மருத்துவக் கல்வி, அனைத்திந்தியத் தொகுப்பு 27 % ஓ.பி.சி. இட ஒதுக்கீடு 26,204 ஆக அதிகரித்துள்ள மாணவர் எண்ணிக்கை! தி.மு.கழகத் தலைவரின் மகத்தான சாதனை சரித்திரம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மூத்த வழக்குரைஞர் பி.வில்சன்
தி.மு.க. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்

மருத்துவக் கல்வியில் அனைத்திந்தியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டப் போராட்டம் சுதந்திர இந்தியாவின் சமூகநீதி அரசியல் வரலாற்றின் அழுத்தமான அடையாளமாக இன்று உருப்பெற்றுள்ளது. அந்த மகத்தான வரலாற்றினை எழுதியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த வகையில், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட மருத்துவக் கல்வி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றியவர் தி.மு.கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றால் மிகையில்லை.

உருவான ஒன்றியத் தொகுப்பு!

மாநிலங்களின் மருத்துவக் கல்லூரி இடங்களில் இருந்து 15 சதவீத இடங்களை ஒன்றிய அளவில் நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டிலும் அனைத்திந்தியத் தொகுப்பு இடங்கள் (All India Quota) உருவாக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு பிரதீப் ஜெயின் என்கிற மாணவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், 1986 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை வழங்கி, அனைத்திந்திய தொகுப்பு உருவாக்கப்பட்டது.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் மாநில மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் இருக்கைகளில் 15% மற்றும் முதுநிலை மருத்துவ இருக்கைகளில்50% அனைத்திந்திய ஒதுக்கீடாக மத்திய அளவில்நிரப்பப்பட வேண்டும்என்று நடைமுறை உருவானது.

ஆனால் இந்த அனைத்திந்தியத் தொகுப்பு உருவாக்கப்பட்ட பின்னர், மாநிலங்கள் பின்பற்றி வருகிற இடஒதுக்கீடு முறைகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (OBC) இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மாநிலங்களின் ஒதுக்கீட்டில் ஓபிசி இடஒதுக்கீடு இருந்தபோதிலும், மாநிலங்கள் ஒப்படைக்கும் அனைத்திந்தியத் தொகுப்பில் (AIQ) இருக்கைகளில் அது அமல்படுத்தப்படாதது சமூகநீதிக்கு எதிரானது. ஒன்றியத்தின் பாராமுகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்கம் தொகுத்த ஒரு தகவலின்படி. 2017 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நியாயமாக கிடைத்திருக்க வேண்டிய மருத்துவக் கல்வி இடங்கள் 11027. ஆனால் 27 சதவீத இட ஒதுக்கீட்டு உரிமைபடி ஓர் இடம் கூட மருத்துவ மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த அநீதியை தெரிந்தே செய்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

கட்டுரை

இந்த சட்டப்போராட்டத்தில் நாம் வெற்றிபெற, தி.மு. கழகத் தலைவர் அளித்த வழிகாட்டுதல்கள், அறிக்கைகள் வழி ஒன்றிய அரசுக்கு அவர் அளித்த அழுத்தங்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதங்கள், மாநிலங்களவையில் எனது வாதம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட வாதங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகள், ஊடகங்கள், சமூக வலை தளங்கள் மற்றும் மாணவர்களின் பாராட்டுகள் ஆகியவற்றின் தொகுப்பாக ‘‘மருத்துவக் கல்வியில் சமூகநீதி – 27 % சதவீத ஓபிசி இட ஒதுக்கீட்டின் சட்டப் போராட்ட வரலாறு” நூல் தயாரிப்பில் உள்ளது.
தி.மு.கழகத் தலைவர் அவர்களின் வாழ்த்து, ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அணிந்துரை, கழக இளைஞரணிச் செயலாளர் இளந்தலைவர் அவர்களின் வாழ்த்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் வாழ்த்து ஆகியவற்றைத் தாங்கி தயாராகி உள்ளது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தி.மு.கழகத் தலைவர் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் வெளியாகும். அவர் படைத்த எண்ணற்ற சாதனைகளின் மாணிக்கமாக இந்த நூல் திகழும்.

2019 ஆம் ஆண்டிலிருந்தே…

2019 ஆம் ஆண்டில், தி.மு. கழகத் தலைவர் அவர்கள், எனக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கியதுடன், மருத்துவக் கல்வியில் மறுக்கப்பட்டு வரும் ஓ.பி.சி. இட ஒதுக்கீடுக்கான போராட்டத்தை தொடங்கவும் வழிகாட்டினார். மாநிலங்களவையில் எனது முதல் உரையே, இந்த இட ஒதுக்கீடு தொடர்பாகத்தான் இருந்தது.

’ஓபிசி மாணவர்களுக்கு ஏ.அய்.கியூ. (AIQ) மருத்துவ இருக்கைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படாதது அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு எதிரானது’ என்று எனது வாதம் இருந்தது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்ல நம் முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டினார்.

தமிழ்நாட்டில் சமூகநீதியை முன்னிறுத்திய அரசியல் இயக்கங்களும் நம்மோடு, இந்த போராட்டத்தின் இணைந்தனர். கழகத் தலைவர் அவர்கள், இந்தப் போராட்டத்துக்கு நாடு தழுவிய அளவிலான ஆதரவினைத் திரட்டினார்.

நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றிலும் நமது போராட்டத்தின் விளைவாக. 2020ஆம் ஆண்டில் இந்த விவகாரம் தி.மு.க VS ஒன்றிய அரசு என்பதாக மாறியதை இந்தியாவே அறியும்.

மாநில அரசு ஒப்படைக்கும் மருத்துவ இருக்கைகளில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கப்படாமல் இருப்பது சட்டத்துக்கு எதிரானது என்று நமது வாதத்தின் நியாயத்தை புரிந்து கொண்டு, 2020 ஜூலை 27 அன்று, சென்னை உயர்நீதிமன்றம், ’ஓபிசி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த குழு அமைக்க வேண்டும்’ என வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவினை வழங்கியது.

அந்த உத்தரவை ஒன்றிய அரசு நிறைவேற்ற அழுத்தமும், குழுவின் பரிந்துரையை நிறைவேற்றா மல் நிறுத்தப்பட்டதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என இடைவிடாமல் நமது போராட்டம், 2021 ஆம் ஆண்டில், மருத்துவக் கல்வி ஓ.பி.சி. இட ஒதுக்கீடுக்கான முக்கியமான முடிவினை அறிவிக்கும் நெருக்கடியை ஒன்றிய அரசுக்கு அளித்தது. இறுதியாக 29 ஜூலை 2021 அன்று அனைத்திந்திய ஒதுக்கீடு (All India Quota) இருக்கைகளில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பினை வெளியிட்டது ஒன்றிய அரசு.

“மருத்துவக் கல்வியில் மதிப்பெண் மட்டும் திறமையின் ஒரே அளவுகோல் அல்ல; சமூக சமநிலையும் முக்கியமானது” என்கிற வாதங்களை நாம் முன்வைத்தோம். முக்கியமாக , மருத்துவக் கல்வி தரம் கெட்டுவிடும், தகுதி இல்லாதவர்கள் சேர்கிறார்கள்” என்கிற சமூக நீதிக்கு எதிரான வாதங்களை எல்லாம் முறியடித்து நாம் பெற்ற தீர்ப்புதான், ஒன்றிய அரசினை பணிய வைத்தது.

கட்டுரை

மாற்றமடைந்த நிலைமை!

இந்த முடிவு 2021–2022 கல்வியாண்டு முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் மருத்துவம், பல் மருத்துவர் (MBBS, BDS), முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் டிப்ளமோ மருத்துவ இருக்கைகளில் ஓபிசி மாணவர்கள் நேரடியாக பயன் பெறும் வகையில் அனைத்திந்திய ஒதுக்கீடு முறையில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக கடந்த அய்ந்து ஆண்டுகளில் ஓபிசி மருத்துவ மாணவர்களின் உரிமை மருத்துவ உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது.

2025 டிசம்பர் மாதத்தில் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரிடம் இது தொடர்பான விவரங்களைக் கேட்டு கேள்வி எழுப்பினேன்.

2007 முதல் மாநில ஒதுக்கீடு (SQ) மற்றும் அனைத்திந்திய ஒதுக்கீடு (AIQ) கீழ் கிடைக்கும் மொத்த மருத்துவ இருக்கைகள் ஆண்டுவாரியாக என்ன?

2007 முதல் அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் மாநிலங்கள் ஒப்படைத்த இருக்கைகள் மற்றும் ஒன்றிய நிறுவனங்கள் ஒப்படைத்த இருக்கைகளில் ஓபிசி (27%) உட்பட பல்வேறு இடஒதுக்கீட்டு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளின் எண்ணிக்கை என்ன?

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட WP 961/2021 வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் மாநிலங்கள் ஒப்படைத்த அனைத்திந்திய ஒதுக்கீடு இருக்கைகளில் ஓபிசி இடஒதுக்கீடு எந்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது?

தீர்ப்பின் அமலாக்கத்திற்கு பிறகு ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளின் மாநில வாரியான மற்றும் ஆண்டுவாரியான விவரம் என்ன?

என்கிற கேள்விகளை எழுப்பினேன். அதற்கு எழுத்துபூர்வமாக கிடைத்த பதில்களில், ஆண்டு வாரியாக ஒவ்வொரு படிப்பிலும் எவ்வளவு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்கிற விவரங்களை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கியது.

அந்த அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, அனைத்திந்திய ஒதுக்கீடு முறையில் மருத்துவ இருக்கைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளன. 2021 ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். அனைத்திந்திய ஒதுக்கீடு இருக்கைகள் 6,167 ஆக இருந்தது. 2022 ஆம் ஆண்டில் அது 6,689 ஆக உயர்ந்தது. 2023 ஆம் ஆண்டில் 7,624 ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 7,907 ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 8,015 ஆகவும் உயர்ந்தது. இந்த இருக்கைகளில் OBC மாணவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்றனர்.

முதுநிலை மருத்துவக் கல்வியிலும் இதே மாற்றம் ஏற்பட்டது. 2020 ஆம் ஆண்டில் AIQ கீழ் 8,542 இருக்கைகள் இருந்தன. 2021 ஆம் ஆண்டில் அது 9,814 ஆக உயர்ந்தது. 2022 ஆம் ஆண்டில் 11,122 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 12,277 ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 12,763 ஆகவும் உயர்ந்தது. இந்த இருக்கைகளிலும் OBC இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதால் மருத்துவக் கல்வியில் சமூகநீதியின் பரிமாணம் மேலும் விரிந்தது.

நிறைவேறிய மருத்துவக் கனவு!

10 மார்ச் 2026 அன்று மாநிலங்களவையில் மீண்டும் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் பதில் அளித்தார்.

அந்த அதிகாரப்பூர்வ பதிலில் 2021 முதல் 2025 வரை ஓபிசி மாணவர்கள் பெற்ற மருத்துவ இருக்கைகளின் விவரங்கள் வெளியிடப்பட்டன.

அந்த தகவல்களின் படி, அனைத்திந்திய ஒதுக்கீடு ஓ.பி.சி. இடஒதுக்கீடுஅமல்படுத்தப்பட்ட பிறகு மருத்துவக் கல்வியில் பெரும்அளவில் மாணவர்கள் சேர வாய்ப்பு பெற்றுள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்த நடைமுறை அமலுக்கு வந்தபோது 4,422 ஓபிசி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தனர். இதில் 2,633 பேர் முதுநிலை (PG) படிப்புகளிலும், 1,662 பேர் மருத்துவப் படிப்பிலும், 127 பேர் பல் மருத்துவப் படிப்பிலும் இடங்களைப் பெற்றனர்.

2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4,907 ஆக உயர்ந்தது. அதில் 2,982 முதுநிலை, 1,804 மருத்துவம் (MBBS) மற்றும் 121 பல் மருத்துவம் (BDS) படிப்பில் சேர்ந்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் 5,484 ஓபிசி மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்ந்தனர். இதில் 3,295 முதுநிலை, 2,057 மருத்துவம் (MBBS) மற்றும் 132 பல் மருத்துவம் (BDS) படிப்பில் சேர்ந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் 5,694 ஓபிசி மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதில் 3,425 முதுநிலை, 2,133 மருத்துவம் (MBBS) மற்றும் 136 பல் மருத்துவம் (BDS) படிப்பில் சேர்ந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டில் 5,697 ஓபிசி மாணவர்கள் அனைத்திந்திய இடஒதுக்கீட்டின் பயனை பெற்றனர். இதில் 3,404 முதுநிலை, 2,160 மருத்துவம் (MBBS) மற்றும் 133 பல் மருத்துவம் (BDS) படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இதன் மூலம் 2021 முதல் 2025 வரை மொத்தமாக 26,204 ஓபிசி மாணவர்கள் அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்வியில் சேர வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 15,739 முதுநிலை மருத்துவ இருக்கைகளும், 10,465 பட்டப்படிப்பு (MBBS மற்றும் BDS) இருக்கைகளும் அடங்குகின்றன.

இந்த விவரங்கள் இந்திய பாராளுமன்றத்தில் 10 மார்ச் 2026 அன்று அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பதிலில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தரவுகள் மருத்துவக் கல்வியில், கழகம் வென்ற சமூகநீதி உரிமையின் போராட்டத்தை வெளிப்படுத்தும் சான்றுகளாக உள்ளன.

அனைத்திந்திய ஒதுக்கீடு முறையில் ஓபிசி இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த வாய்ப்பை இழந்திருந்தனர். 2021க்குப் பிறகுதான் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களில் இருந்து வரும் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் தேசிய அளவிலான மருத்துவக் கல்வி அமைப்பில் அதிக அளவில் சேரத் தொடங்கியுள்ளனர்.

இந்த மாற்றம் இந்தியாவின் சுகாதார அமைப்பில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. சமூகத்தின் பல்வேறு தரப்பினரிலிருந்து மருத்துவர்கள் உருவாகும் போது சுகாதார சேவைகள் பரவலாகவும் சமமாகவும் கிடைக்கும். அப்படித்தான் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பினை மாற்றினார் தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.

தி.மு. கழகத் தலைவர் அவர்களின் உறுதிமிக்க சட்டப்போராட்டத்தின் மூலம் மருத்துவக் கல்வியில் நீண்டகாலமாக இருந்த சமத்துவமின்மை சரிசெய்யப்பட்டுள்ளது.இந்த சான்றுகள் மூலம் சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் உரிய உரிமைகளை பெற்றுத் தந்த சமூகநீதிப்போராளியாக, தளபதியாக, தலைவராக உயர்ந்துள்ளார் நம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்.

– நன்றி: ‘முரசொலி’, 19.3.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *