ஒன்றிய அரசே, அமெரிக்க ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்ளாதே! தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!

8 Min Read

இந்தியாவின் முடிவுகளை அமெரிக்கா அறிவிப்பதா? இந்திய இறையாண்மையை அடகு வைப்பதா?
அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு 0% வரியாம்!
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய 18% வரியாம்!!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

 

Contents

இந்தியாவின் முடிவுகளை அமெரிக்கா அறிவிப்பதா? இந்திய இறையாண்மையை அடகு வைப்பதா?  என்றும், அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு 0% வரியாம்! இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய 18% வரியாம்! ஒன்றிய அரசே, அமெரிக்க ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்ளாதே! என்றும், தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா இறையாண்மை மிக்க நாடு. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று.

இறையாண்மை (Sovereignty) என்பதற்கு

a : supreme power especially over a body politic

b : freedom from external control : autonomy sense

c : controlling influence என்று பொருள் சொல்கிறது புகழ்பெற்ற ‘மெரியம் வெப்ஸ்டர் அகராதி’ (Merriam – Webster Dictionary)

அதாவது,

அ. குறிப்பாக ஓர் அரசியல் அமைப்பின் மீது உச்ச அதிகாரம்

ஆ. வெளிப்புறக் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை: தன்னாட்சி உணர்வு

இ. பிறர் செல்வாக்குச் செலுத்துவதைக் கட்டுப்படுத்துதல்.

அரசியலைப்புச் சட்டம் சொல்லும் இறையாண்மையின் அடிப்படைக்கு முரண்!

இந்தியாவின் இறையாண்மையைக் காக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. ஆனால், அந்தக் கடமையை ஒன்றிய அரசு நிறைவேற்றுகிறதா என்ற அய்யம் தீவிரமாக எழுந்துள்ளது. அதிகார பலம் மிக்க நாடுகளிடம் அடிபணிந்து போகக் கூடாது என்பது தான் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் இறையாண்மையின் அடிப்படை; அண்மைக் கால நடப்புகள் அப்படி இல்லை என்பது கவலை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

உலகின் பல நாடுகளுக்கு வரியை ஏற்றுகிறோம் என்று அறிவித்தபோது, இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா திடீரென 50% வரி என்று அறிவித்தது. தொடர்ந்து இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகள், வர்த்தகத் தொடர்பு களைச் சுட்டிக்காட்டி, மிரட்டுவது போலவே பேசி வந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

தொடர்ந்து நெருக்கடி கொடுத்த அமெரிக்கா!

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யைக் குறைந்த விலைக்கு இந்தியா இறக்குமதி செய்வது கூடாது என்று அமெரிக்கா தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது. (குறைந்த விலையில் இறக்குமதி செய்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. அவை பெரு முதலாளிகளுக்கே பயன்பட்டது என்பது வேறு விசயம்.)

கடந்த வாரத்தில், இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் ஆகப் போகிறது என்று பேச்சு வார்த்தை  நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே, இந்தியா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, அண்மை யில் தங்கள் ஆளுகைக்குட்பட்டுள்ள வெனிசு வேலாவிடமிருந்து இறக்குமதி செய்யும் என்று அமெரிக்கா அறிவிக்கிறது, இந்தியா மவுனம் காத்தது.

பின்னர் இந்தியப் பிரதமர் மோடியுடன் தான் தொலைப்பேசியில் பேசியதாகவும், அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிடமிருந்து அதிக அளவில் கொள்முதல் செய்ய மோடி ஒப்புக் கொண்டதாகவும், அமெரிக்காவிற்கு எதிரான வரிகளையும், இதர தடைகளையும் ‘ஜீரோ’வாகக் குறைப்பதற்கும் இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்திய விவசாயிகளுக்குப் பேரிடி!

இந்நிலையில் அமெரிக்கா – இந்தியா இடை யேயான ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள செய்திகள் நாடு முழுவதும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவிலிருந்து விவசாயப் பொருட்களை 0% வரியில் இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இது இந்திய விவசாயிகளுக்குப் பேரிடியாக அமையும்.

