சென்னை, பிப்.10- குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் (8.2.2026) துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வ.உ.சி சாலையில் 13.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள “முதல்வர் திருமண மாளிகையை“ திறந்து வைத்து, 10 இணையர்களின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியின் சார்பாக 13 கோடி ரூபாய் செலவில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பெயரில் கட்டப்பட்டிருக்கின்ற இந்தத் திருமண மாளிகையைத் திறந்து வைத்து, 10 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். திருமண வாழ்க்கையில் அடி யெடுத்து வைக்கின்ற மணமக்களுக்கு நாம் அனைவரும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
ஒரு தனியார் திருமண மண்டபம் எந்த அளவுக்கு மிகச் சிறப்பாக பிரமாண்டமாக கட்டப் பட்டிருக்குமோ, அதேபோல் இந்த திருமண மண்டபத்தை நம் முதலமைச்சர், அமைச்சர்
பி.கே.சேகர்பாபு மூலமாக உங்களுக்கு கட்டிக் கொடுத்துள்ளார்.
இந்த திருமண மண்டபத்தில் எல்லா வசதிகளும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அதிக அளவில் வந்திருக்கின்றீர்கள்.
நம் திராவிட மாடல் அரசு அமைந்ததிலிருந்து நம் முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கான அரசாக நடத்தி வருகிறார்கள். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற வுடன் இட்ட முதல் கையெழுத்து விடியல் பயணம் திட்டத்துக்குதான்.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். ஒவ்வொரு மாதமும் கோடியே 30 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கப் போவது உறுதி. மீண்டும் நம்முடைய கழகத் தலைவர்தான் முதலமைச்சர் நாற்காலியில் அமரப் போகிறார். எனவே திராவிட மாடல் 2.0 தொடரப் போகிறது.
குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரை சூட்டுக!
மீண்டும் நமது கழகத் தலைவர் அவர்கள் முதலமைச்சராகி மக்களுக்கு என்னவெல்லாம் தேவையோ, அந்த திட்டங்களை செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கின்றது. இந்த திராவிட மாடல் அரசு தொடர நீங்கள் அனைவரும் நம்முடைய அரசுக்கும், கழகத் தலைவருக்கும் ஆதரவாக இருக்க வேண்டும்.
இன்று இல்வாழ்க்கையில் இணைந்திருக்கின்ற மணமக்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். ஒருவரை யொருவர் நன்றாகப் புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்துங்கள். உங்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் நிலைநாட்டிக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டுமோ அங்கெல்லாம் விட்டுக்கொடுங்கள்.
எனக்கு அருகில் இருக்கின்ற அந்த இணையரைப் பார்த்துப் பெயர் கேட்டேன். சக்திவேல் – பூங்கொடி என்று தெரிவித்தார்கள். மணமகன் சக்திவேலிடம் பூங்கொடியை எங்கே பார்த்தீர்கள் என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், ‘இல்லை அண்ணே, இது காதல் திருமணம், மூன்று வருடப் பழக்கம்’ என்றார். இங்கே எத்தனை பேர் காதல் திருமணம்?. கூடுதல் மகிழ்ச்சி, ஏனென்றால் நானும் காதல் திருமணம்தான் செய்துகொண்டேன்.
மணமக்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய குழந்தைகளுக்கு அழகான ஒரு தமிழ்ப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
