திருச்சி, மார்ச் 17- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் நாள் 13.03.2026 அன்று மாலை 4 மணியளவில் கொண்டாடப்பட்டது. இவ் விழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையேற்று உரையாற்றினார்.
நலவாழ்வுத் துறையில் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர்களின் பங்கு மிக மிக இன்றியமையாதது என்றும் அவர்களின் பரிசோதனை முடிவுகளைக் கொண்டே நோய்கள் கண்டுபிடிக்கப்படுவதுடன் தொடர்ந்து சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன என்றும் உரையாற்றினார்.
தொழில்நுட்பனர்களின் சிறிய கவனக்குறைவும் மிகப் பெரிய ஆபத்தை மருத்துவப் பயனாளிகளுக்கு விளைவிக்கும் என்றும் ஆகையால் பொறுப்புணர் வுடனும் அர்ப்பணிப்புணர்வுடனும் தந்தை பெரியார் காட்டிய மனித நேயத்துடன் கடமையாற்ற வேண்டும் என்றும் உரையாற்றினார்.

சுய பாதுகாப்பை
உறுதி செய்ய வேண்டும்
டிஜிட்டல் முறையில் தற்போது சில நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை கண்டறியும் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான தொழில்நுட்ப அறிவையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சுய பாதுகாப்பை ஒவ்வொரு மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்கான பாதுகாப்பு உத்திகளை யும் பரிசோதனைகளை மேற் கொள்ளும்போது கையாள வேண்டும் என்றும் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி தமது வாழ்த்துரையில் மருத்துவத் துறையில் வெளியில் தெரியாத ஆனால் மக்களின் சிகிச்சைக்கு மிக முக்கிய காரணமாக திகழக் கூடியவர்கள் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பனர்கள் என்றும் வளர்ந்து வரும் ஆய்வுக்கூட தொழில்நுட்பங்களை மாணவர்கள் அறிந்திருப்பதும் இன்றைய முக்கியத் தேவை என்றும் உரையாற்றினார்.
பட்டயப்படிப்பின் முதன்மையர் பேராசிரியர் கு. சக்திவேல், மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் துறைத் தலைவர் பேராசிரியர் க. உமாதேவி மற்றும் மருந்தியல் பயிற்சித் துறை பேராசிரியர் அ. ஜெசிமா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவ ஆய்வுக் கூட தொழில்நுட்பனர் துறை மாணவி வி. பெசிக்கா ஜில்ஸ் உறுதி மொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
முன்னதாக மாணவி கே. நூருல் ஜன்னத் அனைவரையும் வரவேற்றார். மாணவி கே. புவனா நன்றி கூறினார். மாணவிகள் ஆர்.கே. பவ பிரியா மற்றும் என். கிருபா கின்சியா ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர்.
