புத்தக வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மொழிப் போராட்டம், மொழியினுடைய சிறப்புகள்குறித்து 
தந்தை பெரியார் அவர்களுடைய பார்வையும், கருத்தோட்டமும் மிக ஆழமானவை!
மொழி என்பது ஒரு போர்க்கருவியாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்!
ராமன் காலத்துப் போர்க் கருவி, இன்றைக்குப் பாகிஸ்தானோடு போராடுவதற்குப் பயன்படாது!
ராமன் வேண்டுமானால் அரசியலுக்குப் பயன்படலாமே தவிர, ராமன் காலத்து வில்லும், வேலும் பயன்படாது!

சென்னை, பிப்.7  மொழிப் போராட்டம், மொழியினுடைய சிறப்புகள் என்று சொல்லும்போது, தந்தை பெரியார் அவர்களுடைய பார்வையும், கருத்தோட்டமும் மிக ஆழமானவை. மொழி என்பது ஒரு போர்க்கருவியாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார். ராமன் காலத்துப் போர்க் கருவி, இன்றைக்குப் பாகிஸ்தானோடு போராடுவதற்குப் பயன்படாது. ராமன் வேண்டுமானால் அரசியலுக்குப் பயன்படலாமே தவிர, ராமன் காலத்து வில்லும், வேலும் பயன்படாது என்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும்” புத்தகம் வெளியீட்டு விழா!

பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் கடந்த 29.01.2026 அன்று மாலை 6 மணியளவில், கலைமாமணி முனைவர் மருத்துவர் தஞ்சை சு.நரேந்திரன் எழுதிய, ‘‘அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும்” புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகத்தை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர், கலை மாமணி, ஆய்வாளர் டாக்டர் சு.நரேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ‘‘அறியப்படாத மொழி இயக்கங்களும், மொழிப் போராட்டங்களும்’’ என்ற தலைப்பில் அமைந்திருக்கிற இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, வரவேற்புரை ஆற்றிய தஞ்சை மாவட்ட கழகக் காப்பாளர் அருமைத் தோழர் அய்யனார் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர்  வீரமர்த்தினி அவர்களே, மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்களே, தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்களே, அருமைத் தோழர்கள் ஜெ.ஜனார்த்தனம் அவர்களே, தென்மாறன் அவர்களே, இந்த நூலைப் பெற்றுக்கொண்டு ஓர் ஆய்வுக்கு ஆய்வாக மிகச் சிறப்பாக ஆய்வுரை வழங்கிய திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,  ஓர் அற்புதமான – ஏற்புரையை நிகழ்த்திய கலைமாமணி மருத்துவர் தஞ்சை சு.நரேந்திரன் அவர்களே!

இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கும் நம்முடைய கழகத் துணைப் பொதுச்செயலாளர் அருமைத் தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக் கூடிய ஆ.வெங்கடேசன் அவர்களே, அன்புக்குரிய டாக்டர் சுரேந்திரனின் வாழ்விணையர் அம்மா அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்ளக்கூடிய, புத்தகம் வாங்கிப் பெருமைப்படுத்தி இருக்கின்ற நண்பர்களே, புத்தகம் வாங்க இருக்கின்ற தோழர்களே, நண்பர்களே,  ஊடகவியலாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்!

ஒரு குடும்ப நிகழ்ச்சியா?
கொள்கை விளக்க நிகழ்ச்சியா?

இந்த நிகழ்ச்சி ஒரு குடும்ப நிகழ்ச்சியா? கொள்கை விளக்க நிகழ்ச்சியா? அல்லது போராட்டங்களுக்கு ஆயுதங்கள் வழங்குகின்ற நிகழ்ச்சியா? என்ற ஒரு கேள்விக்கு விடை காண வேண்டிய ஒன்றாகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஏராளமான குறிப்புகள்;   இந்த மேடையிலே உரையாற்றியிருக்கும் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களானாலும், அதேபோல பேராசிரியர் சுப.வீ. அவர்களானாலும், நாங்கள் யாராக இருந்தாலும், ஒருவர் சொன்னதை இன்னொருவர் வழி மொழியக்கூடியதாக இருக்குமே தவிர முரண்படக்கூடி யதாக இருக்காது.

இந்தப் புத்தகம், முன்னமே என்னிடத்தில் கொடுக்கப்பட்ட புத்தகம்;  எந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தாலும், முதலில் அந்தப் புத்தகத்தைப் படித்து ஆயத்தப்படுத்திக் கொண்டு வருவது வழக்கம். எந்தெந்தப் பகுதிகள் எல்லாம் முக்கியமாகச் சுட்டிக்காட்டப்படவேண்டும் என்று நினைக்கிறோனோ, அந்தப் பகுதிகளைக் கோடிட்டுக் கொண்டு வருவேன். சுட்டிக்காட்டப்பட வேண்டியவை எவை என்று நான் நினைத்தேனோ, அந்தப் பகுதிகளை, இரண்டு பேருமே மிகச் சிறப்பாக எடுத்துச் சொன்னார்கள். அவர்களுக்கு நன்றி!

இதுவரை நமக்குத்  தெரியாத,
நமக்குக் கிடைக்காத அரிய செய்திகள்!

அந்த வகையில், அய்யா அரசு அவர்களுடைய முன்னுரை – அணிந்துரையில் தந்தை பெரியார் அவர்க ளின் கருத்துரைகளை எல்லாம் எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதுவரை நமக்குத்  தெரியாத, நமக்குக் கிடைக்காத அரிய செய்திகளை எல்லாம் சொல்லக்கூடி யவர் நம்முடைய டாக்டர் நரேந்திரன் அவர்கள் ஆவார்.

