காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராக்னி நாயக் பசோயா, அண்மையில் டில்லி பாரத் மண்டபத்தில் ‘ஸநாதன் ஸன்ஸ்தா’ அமைப்பு நடத்திய ‘ஸநாதன் ராஷ்ட்ர ஷங்க்நாத் மகோத்சவா’ நிகழ்ச்சி பற்றிய விமர்சனக் கருத்தினை பொதுவெளியில் எடுத்துரைத்தார்.
‘ஸநாதன் ஸன்ஸ்தா’ அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் முஸ்லீம் சமுதாயத்தினரை குறிப்பிட்டுப்பேசியும், அவர்களை ‘நாட்டிற்குள் ஊடுருவியவர்கள்’ என அடையாளப்படுத்தியும், மேலும் அவர்களை எப்படி (மத) மாற்றம் செய்வது என்பதுபற்றியும் பலரும் உரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. ஒன்றிய அரசின் அமைச்சர் கஜேந்திரசிங் ெஷகாவத், ஸ் ரீபத் நாயக், சஞ்சய்தத் மற்றும் டில்லி ஒன்றியப் பிரதேசத்தின் அமைச்சர் கபில்மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து ஒன்றிய அரசின் பண்பாட்டு அமைச்சகம் செய்தி எதுவும் வெளியிடாத நிலையில், தகவல் அறியும் சட்டத்தின் (Right to Information Act) மூலம் விளக்கம் கேட்கப்பட்ட பொழுது, ஒன்றிய அரசின் பண்பாட்டு அமைச்சகம் இந்த ‘வெறுப்புப் பேச்சு’ நிகழ்ச்சிக்கு ரூ.63 லட்சம் நிதி அளித்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. இந்த நிதி உதவியானது ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலின் 150ஆம் ஆண்டு நினைவைப் போற்றிட வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்கள்மீது ‘வெறுப்புப்பேச்சு’ நடத்திய ‘ஸநாதன் ஸன்ஸ்தா’ அமைப்பானது கருநாடக மாநிலத்தில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை வளையத்திற்குள் உள்ள அமைப்பாகும்.
‘வெறுப்புப் பேச்சு’ நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு ஒன்றிய அரசின் அமைச்சகம் எவ்வாறு ரூ.63 லட்சம் நிதி உதவியை வழங்கிட முடியும்? மக்களைப் பிரித்துப் போடும் ‘பிரிவினைப் போக்கை (Polarisation) பிரதமர் மோடி விரும்புகிறாரா?’ எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
வெறுப்புப் பேச்சை தடைப்படுத்திடும் சட்டங்களை வடித்திடவும், பிரித்துப் பேசும் வாக்கு வன்மத்தை தடுத்திடும் முடிவுகளை எடுக்கவும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ‘வந்தே மாதரம்’ பாடலின் 150ஆம் ஆண்டு நினைவினைப் போற்றும் நிகழ்ச்சியில் முஸ்லீம் மக்கள் மீதான வெறுப்புப் பேச்சு நடத்தப்பட்டது. ஒரு வகையில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முழுமையான பொருளை உணர்த்திடத்தானோ? பா.ஜ.க. ஒன்றிய அரசின் பண்பாட்டு அமைச்சகம் (Ministry of Culture)தன் விளக்கம் அளிக்க வேண்டும்!
