சென்னை, பிப்.3- திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவியின் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவைத் தடுக்க கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் அதிநவீன நரம்பியல் சிகிச்சை செய்து மாணவியின் உயிரைக் காப்பாற்றினர். அந்த மருத்துவப் பயனாளியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (2.2.2026) பார்த்து நலம் விசாரித்தார். மருத்துவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
கலைஞர் நூற்றாண்டு
உயர் சிறப்பு மருத்துவமனை
உயர் சிறப்பு மருத்துவமனை
முதலமைச்சர் அவர்களால் கடந்த 15.06.2023 அன்று திறந்து வைக் கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளை காட்டிலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளை காட்டிலும் அதிநவீன மருத்துவ உபகரணங்களை பெற்றிருக்கின்றது. உயர்சிறப்பு மருத்துவமனை என்கின்ற காரணத்தினால் இந்த மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளில் இல்லாத அளவிற்கான உயர்சிறப்பு மருத்துவக் கருவிகள் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இங்கு இடம்பெறச் செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக ஆட்டோ எம்ஆர்அய், டபுள் பலூன் எண்டோஸ்கோபி, ஓல்மியம் லேசர், அய்பெக், அய்பிரிடு கேத்லேப், வெட்ரிகுள் லேப் போன்ற அதிநவீன வசதிகள் இம்மருத்துவமனையில் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இடம் பெற்றிருக்கும் இதுபோன்ற அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இந்த மருத்துவமனையில் மக்களின் பயன்பாட்டிற்கு தொடர்ச்சியாக சேவையாற்றி வருகிறது.
அந்தவகையில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 ஆம் ஆண்டு பயின்று வந்த மாணவி சின்பனிசிறீ (வயது 21). திடீரென்று கடுமையான தலைவலியும், கண்பார்வை மங்கலாக ஏற்பட்டு கண்பார்வை திறன் குறைந்து தன்னுடைய நண்பர்களை கூட அடையாளம் கண்டுபிடிக்காத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு மூளையில் ஸ்கேன் செய்து பார்த்தது. அவரது குடும்பத்தார் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த பிறகு, அவரை மீண்டும் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி யிருக்கிறார்கள்.
இரத்தக் கசிவு
இந்த நிலையில் திருச்சி மருத்துவக்கல்லூரியில் உள்ள மருத்துவர்களும், இதற்குரிய சிறப்பு மருத்துவ உபகரணங்கள் சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் இருக்கிறது என்று சொல்லி, இம்மருத்துவமனையில் அவரை சேர்த்திருக்கிறார்கள். இவருக்கு டி.எஸ்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டு இரத்தநாள சிதைவு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உடனடியாக ஆனிக்ஸ் என்னும் நவீன திரவம் மூலம் இரத்தக் கசிவை தடுக்கும் எம்போலைசேஷன் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
மண்டை ஓடு அறுவை சிகிச்சை
இந்த சிகிச்சைக்குப் பிறகு இம்மாணவிக்கு திடீரென்று வலிப்பு மற்றும் மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவசர ஸ்கேன் பரிசோதனையில் மூளையின் பிற பகுதிகளிலும் இரத்தக் கசிவு இருப்பது தெரிந்து காலதாமதம் இல்லாமல் அவருக்கு மண்டை ஓடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரத்த உறைவு அகற்றப்பட்டது. ஏறத்தாழ 2.78 அடி அளவில் மண்டை ஓடு அகற்றி அவருக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவர் 21 நாள் வெண்டிலேட்டரில் இருந்தார்.
இப்படி பல்வேறு வகைகளில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி தற்போது முழு சுய நினைவுடன் மற்றவர்களை பார்க்கும் திறனும், அடையாளம் கண்டு அவர்களுடன் பேசும் திறனையும் பெற்றிருக்கிறார். இது மிகப் பெரிய சாதனை. மருத்துவத்துறை வரலாற்றில் இந்த சாதனை என்பது சாதாரணமல்ல. இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் செய்ய வேண்டும் என்றால் ரூ.15 இலட்சத்திற்கும் மேல் ஆகும்.
அந்த வகையில் உடனடியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இந்த சிகிச்சையை முற்றிலும் இலவசமாக செய்து அந்த மாணவியின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இந்த சாதனையை இம்மருத்துவமனையில் இருக்கின்ற மருத்துவக் குழுவினர் மிகச் சிறப்பாக செய்து மருத்துவத்துறை சாதனையில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள். இந்தச் சிகிச்சைக்கு காரணமான மருத்து வர்களையும், செவிலியர்களையும் பாராட்டுகிறேன்.
அந்த வகையில் இந்த மருத்துவ மனையின் சேவை என்பது மிகப் பெரிய அளவில் இன்றைக்கு பயன் தந்துக் கொண்டிருக்கிறது. இந்த மருத்துவ மனையில் இதுநாள்வரை 7,85,838 மருத்துவ பயனாளர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள் .
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
