புதுடில்லி, மார்ச்.12 முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் நேற்று (11.3.2026) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இது தமிழ்நாடு விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணை மேற்பார்வைக் குழுவின் வழிகாட்டுதல்களை கேரளா முறையாகப் பின்பற்றுவதில்லை என்று கூறி, தமிழ்நாடு அரசு சில நாள்களுக்கு முன் விரிவான நிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது.
அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான பிரதான வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரம் நேற்று மீண்டும் கவனத்திற்கு வந்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்
முன்வைத்த முக்கிய வாதங்கள்:
அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசியப் பரா மரிப்புப் பணிகள் பல ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளன.கேரள அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அணையின் நிலைத்தன்மைக்குத் தேவையான உத்தரவுகளை நீதிமன்றம் விரைந்து வழங்க வேண்டும். தமிழ் நாடு அரசின் வாதங்களை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, நிலு வையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிப்பதாக உறுதி அளித்து உத்தரவிட்டார். ஒன்றிய அரசு மற்றும் கேரள அரசின் பல்வேறு தடைகளால் பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழ்நாட்டிற்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