அமெரிக்காவின் பெரு வணிக நிறுவனங்கள், இந்தியாவில் இறக்குமதியை அதிகப்படுத்தி னால், இந்தியாவின் விவசாயப் பொருட்களின் நிலை என்னாவது? அமெரிக்கப் பெரு நிறுவ னங்களுக்கு முன் இந்திய விவசாயிகளால் போட்டி போட முடியுமா? என்பது முக்கிய கேள்வியாகும்.

ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினர் சம்யுக்த் கிசான் மோர்ச்சா குற்றச்சாட்டு!

இது குறித்து, இரு நாட்களுக்கு முன் பேட்டி அளித்துள்ள ஒருங்கிணைந்த விவ சாயிகள் சங்கக் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர்கள், ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். இந்த ஒப்பந்தம் இந்திய ஒன்றிய பா.ஜ.க. அரசு அமெரிக்காவிடம் சரண்டர் அடைந்தது போன்றது என்றும், ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் தேசியப் பொருளாளருமான பியுஷ்கோயல் விவசாயிகளுக்குத் துரோகம் செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெருத்த பொருளாதார சேதம் ஏற்படும் அபாயம்!

பருத்தி, ஆப்பிள் போன்ற பொருட்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு வரி விலக்கு அளித்தால், ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், மகாராட்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்குப் பெருத்த பொருளாதார சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க – இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் குறிப்பாக எத்தனால் தயாரிப்பின்போது கிடைக்கும் துணைப் பொருளான டிடிஜிஎஸ் (DDGS), கால்நடை தீவனத்திற்கான சிவப்பு சோளம், மரக் கொட்டைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் மற்றும் மதுபானங்கள் மற்றும் கூடுதல் தயாரிப்புகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய – அமெரிக்க கூட்டறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள அவர்கள், கால்நடைத் தீவனச் சந்தையின் கட்டுப்பாடு அமெரிக்க நிறுவனங்களால் முழுமையாக ஏகபோகப்படுத்தப்படும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உற்பத்தியாகும் 44 மில்லியன் டன் டிடிஜிஎஸ் இல், 15 மில்லியன் டன் ஏற்றுமதிக்குத் தயாராக உள்ளது. அதில் 25 சதவிகிதம் இந்தியாவிற்குள் வந்தாலே, இந்திய சோளச் சந்தை முற்றிலும் சரிந்துவிடும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். அதில் அப்லாடாக்சின் என்ற அளவு 20 பி.பி.பி. என்று குறைந்த அளவில் இருந்தாலும், கிளைபோசேட் களைக் கொல்லிகளின் நச்சுத்தன்மை கூடுதல் என்று கூறுகிறார்கள்.

இந்திய அளவில் பெரும் போராட்டம்
நடப்பதைத் தடுக்க முடியாது!

‘விவசாய மற்றும் பால் பொருட்கள் இந்த ஒப்பந்தத்தில் இல்லை’ என்று ஒன்றிய பா.ஜ.க. அரசின் வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறுவது தவறானது என்றும், பியுஷ் கோயல் பொய்யான தகவலைப் பரப்பு வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என்றும், தடையற்ற வணிக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement) கையெழுத்திடுவதை பிரதமர் மோடி தடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இந்திய அளவில் பெரும் போராட்டம் நடப்பதைத் தடுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் கோமாதா என்பது நாட்டு மாடு தான் என்றும், ஜெர்சி பசுக்கள் எனப்படும் அயல்நாட்டு மாட்டுவகைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பேசுகிறது. ஆனால், இப்போது ஆர்.எஸ்.எஸ்.சையே ‘மாஸ்டர்’ டொனால்ட் டிரம்ப் அடக்கிவிட்டார் என்று  சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் இரட்டை வேடம்!

இது தொடர்பாக மேற்சொன்ன அவர்களின் அறிக்கையில்,

“The RSS had been claiming no import of milk of animals fed with meat. That was a non-tariff barrier. Now, the RSS has been made to eat its own claim by ‘Master’ Donald Trump and they have cowed down completely.” (The Hindu இணைய தளச் செய்தி).

“இறைச்சியை உணவாக ஏற்றுக் கொண்ட விலங்குகளின் பாலை இறக்குமதி செய்யக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கூறிவந்தது. அதற்குத் தடையும் இருந்தது. இப்போது ஆர்.எஸ்.எஸ்.சின் கூற்றை அவர்களே விழுங்கும்படி, அவர்களின் மாஸ்டர் டொனால்ட் டிரம்ப் செய்துவிட்டார்; அவர்கள் முற்றிலும் அடங்கிவிட்டனர்” என்று ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளனர்.

முதலில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா விற்கு ஏற்றுமதி செய்ய 0% என்று இருந்ததை 2019-க்குப் பிறகு 3% ஏற்றினார்கள். பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன் 50% ஆக ஆக்கி, இப்போது அதை 18% ஆகக் குறைத்துள்ளார்கள். ஆக 0%லிருந்து 18% வரி இந்தியப் பொருட்களுக்கு ஏற்றியுள்ளது அமெரிக்க அரசு. ஒட்டகத்தின் முதுகிலிருந்து சுமையை இறக்கிய கதை போன்று, பாசாங்குக் காட்டியுள்ளது அமெரிக்கா.

அதே நேரம், அமெரிக்கப் பொருள்களுக்கு 30% முதல் 150% வரை விதித்துவந்த வரியை, இந்திய ஒன்றிய அரசு 0% ஆக ஆக்கியுள்ளது.

இறையாண்மை மிக்க நாடு தானா?

இந்த அளவுக்கு அமெரிக்காவுக்குப் பணிந்து செல்ல வேண்டிய அவசியம் என்ன? அமெரிக்கா விடமும் பணிவு, இன்னொரு புறம் சீனாவிடமும் பணிவு. இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீன ராணுவம் நுழைவதாகத் தகவல் கிடைத்தாலும், அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று உண்மையை எடுத்துக் காட்டியுள்ள முன்னாள் இராணுவ ஜெனரல் நரவனேவின் புத்தகத்தை வைத்தும் நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது. இது ஓர் இறையாண்மை மிக்க நாடு தானா?

ஏற்கெனவே, தான் தலையிட்டுத் தான் இந்தியா – பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குத லைத் தடுத்ததாக ஒன்றுக்குப் பல முறை பிரதமர் நரேந்திர மோடியின் ‘நண்பர்’ அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியபோதும், மறுப்பேதும் சொல்லாமல் ‘மவுன விரதம்’ கடைப்பிடித்தார் நரேந்திரமோடி! இப்போது, இந்தியாவின் வர்த்தக முடிவு இது தான் என்று அமெரிக்க அதிகாரிகளும், அதிபரும் அறிவிக்கின்றனர். என்ன கொடுமை இது!

விவசாயிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திய சட்டங்களை ஓராண்டுக்கும் மேல் போராடி, ஒன்றிய அரசைத் திரும்பப் பெற வைத்த  அதே சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM)  என்ற  விவசாயிகள் அமைப்புதான் இப்போதும் வெகுண்டு எழுந்துள்ளது.   தொழிலாளர் உரிமை களை நசுக்கும் சட்டத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, தொழிற்சங்கங்களால் இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தில் தாங்களும் பங்கேற்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த 7 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயல், இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அறிவித்தார்.  நாடாளு மன்றக் கூட்டத் தொடர் நடந்துவரும் சூழலில், அரசின் கொள்கை ரீதியான முடிவு களை நாடாளுமன்றத்திற்கு வெளியே அறி வித்தது உரிமை மீறல் செயல். எனவே, அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரவேண்டும் எனறு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கோரியுள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மதிப்பதில்லை; நாடாளுமன்ற மரபுகளையும், நடவடிக்கைகளையும் மதிப்பதில்லை என்பதில் பா.ஜ.க. பிரதமர் முதல் அமைச்சர் வரை ஒரே மாதிரி நடந்துகொள்வது ஏற்புடையதன்று.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.விடமிருந்து
இந்தியாவை மீட்போம்!

இந்தியாவை அந்நிய நாடுகளிடமிருந்து அல்ல, ஆளத் தெரியாமல், பன்னாட்டு – கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.விடமிருந்து காப்பது தான் இந்தியாவின் இறையாண்மையையும், ஜனநாயகத்தையும் மக்களின் நலனையும் காக்க ஒரே தீர்வாகும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

11.2.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *