சென்னை, பிப்.17ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு, தனது அறிக்கையின் முதல் பாகத்தை நேற்று (16.2.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது.
உயர்நிலைக் குழு அறிக்கை
ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்தது. இதில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கே. அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் தமிழ்நாடு திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு. நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த ஆணையம் நேற்று தனது அறிக்கையின் முதல் பாகத்தை முதல மைச்சர் ஸ்டாலினிடம் வழங்கியது. இதில் அதிகாரப் பரவலாக்கத்துக்கும் மாநில சுயாட்சிக்குமான வாதம், அரசமைப்புச் சட்டத் திருத்தம், மாநிலங்களின் ஆட்சிநில ஒருமைப் பாடு, மொழி, ஆளுநர், தொகுதி மறுவரையறை, தேர்தல்கள், கல்வி, சுகாதாரம், சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஆகிய இயல்கள் உள்ளடங்கி யுள்ளன.
இக்காலத்தில் கூட்டாட்சி முறைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து விரிவான ஆய்வை மேற் கொண்டுள்ள இந்த அறிக்கை, அரசமைப்புச் சட்டத் தின் வரம்புக்கு உட்பட்டுக் கூட்டாட்சி முறையின் சமநிலையை மீட்டெ டுக்கவும், உண்மையான கூட்டு றவுக் கூட்டாட்சி முறையை வலுப் படுத்தவும் உறுதியான மற்றும் திட்டவட்டமான பரிந்துரைகளை அளித்துள்ளது.
இந்த முயற்சியின் ஒரு சிறப்பம்சமாக, அறிக்கையின் தமிழ்ப் பதிப்புக்கு ‘திறந்தநிலை அணுகல்’ (Open Access) வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறை நாட்டிலேயே முதல் முறையாகும். அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப் பட்ட பிறகு, தமிழ்ப் பதிப்பு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும். எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ, அதிகாரப்பூர்வ பிடிஎப் (PDF) கோப்பிலிருந்து தமிழ்ப் பதிப்பை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அச்சிடவோ, மறுபதிப்பு செய்யவோ அல்லது விநியோகிக்கவோ முடியும்.
மைல்கல்
பரந்த அளவில் தேசிய ஈடுபாடு உருவாவதை எளிதாக்கும் வகையில், அறிக்கையின் முதல் பாகத்தை இந்தி, வங்காளம், மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, ஒடியா, பஞ்சாபி மற்றும் அசாமி ஆகிய முக்கியமான இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த அறிக்கை சமர்ப்பிப்பு, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் பரிணாம வளர்ச்சியில் தமிழகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.
இதன் நோக்கம் ஒன்றிய அரசைப் பலவீனப்படுத்துவது அல்ல; மாறாக ஒன்றிய அதிகாரத்தை முறைப் படுத்துவது ஆகும். இதன் மூலம் ஒன்றிய அரசு தேசிய அளவிலான பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.
அதே நேரத்தில், மாநிலங்களுக்குத் தேவையான சுயாட்சியை மீட்டளிப்பதன் மூலம் சிறந்த நிர்வா கத்தை உறுதி செய்ய முடியும். மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாகச் செய்யக்கூடிய பணிகளில் ஒன்றிய அரசு தனது ஆற்றலைச் சிதற விடுவது, அது மட்டுமே தீர்க்கக்கூடிய பெரிய தேசிய சவால்களிலிருந்து கவ னத்தை திசைதிருப்ப வாய்ப்புள்ளது.
இந்த அறிக்கை ஆக்கப்பூர்வமான உரையாடல்களைத் தூண்டி, சீரான மற்றும் கூட்டுறவுக் கூட்டாட்சி முறைக்கு வழிவகுக்கும் என்று தமிழ்நாடு அரசு நம்புகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
