தோற்றத்தில் தொன்மைச் சிறப்பும் வாழ்வியல் தளத்தில் அறிவார்ந்த கருத்தியலுடன் அற்றை காலத்து நிலையில் அறிவு வழியில் பயணித்த தனித்துவம் படைத்த திராவிடர் பேரினம், ஆரிய வந்தேரி இனத்தினரால் வஞ்சகம், சூழ்ச்சி, புராணம், இதிகாசம் எனும் திட்டமிட்ட பொய்யான ஸநாதன மதக் கருத்தியலால் அடிமைப்பட்ட நிலை யிலிருந்து மீட்டெடுக்க பெரியார் சிந்தித்தார் – செயல்பட்டார் – போராடினார் – வெற்றி பெற்றார்.
பெரியார் பகுத்தறிவு போர்க்களத்தில் படைத் தளபதியாக விளங்கிட்ட அண்ணா அரசியல் பாதை நின்று தி.மு.க. அரசை 1967இல் அமைத்திட்டார். அய்யாவிற்கு காணிக்கை ஆக்கிட்டார். அகிலமே வியந்தது. தமிழ் கூறும் நல்லுலகம் தந்தைக்கும் – தனையனுக்கும் வாழ்த்து மழை பொழிந்தது.
1969ஆம்ஆண்டு பிப்.3ஆம் நாள் அறிஞர் அண்ணா மறைவுற்றார். ‘நடக்கக் கூடாதது நடந்து விட்டது’’ என்று அய்யா பெரியார் கலங்கிப் போனார்.
அடுத்து, யார் தி.மு.க.வை தலைமை ஏற்று நடத்துவது, தமிழ் நாட்டிற்கு முதலமைச்சராக யார் பணி தொடர்வது என்று திக்குமுக்காடிய நிலை. இதன் பொருட்டு ஒரு தேக்கம் ஏற்படாதா என்று ஆரியம் உறங்காது காத்திருந்தது!
அறிவாசன் பெரியார் ஆணையிட்டார். அண்ணாவின் தம்பிகள் அனைவரும் அய்யாவின் ஆணைப்படி இராணுவக் கட்டுப்பாட்டை விஞ்சிய, இலட்சிய கட்டுப்பாட்டோடு உறுதிகொண்டனர்.
அய்யா (பெரியார்) அறிவுறுத்தியபடி கலைஞர் அவர்கள் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். தி.மு.க.வின் தலைவராகவும் கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டார். – முதலமைச்சராகப் பணி ஏற்றார்.
அறிஞர் அண்ணா பிப்.3இல் மறைந்தார்.
கலைஞர் முதலமைச்சர் பதவிக்கு பிப்.9இல் தேர்வானார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சராக பிப்.10இல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் உறுதிமொழி கூறி பணி ஏற்றார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக 18 ஆண்டுகள் மேலாக இருந்திட்ட முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதன் முதலாக முதலமைச்சர் பதவி ஏற்ற நாள் தான் இன்று (10.2.1969).
