தொகைகளை வழங்குகின்றன. எனவே, விவசாயிகளைப் பாதிக்கும் இந்த உத்தரவை ஒன்றிய அரசு உடனடியாக கைவிடவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

பறவைக் காய்ச்சல் எதிரொலி

கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டது!

சென்னை, மார்ச் 21- சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த வேடந்தாங்கல் வகை பறவைகள் கொத்து கொத்தாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா நேற்று (20.3.2026) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டது.

பறவைக் காய்ச்சல்

கடந்த ஜனவரி 5ஆம் தேதி அடையாறு பகுதியில் காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அவற்றின் மாதிரிகளை போபாலில் உள்ள ஒன்றிய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்ததில், ‘பறவைக் காய்ச்சல்’ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உயிரிழந்த பறவைகளை பாதுகாப்பான முறையில் அகற்றவும் ஒன்றிய அரசு தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தியிருந்தது.

சுமார் 20 கோடி ரூபாய் செலவில் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட கிண்டி சிறுவர் பூங்காவில், கூழைக்கடா, கரண்டிவாயன், வெள்ளை கூழைக்கடா, சாம்பல் நாரை உள்ளிட்ட 10 வகைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பறவைகள் இருந்தன. அவற்றை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

கடந்த சில நாட்களாக இப்பறவைகள் அடுத்தடுத்து உயிரிழக்கத் தொடங்கின. இதுவரை 50-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, வழக்கமான செவ்வாய்க்கிழமை விடுமுறைக்கு பின்னரும், நேற்று (20.3.2026) திடீரென பூங்கா மூடப்பட்டது.  உயிரிழப்பு விவகாரத்தை ரகசியமாக வைக்க அதிகாரிகள் முயன்றதாகக் கூறப்படும் நிலையில், தற்போது “பறவைக் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளுக்காக பூங்கா மூடப்பட்டுள்ளது” என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பறவைகள் உயிரிழந்து வருகின்றன. மனிதர்களுக்கு இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், 0.5 சதவீதத்தினருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்காக மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மீண்டும் பூங்கா எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *