மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

3 Min Read

சென்னை, மார்ச்.19 தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள், தங்களின் மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்து தமிழ்நாடுஅரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மகப்பேறு விடுப்பு

தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, அரசுப் பெண் ஊழியர்களுக்கு முதல் இரண்டு குழந்தைகளுக்கு தலா 12 மாதங்கள் (365 நாட்கள்) மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூன்றாவது குழந்தைக்கும் விடுப்பு கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கின.

இதனைப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளி யிட்டுள்ள அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

இரட்டை குழந்தைகள்: முதல் குழந்தைப் பேற்றின் போதே இரட்டை குழந்தைகள் பிறந்தால், அவர்கள் இரண்டு குழந்தைகளாகக் கருதப்பட மாட்டார்கள். அத்தகைய சூழலில் அடுத்தமுறை அவர் கருவுற்றால், அதனை இரண்டாவது மகப்பேறுக் காலமாகக் கருதி முழுமையாக 365 நாட்கள் விடுப்பு வழங்கப்படும். முதல் இரண்டு குழந்தைக்குப் பிறகு, மூன்றாவது முறை பிறக்கும் பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்கள் (84 நாட்கள்) வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.

முழு ஊதியம்

இந்த மூன்றாவது மகப்பேறு விடுப்பு காலத்திலும் பெண் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நடைமுறை அரசுப் பணியில் உள்ள தாய்மார்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

 

தண்டவாளங்களுக்கு அருகே  குப்பைகளை எரித்தால் நடவடிக்கை

ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை, மார்ச்.19 தண்டவாளங்களுக்கு அருகே  குப்பைகளை எரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

குப்பைகளை எரிக்கத் தடை

கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் தீ விபத்துகளுக்கான அபாயம் அதிகம் இருப்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சமீபகாலமாக, ரயில் பாதைகளுக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள் மற்றும் காய்ந்த செடி கொடிகளை எரிக்கும் சம்பவங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. இத்தகைய செயல்கள் ரயில்வே பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. குப்பைகளை எரிப்பதன் மூலம் உருவாகும் அதிகப்படியான வெப்பம் மற்றும் புகை, ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் உயர் அழுத்த மின் கம்பிகளையும்  மற்றும் நுட்பமான சிக்னல் அமைப்புகளையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும். இது ரயில் சேவைகள் பாதிக்கப்படுவதற்கும், பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.

தண்டனைக்குரிய குற்றம்

இத்தகைய செயல்களில் ஈடுபடுவது ரயில்வே சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும்.  ரயில்வேயைப் பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் பராமரிக்க குடிமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இது போன்ற பாதுகாப்பற்ற செயல்களைக் கண்டால் உடனடியாக அருகில் உள்ள ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் சென்னை கோட்டம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

வைகோ தொடர்ந்த வழக்கில்
உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

மதுரை, மார்ச் 19 சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடந்த 2015இல் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன் நேற்று (18.3.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக 39 உத்தரவுகள் கொடுக்கப் பட்டுள்ளன. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.செல்வம், பாரதிதாசன் ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை 6 மாதத்துக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மனுதாரர் கூறிய ஆலோசனைகளும் உத்தரவில் சேர்க்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.செல்வம், வட மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் ஆகியோர் தலைமையிலும், கண்காணிப்பிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெறும்’’ என்றனர்.

அப்போது, தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக வைகோ கூறினார். அதற்கு நீதிபதிகள், ‘‘இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் தான் அதற்கான பலன் கிடைக்கும்’’ என்றனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *