வி.சி.வில்வம்
“புதிதாகப் புகழ் வராவிட்டால், பழைய புகழும் போய்விடும்”, என ஒரு பொன்மொழி உள்ளது. சிலர் எப்போதோ சில சாதனைகளைச் செய்து விட்டு, காலத்திற்கும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதுதான் பழம்பெருமை பேசுவது, ஆனால் அது நீடிக்காது.
ஆலம் விழுது போல் ஆசிரியர் பணி!
அதேநேரம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பவர்கள் மேலும், மேலும் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். அவ்வாறே தங்களின் தொடர் செயல்பாட்டால் புகழை மங்காமல் வைத்திருப்பவர்கள்.
பெரியார் மருந்தியல் கல்லூரிப் பணியாளர்கள். பொதுவாகவே பெரியார் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே சமூகத்தில் பெரும் மதிப்பில் இருப்பவை. தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட கல்வி நிலையங்கள், ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் ஆலம் விழுது போல் வேரூன்றியும், தழைத்தும், உயர்ந்து காணப்படுகின்றன.
கல்விக்கு மட்டுமின்றி, கட்டுப்பாடு, ஒழுக்கம், மனிதநேயம் என அனைத்திற்குமே மகுடம் சூட்டுவதாய் இருக்கின்றன. சில நிறுவனங்களில் 80 விழுக்காட்டிற்கு மேல் மகளிரே நிர்வாகம் செய்திடும் மகத்தான சாதனைகளையும் அங்கு காணலாம்.
மருந்தியல் துறையில் மகளிர்!
அதில் பெரியார் மருந்தியல் கல்லூரியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தமிழ்நாடு அளவில் புகழ்பெற்றதாய் விளங்கும் இக்கல்லூரியில், சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள மாணவர்கள் பயின்று வருகின்றனர். பிற மாநிலத்தவரும் இதில் அடக்கம்.
மருந்தியல் கல்வி, மருந்தியல் பகுப்பாய்வு, மருந்தியல் தாவரவியல், மருந்தியல் பயிற்சி, மருந்தியல் தயாரிப்பு, ஆய்வுப் பணிகள், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் என மகளிரை மருந்தியல் துறையில் சாதனைப் படைக்க வைக்கிறது பெரியார் மருந்தியல் கல்லூரி.
அதுமட்டுமின்றி, சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு, நோய்த் தடுப்பு முறைகள், சுத்தமான குடிநீர், சுகாதாரமான வாழ்வியல், சமூகப் பொறுப்புணர்வு, குழு வாழ்வியல், தலைமைப் பண்புகளை வளர்த்தல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் இடைவிடாது தொடர்ந்து செய்து வரக்கூடிய நிறுவனம் பெரியார் மருந்தியல் கல்லூரி.
அணிவகுக்கும் அறிவுசார் நிகழ்வுகள்!
மேற்சொன்ன கல்விசார் மற்றும் சமூகம்சார் பொது நிகழ்வுகள் தவிர அறிவியல் ரீதியான பகுத்தறிவு நிகழ்வுகளும் இங்கே ஏராளம். இதில் தந்தை பெரியார் மற்றும் அன்னை மணியம்மையாரின் பிறந்தநாள், நினைவுநாள், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் நிகழ்ச் சிகள், ஆசிரியர்களுக்குப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, பெரியார் மன்ற நிகழ்ச்சிகள் என அறிவுசார் நிகழ்வுகள் அடுக்கடுக்காய் அணிவகுத்து நிற்கும்.
அதாவது மருந்தியல் கல்வி தொடர்பான விரிவான செயல்பாடுகள், சமூகத்திற்குப் பயன்படும் பொதுவான பணிகள், அறிவியல் முறைப்படி மேம்படுத்திக் கொள்ளும் தத்துவார்த்த நடவடிக்கைகள் என மூன்று திசைகளிலும் தங்களின் முத்தாய்ப்பைப் பதித்து வருகிறது பெரியார் மருந்தியல் கல்லூரி.
தொடக்கச் சிந்தனை!
அதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் அண்மையில் அவர்கள் வெளியிட்ட ஒரு நூல்! பதிப்புத் துறையிலும் அவர்கள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். நூல் வெளியீடு என்பதே ஒரு சிறப்பம்சம். அதிலும் இப்படி ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்கிற அந்தத் “தொடக்கச் சிந்தனைக்கே” ஆயிரம் பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் ஒரு புதிய கருத்தை உருவாக்குவதே இங்கு பிரதானம். அதன் பிறகு செய்வது எளிதாக இருக்கும்.