இதைவிட,  ஆசிரியர் வீரமணி இந்த நூலை வெளியிடுகிறார் என்று சொல்வதை விட, அவரால் பயன்படக்கூடிய, ஒரு மருத்துவப் பயனாளி, அவரால் சிகிச்சைப் பெறக்கூடிய ஒருவர், இந்த நூலை வெளி யிட்டு இருக்கிறேன். அதுதான்  மிக முக்கியமானதாகும்.

முதலமைச்சருக்கு
நன்றி செலுத்த வேண்டும்!

எனக்கு டாக்டர் அவர்! பழைய மொழியில் சொல்ல வேண்டும் என்றால், ‘இங்கே நான் அவருடைய நோயாளி.’ நல்ல வாய்ப்பாக, முதலமைச்சருக்கு நன்றி செலுத்த வேண்டும், ‘‘மருத்துவப் பயனாளி’’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவேண்டும் என்று அரசு ஆணையாகவே மாற்றிவிட்டார். ‘‘நோயாளி, நோயாளி’’ என்று சொல்லும்போதே, அந்த வார்த்தையைக் கேட்கும்போதே சற்று சஞ்சலம் ஏற்படும்.

ஒரு மொழியினுடைய தத்துவமே, அதைக் கேட்கும்போது ஏற்படுகிற விழிப்புணர்வு, போராட்டக் குணம், சமத்துவ உணர்வு – இவையெல்லாம் மிக முக்கியம். மொழிக்கு அதுதான் சிறப்பு.

நோயாளியா, இல்லையா என்று தெரிந்து கொள்வ தற்காகத்தான் மருத்துவமனைக்குப் பல நேரங்களில் செல்லுகின்றோம். நோயாளியாக ஆன பிறகுதான் மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என்கின்ற அவசியம் ஒன்றும் இல்லையே!

மருத்துவமனைக்குச் செல்லுகின்றவர்களிடம், எங்கே செல்லுகிறீர்கள்? என்று கேட்டால், ‘‘நான், செக்கப்புக்காகச் (Checkup) செல்லுகிறேன்’’ என்று சொல்வார்கள்.

அவர் எப்படி நோயாளி ஆவார்?  நோயிலிருந்து நான் விடுபட்டு, அந்த நிலையை நான் தொடர்ந்து பின்பற்றுகின்றேனோ? என்பதுதான் இதில் முக்கியம்.

எந்த வகையில் பொருத்தமானதாகும்?

‘நோயாளிகள் எல்லாம் இந்தப் பக்கம் வாருங்கள்; இ.சி.ஜி. எடுக்கவேண்டும் என்பவர்கள் இங்கே வாருங்கள்’ என்று சொல்லி, நோயாளிகள் பிரிவு என்று அங்கே பலகை வைத்திருப்பது எந்த வகையில் பொருத்தமானதாகும்?

அய்யாவினுடைய பெருமை என்னவென்பதை இந்த இடத்தில்தான் நீங்கள் கவனிக்க வேண்டும்.

மொழிக்காக அல்ல; பண்பாடு மிக முக்கியம். அய்யாவினுடைய தலைமைச் சீடராக இருக்கக்கூடிய அண்ணா, மிகச் சிறப்பாகச் சொன்னார்.

அண்ணா மிக அழகாக
வரையறை செய்தார்!

தமிழர்கள் என்ற ஒரு வார்த்தைபற்றிச் சொல்லும் போது, எல்லோரும் இப்போது தமிழர்கள். தமிழ் மொழி பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள்தான்; தமிழ்நாட்டில் இருக்கிறவர்கள் எல்லாம் தமிழர்கள்தான் என்று சொல்வ தில்  அண்ணா மிக அழகாக வரையறை செய்தார்.

ஒரே வார்த்தையில் சொன்னார், ‘‘மொழியால், வழியால், விழியால் தமிழர்’’  போக்கு, நோக்கு எல்லாமேதான் முக்கியம். அந்த வகையில், மொழியைக் காப்பாற்றுவதற்கும், மொழி உரிமைக்காகவும் நடந்த போராட்டங்களைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சொத்து நமக்கு இருக்கிறது என்று சொன்னால், அந்தச் சொத்தினுடைய மதிப்பை எப்போது ஒருவர் உணர முடியும்? அந்தச் சொத்தை எப்படி நாம் பெற்றோம் அல்லது அதற்கு எப்படிப்பட்ட ஆபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. அதிலிருந்து அதை எப்படிக் காப்பாற்றுவது? அந்தச் சொத்து எவ்வளவு முக்கியமானது? என்பதைப் பாதுகாக்கக் கூடியவர்கள், பயன்பெறக்கூடியவர்கள் முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். அதுதான் – அந்தச் சொத்துதான் மொழிப் போராட்டம்! மொழிப் போராட்டம், மொழியி னுடைய சிறப்புகள் என்று சொல்லும்போது, தந்தை பெரியார் அவர்களுடைய பார்வையும், கருத்தோட்டமும் மிக ஆழமானவை.

ராமன் வேண்டுமானால் அரசியலுக்குப் பயன்படலாமே தவிர,
ராமன் காலத்து வில்லும், வேலும் பயன்படாது!

மொழி என்பது ஒரு போர்க்கருவியாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார். ராமன் காலத்துப் போர்க் கருவி, இன்றைக்குப் பாகிஸ்தானோடு போராடுவதற்குப் பயன்படாது. ராமன் வேண்டுமானால் அரசியலுக்குப் பயன்படலாமே தவிர, ராமன் காலத்து வில்லும், வேலும் பயன்படாது. வில்லையும், வேலையும் ஓட்டு வாங்குவதற்காகக் காட்டலாமே தவிர, மற்ற எதற்கும் பயன்படாது.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *