மகாராட்டிரா மாநிலம் நாந்தெட் பகுதியைச் சேர்ந்தவர் சீத்தல் (21). வறுமை மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக இடையில் பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது. திருமணத்திற்குப் பிறகு, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த சீத்தல், மீண்டும் தனது படிப்பைத் தொடர முடிவெடுத்தார்.
தற்போது நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அவர் எழுதி வருகிறார். இந்த நிலையில், தேர்வு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் சீத்தலுக்கு அழகிய குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த களைப்பும், உடல்நலக் குறைவும் அவரைத் தடுத்தாலும், தனது எதிர்காலத்திற்காகத் தேர்வை எழுதியே தீர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
நிச்சயமற்ற சூழல்: பிரசவம் முடிந்து இரண்டே நாட்களில் தேர்வு எழுத வந்த சீத்தலின் துணிச்சலைக் கண்டு ஆசிரியர்களும் அதிகாரிகளும் வியந்தனர். அவரது நிலைமையைப் புரிந்து கொண்ட தேர்வு மைய அதிகாரிகள், சீத்தல் தடையின்றி தேர்வு எழுதவும், அவரது பச்சிளம் குழந்தையைப் பராமரிக்கவும் தேர்வு மய்யத்திலேயே தொட்டில் கட்டி சிறப்பு வசதிகளைச் செய்து கொடுத்தனர்.
“வறுமை என் படிப்பைத் தடுத்தது, ஆனால் என் வைராக்கியத்தைத் தடுக்க முடியவில்லை” என்று நிரூபித்துள்ளார் சீத்தல். திருமணத்திற்குப் பிறகும், தாய்மை அடைந்த பிறகும் கல்விக்குத் தடை கிடையாது என்பதை உலகிற்குச் சொல்லியிருக்கிறார் இந்த இளம் பெண்.
“கல்வி என்பது எதிர்காலத்திற்கான உறுதியான முதலீடு – நாளை சொந்தமாகும் சொத்து.”
சீத்தலின் இந்த விடாமுயற்சி, இன்று பல மாணவர்களுக்கும், இளம் பெண்களுக்கும் ஒரு மாபெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. கல்வியை இடைநிறுத்தியவர்கள் மீண்டும் கற்கத் தொடங்க இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
எந்தச் சூழ்நிலையிலும் கல்வியைக் கைவிடாதீர்…! என்பது இப்பெண்ணின் வெற்றிமூலம் அறியும் உண்மையாகும்.
