சென்னை, பிப்.4– 38ஆவது கேரள மாநில அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மன்றம் முதல் பரிசை பெற்றது.
அறிவியல் கண்காட்சி
கேரளாவில் 38ஆவது மாநில அறிவியல் மாநாடு எர்ணாகுளம் செயின்ட் ஆல்பர்ட் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் உயர்மட்ட வல்லுநர் குழு விவாதத்தில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலர் எஸ்.வின்சென்ட் பங்கேற்று, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகிய துறைகளில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்னோடி முயற்சிகள், சாதனைகள் குறித்து விளக்கினார்.
மேலும், அறிவியல் மன்றத்தின் திட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுடன் செயல் படுத்த ஏதுவான கூட்டு முயற்சித் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். இம்மாநாட்டின் ஒரு பகுதியாக கேரள மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தால் நடத்தப்பட்ட தேசிய அறிவியல் கண்காட்சியில், “மற்ற மாநில மன்றங்கள்” பிரிவின் கீழ் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் முதல் பரிசை பெற்றது.
இந்த விருது, மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர் மற்றும் அடித்தள புதுமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பயனளிக்கும் வகையில் செயல் படுத்தப்படும் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மன்றத்தின் விரிவான, ஒருங்கிணைந்த மற்றும் தாக்கமிக்க பல்துறைத் திட்டங்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப் பட்டுள்ளது.
மேலும் அறிவியல் கண் காட்சியில் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் திட்டங்கள் மற்றும் புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகள், கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் சமூகங்களால் தயாரிக்கப்பட்ட அழகான ஆபரணங்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் செயல்பாடுகள், மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டங்கள், காப்புரிமை தகவல் மய்யம், அறிவுசார் சொத்து வசதி மய்யம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற வசதி மய்யம் ஆகியவற்றின் சேவைகள் விரிவாக காட்சிப் படுத்தப்பட்டன.
இதுகுறித்து மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்ற உறுப்பினர் செயலர் வின்சென்ட் கூறுகையில், “இந்த தேசிய அளவிலான அங்கீகாரம், தமிழ்நாடு முழுவதும் அறிவியல், தொழில்நுட்பம், புதுமை, சமூக உள்ளடக்கம் மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சியை மேம்படுத்துவதில் அறிவியல் மன்றம் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை உறுதிபடுத்துகிறது. அதோடு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைச் சூழலில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது” என்றார்.
