கிருஷ்ணகிரி, மார்ச் 19- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர் , மனிதநேய சிந்தனையாளர், பத்திரிகை துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர், மூத்த பத்திரிகையாளர் என்.அன்பரசு (வயது 56) ஆவார்.
செய்தி சேகரிப்புக்காக கடந்த 15ஆம் தேதி காலை செய்தி சேகரிக்கும் பணியை மேற்கொண்டு பாலக்கோடு நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது கருக்கன்சாவடி பாரதி கோவில் அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமுற்றார். இறந்த இவரின் உடல் உறுப்புகள் மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டன.
அரசு மரியாதை
உடல் உறுப்புகள் கொடை வழங்குபவர் களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்கிற முறையில் மருத்துவமனையில் வைக்கப்பட்ட அன்பரசின் உடலுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் மாலை வைத்து அரசு மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட பத்திரிகையாளர்கள், சங்க நிர்வாகிகள், ஒளிப் படக் கலைஞர் சங்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
