‘செயற்கை நுண்ணறிவு’ வந்ததால் ‘பாதிப்பிற்குள்ளாகாத தொழில்கள்’ என்ற பெயரில் பிரபல பார்ப்பன எழுத்தாளர் வைபவ் திவாரி ஆங்கிலத்தில் ‘ஹிந்துஸ்தான்’ என்ற இதழில் எழுதி இருந்தார். மேலோட்டமாகப் பார்த்தால் சரியாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால், அதைப் பெரியார் கண்ணாடி போட்டுப் பார்த்தால் தெரியும்!
அவாள் முன்பு எப்போதும் கோயிலில் மணியாட்டிகொண்டு அக்கிரகாரத்தில் இருப்பார்கள். மற்றவர்கள் எல்லோரும் அவர்களுக்கு தொண்டூழியம் செய்யவேண்டும். அவர்கள் நவீனத்திற்கு முந்தைய காலத்திலும் இதே நிலைதான். தற்போதும் இதே நிலைதான்.
‘ஏஅய்’ என்ற செயற்கை நுண்ணறிவு வந்த பிறகும் அவாள் எல்லாம் உழைக்காமல் உட்காருவார்களாம்; மற்றவர்கள் எல்லாம் கடுமையான உடல் உழைப்பு வேலை செய்யவேண்டுமாம் – இதைத்தான் அவரது உள்ளூரக் கருத்து கூறியுள்ளது.
‘வைபவ் திவாரி’யின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்:
‘ஏஅய்’ தாக்கத்தால் பாதிக்கப்படும் எதிர்காலம் பற்றி கவலைகள் எழுதுள்ளது. ஆனால், இந்திய கலாச்சாரத்தில் ‘ஏய்’ என்ன, எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், அதைச் சமாளித்து வாழும் முறையை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். அதன்படி வாழ்ந்தால் ‘ஏய்’ மட்டுமல்ல; இதற்கும் மேலே எந்த ஒரு தொழில் நுட்பம் வந்தாலும் நாம் கவலைப்படவேண்டியதில்லை. அதில் சிலவற்றை தருகிறேன்
பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள்
(Housekeeping & Sanitation)
வீடுகள், விடுதிகள் மற்றும் பொது இடங்களைப் பராமரிப்பது என்பது இயந்திரங்களால் மட்டும் செய்யக்கூடிய வேலையல்ல.
தூய்மைப் பணி: கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் இயந்திரங்கள் நுழைய முடியாத இடுக்கமான பகுதிகளில் தூய்மைப் பணியாற்றுவது போன்றவற்றுக்கு மனிதனின் கவனம் அவசியம்.
வீடு பராமரிப்பு: ஒவ்வொரு வீட்டின் அமைப்பும் மாறும். சூழலுக்கு ஏற்ப முடிவெடுத்துச் செயல்படும் திறன் மனிதர்களுக்கே உண்டு.
முதியோர் மற்றும் நோயாளிகள் பராமரிப்பு: இது வெறும் உடல் சார்ந்த வேலையல்ல; மனம் சார்ந்தது.
வீடுகளில் உள்ள முதியவர்களுக்குப் பணம் பெற்றுக்கொண்டு சேவை செய்யும் பணிகளில் அன்பு, பரிவு மற்றும் பேச்சுத் துணை மிக முக்கியம்.
ஓர் இயந்திரத்தால் மருந்து கொடுக்க முடியுமே தவிர, ஒரு மனிதனைப் போல அரவணைத்து ஆறுதல் கூற முடியாது. எனவே, இத்துறை என்றும் அழியாதது.
இயற்கை சார்ந்த உற்பத்தித் தொழில்கள்
இயற்கையோடு இணைந்து செய்யும் தொழில்களில் ஏஅய்-யின் தாக்கம் மிகக் குறைவு.
விவசாயம்: நிலத்தின் தன்மையறிந்து பயிரிடுதல் மற்றும் களப்பணிகளில் மனித உழைப்பு இன்றிமை யாதது.
மீன்பிடித்தல்: கடலின் போக்கு மற்றும் அனுபவ அறிவைக் கொண்டு மீன் பிடித்தல் ஒரு வாழ்வாதாரக் கலை.
பாய் முடைதல்: பாரம்பரியக் கைவினைத் திறனான பாய் முடைதல் போன்ற கலைநயம் மிக்க வேலைகளை இயந்திரங்களால் அந்த நுணுக்கத்துடன் செய்ய இயலாது.
கைவினைப் பொருட்கள் மற்றும்
சுற்றுச்சூழல் சார்ந்த தயாரிப்புகள்
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்வது தற்போது நல்ல வருமானம் தரும் தொழிலாக மாறி வருகிறது.
தென்னை மற்றும் பனைப் பொருட்கள்: தேங்காய் மூடி (Shell), இலைகள் மற்றும் மரப்பட்டைகளைப் பயன்படுத்தி அழகிய மற்றும் பயனுள்ள பொருட்கள் தயாரித்தல்.
மின்சாரமில்லா உற்பத்தி: மின்சாரப் பயன்பாடு தேவைப்படாத கைவினை வேலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மட்டுமல்ல, ஏஅய்-யால் மாற்ற முடியாத வையும் கூட.
உணவு மற்றும் விநியோகம்
(Home-cooked Food Services)
வீட்டு முறையில் ஆரோக்கியமான உணவுகளைத் தயாரித்து, தேவைப்படுபவர்களின் இடத்திற்கே சென்று வழங்குதல்.
“கைமணம்” என்பது மனிதருக்கே உரித்தானது. இயந்திரத் தயாரிப்புகளை விட மனிதர்கள் அன்புடன் சமைக்கும் உணவுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.
இப்படியெல்லாம் அக்கிரகாரச் சிந்தனையோடு அப்பார்ப்பனர் எழுதியுள்ளார். அவர்களின் கண்ணோட்டம் எவ்வளவு தரம் தாழ்ந்தது என்பதை பெரியார் கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டும். அப்போதுதான் அது புரியும்!