அந்த வகையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை’ நாளிதழில் எழுதி வரும் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ எனும் தொடரில் இருந்து, தங்கள் துறைக்கு ஏற்ற கருத்துகளைப் பிரித்தெடுத்து, அதை நூலாக மாற்றம் செய்து மாணவர்களுக்கும், இச்சமூகம் பயன்பெறும் வகையிலும் பெரும் பணியைச் செய்திருக்கிறார் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை.
ஆர்வமும், கூட்டு உழைப்பும்!
“அடடா… இது தெரிந்திருந்தால் நாமும் செய்திருக்கலாமே” என எல்லோரையும் ஏங்க வைக்கும் நிகழ்வு இது. இது ஏதோ போகிற போக்கில் உதிரும் சிந்தனை அல்ல; ஏதாவது செய்ய வேண்டும், சதா இயங்க வேண்டும், கல்லூரிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என 24 மணிநேரமும் உயிர்ப்புடன் சிந்திப்பவர்களுக்கே இது சாத்தியம். அப்படி உருவான சிந்தனையைப் பூத்துக் குலுங்கச் செய்வதற்குப் பெரும் அர்ப்பணிப்பு வேண்டும். இது ஒரே பணி என்றால் கூட செய்துவிடலாம். கல்லூரியின் பல்வேறு பணி நெருக்கடியில் இதையும் செய்வது என்பது சொற்களால் பிரதிபலிக்க முடியாத அவர்களின் ஆர்வம், கூட்டு உழைப்பு!
அந்த வகையில், ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூலில் இருந்து உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், சிகிச்சை முறைகள், மருந்துகளின் தன்மைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீங்கா வாழ்வு, மன அழுத்தம் நீக்குதல், சிரிப்பின் முக்கியத்துவம், மருத்துவத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள், மருத்துவர்களின் சிகிச்சை சாதனைகள், மருத்துவத்தின் மூடநம்பிக்கைகள், போலி அறிவியல், முதியோர் நலன் போன்ற அனைத்தையும் தனியாக எடுத்து, தங்கள் துறை சார்ந்த நூலாக, தனித்துவமாகத் தயாரித்துள்ளார்கள்.
அணிந்துரை எனும் அற்புதம்!
“ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றால், அதை நீ செய்”, என்கிறது ஒரு பொன்மொழி. அதைப்போல இந்த நூலை ஏதோ உருவாக்குவோம் என்று நினைக்காமல், இந்நூலிற்கு இவர்கள் வாங்கிய அணிந்துரையே மெய்சிலிர்க்க வைக்கிறது. பொதுவாக நமக்குத் தெரிந்த, உடனே எழுதித் தரும் நண்பர்களிடமே அணிந்துரை பெறுவோம். ஆனால் இவர்கள் அதிலும் தனித்தன்மையைக் காட்டிவிட்டார்கள்.
ஒரு எழுத்தாளருக்கே உரிய வகையில் முகவுரை எழுதியுள்ளார் முதல்வர் இரா.செந்தாமரை. தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் இயங்கும் இந்திய மருந்தியல் ஆணையத்தின் இயக்குநர் முனைவர் வி.கலைச்செல்வன், இந்திய மருந்துகள் சங்கத்தின் தலைவர் ஜெ.ஜெயசீலன், தமிழ்நாடு மருந்தியல் கழகத்தின் பதிவாளர் மு.தமிழ்மொழி, மருந்துகள் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் முனைவர் வி.சங்கர், புதுவைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்
பாஞ்.இராமலிங்கம், சென்னை மருத்துவக் கல்லூரியின், மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.இராதா, இங்கிலாந்து நாட்டில் பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் கதிரியக்க வேதியியல் துறையில் பணியாற்றும் முனைவர் க.மணிகண்டன் ஆகிய எழுபெரும் ஆளுமைகளிடம் இருந்து நூல் குறித்தத் திறனாய்வை வாங்கி இருக்கிறார்கள். பெரும் பொறுப்பில் இருப்பவர்களிடம் எழுதி வாங்குவதும், அதற்கு ஆகும் காலத்தையும் நாம் அறிவோம். ஆனால் அதையும் செவ்வனே முடித்திருக்கிறது இக்குழு!
அனைவருக்கும் பாராட்டுகள்!
மொத்தம் 304 பக்கங்களில், 93 தலைப்புகளில் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் பரிசளிக்கக் கூடிய பாதுகாப்புப் பெட்டகம் இது. “எளியதைச் செய்ய எவராலும் முடியும். எதிர்கொள்ள பலரும் அஞ்சும் பணியைச் செய்வதே துணிவு” என்கிற ஆசிரியரின் மகத்தான வரிகளை, மருந்தியல் கல்லூரியின் அனைத்துப் பணியாளர்களுக்கும் பாராட்டாய் முன் வைக்கிறோம்!
