தொண்ணூறைத்
தாண்டியும்
தொண்டு செய்தார்
தந்தை பெரியார்!
அந்தத் தொண்டு
அன்றாடம் தொடர
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு
அடியின் பெயர்தான்
அன்னை மணியம்மையார்!
‘‘என் இதயத்தின்
துடிப்பு
கூட்டை விட்டு
பறந்து செல்லாமல்
பத்திரமாகப்
பாதுகாத்தது
மணியம்மையாரின்
சிமிட்டாத கண்தானே!’’
என்றார் அந்த
ஈரோட்டுப் பகலவன்!
தன் உடலைப்
பேணவில்லை
அந்த நேரத்தையும்
அய்யாவுக்கே
தானம் தந்தார்!
அய்யாவின் உடலுக்கு
ஆகாது
அந்தப் பொருள்
என்றால்,
அப்படியே
அன்னையாரின்
அந்தக் கை
சிறைப் பிடிக்கும்!
அது கொடுமையல்ல –
அவரின் கடமை!
‘கூப்பிட்டால்
வந்து விடுவார்
கொடுத்தால்
சாப்பிட்டு விடுவார்!
அந்தக் குழந்தைக்குப்
பெயர்தான்
பெரியார்!’
என்பார் அன்னையார்!
தொண்டுக்குப்
புறப்பட அன்றாடம்
அடம் பிடிக்கும்
அந்தத்
தொண்டுக் குழந்தையின்
தொண்டற விளக்கிற்குத்
தன்னை உருக்கி
நெய் வார்த்த
நீர்மையே நமது
நினைவில் வாழும்
அன்னை
மணியம்மையார்!
அய்யா வரலாற்றில்
அழிக்கவே
முடியாத அங்கமாம்
அந்த அன்னையை
எப்படி மறப்போம்?
வாழ்க நீ அம்மா
வையத்து
வரிகளில் எல்லாம்!
– கவிஞர் கலி.பூங்குன்றன்
