சென்னை, மார்ச் 21- தமிழ்நாட்டில் ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஆட்டிசம் குறைபாடு
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ஏஎஸ்டி), கவனச்சிதறல் (ஏடிஎச்டி), கற்றலில் குறைபாடு மற்றும் பெருமூளை வாதம் போன்ற பாதிப்புக்குள்ளானவர்கள், பொதுவான மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது சவாலான ஒன்றாக உள்ளது. மற்றவர்களைப் போல வரிசையில் நின்று காத்திருக்கும் மனநிலை மற்றும் உடல்நிலை அவர்களுக்கு இருப்பதில்லை.
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, அறிவுசார் குறைபாடு உடையோருக்கான சங்கம் சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. இவர்களுக்குச் சிகிச்சையில் சிறப்புச் சலுகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அரசு உத்தரவின்
முக்கிய அம்சங்கள்:
முக்கிய அம்சங்கள்:
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் செந்தில்குமார் அவர்கள் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
புறநோயாளி சிகிச்சை (ஓபி): ஆட்டிசம், பெருமூளை வாதம், பிறவி மரபணுக் குறைபாடு மற்றும் பல்லுறுப்பு முடக்கம் உடையவர்களுக்கு, புற மருத்துவப் பயனாளி சிகிச்சையின் போது நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அவசர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவப் பயனாளிகள் எவ்வாறு விரைவாகக் கையாளப்படுகிறார்களோ, அதே போன்ற முக்கியத்துவம் இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இந்த உத்தரவு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்.
இந்த நடவடிக்கையானது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் சிரமத்தைப் பெருமளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
